பேராசிரியரின் அசல் சான்றிதழ்களை உடனே ஒப்படையுங்கள்.. விருது வழக்கில் தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: விருது கோரி விண்ணப்பித்த பேராசிரியரின் அசல் சான்றிதழ்களை எட்டு வாரங்களில் திரும்ப ஒப்படைக்காவிட்டால் 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என சென்னை பல்கலைக்கழகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் பயோகெமிஸ்ட்ரி துறையில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சுப்பிரமணியன். 2016-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு மூத்த விஞ்ஞானிக்கான விருதுக்கு கடந்த 2017-ம் ஆண்டு அவர் விண்ணப்பித்திருந்தார். தமக்கு விருது வழங்கப்படாத நிலையில், தனது அசல் சான்றிதழ்களை திரும்ப அளிக்கக்கோரி சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், பல்கலைக்கழக தரப்பில் இருந்து அவருக்கு எந்த பதிலும் வரவில்லை.

இதையடுத்து, தனது அசல் சான்றிதழ்களை திரும்ப அளிக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது, நீதிபதி ஆர். சுப்பிரமணியன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில், மனுதாரரின் அசல் சான்றிதழ்களை பதிவாளர் அலுவலகம் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "நீதிமன்ற உத்தரவின்படி மனுதாரரின் விண்ணப்பம் மற்றும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அசல் சான்றிதழ்கள் மட்டும் தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என பதிவாளர் கூறுவதை ஏற்க முடியாது. மனுதாரரின் அசல் சான்றிதழ்களை எட்டு வாரங்களில் சென்னை பல்கலைக்கழகம் ஒப்படைக்க வேண்டும். தவறும்பட்சத்தில், மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அசல் சான்றிதழ்களை காணாமல் போயிருந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதி, சான்றிதழ் காணமல் போனதற்கு காரணமானவர்களிடம் இருந்து மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டிய 10 லட்சம் ரூபாயை வசூலிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, மனுதாரருக்கு வழக்கு செலவாக ரூ.10 ஆயிரம் வழங்கவும் சென்னை பல்கலைக்கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications