அசையும் "அச்சாணி".. பழனிசாமி? அன்வர் ராஜா?.. ரிஸ்க் எடுக்கும் எடப்பாடி.. ப்ளானே இதான்.. அதிரும் பாஜக
அன்வர்ராஜா, கேசி பழனிசாமி போன்றோரை தன்பக்கம் கொண்டு வர எடப்பாடி முயல்கிறாராம்
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் முடிவு என்ன? கூட்டணி தொடர்பாக முக்கியமாக பாஜக விஷயத்தில் என்ன நிலைப்பாட்டில் உள்ளார் என்பது உறுதியாக தெரியாத நிலையில், அதுகுறித்த அனுமானங்களும், யூகங்களும் றெக்கை கட்டி பறக்கின்றன.. அதேசமயம், சில விஷயத்தில் கறார்தன்மையை கடைப்பிடிக்க போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அதிமுக விவகாரம் முற்றிவிட்ட நிலையில், ஒருமித்த உடன்பாடு ஏற்படவில்லை.. ஓபிஎஸ் தன் ஆட்டத்தை துவங்கி உள்ளார்.. மற்றொருபக்கம், "நாற்பதும் நமக்கே" என்ற ஜெயலலிதாவின் கனவை எடப்பாடி பழனிசாமி நிச்சயம் நிறைவேற்றுவார் என்று தம்பிதுரை போன்றோர் சொல்லி வருகிறார்கள்.
பாஜக - திமுக கூட்டணி ஏற்படும் என்ற சிவி சண்முகம் பேசியிருந்தது, 4 நாட்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை கிளப்பியது.. இதற்கு பின்னணி என்ன? திடீரென சிவி சண்முகம் பேசுகிறார் என்றால், அதற்கு பலமாகவும் தூண்டுகோலாகவும் இருப்பது யார்? என்ற கேள்வியும் அப்போதே எழுந்தது.

கணை 1
பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன், சிவி சண்முகம் பேச்சுக்கு அதிருப்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.. யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற சிவி சண்முகத்தின் அறிவுரை, ஆலோசனை பாஜகவுக்கு தேவையில்லை என்று நாராயணன் கூறியிருந்தார்.. காவி துண்டு போட்டவன் பாஜக தொண்டன் என்று சி.வி.சண்முகம் பேசியது அவரது பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது என்றும் விமர்சித்திருந்தார்... ஆனால், வெறும் கண்டனத்துடன் இவ்விவகாரம் முடியவில்லை என்கிறார்கள்.. டெல்லி வரை சிவி சண்முகம் பேசியதை தமிழக பாஜக கொண்டுபோய்விட்டதாக சொல்கிறார்கள்.

கணை 2
கடந்த முறை சட்டமன்ற தேர்தலின்போதே, கூட்டணிக்கு தலைமை யார் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டிருந்தது.. அதற்கு எடப்பாடி, தேர்தல் நெருங்கும்போதுதான் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.. அதேபோல், முதல்வர் வேட்பாளர் என்று, பாஜக தரப்பில் செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு, பாஜக மேலிடம் தான் அதை பற்றி முடிவு செய்யும் என்று எல்.முருகன் முதல் வானதி சீனிவாசன் வரை பதிலளித்திருந்தனர்.. பொதுவாக மக்களவை தேர்தலின்போதுதான், மேலிட பாஜக, கூட்டணி தலைமை, சீட் விவகாரங்களில் முடிவு செய்வது வழக்கம் என்றாலும், இங்கு நடக்கும் சட்டசபை தேர்தலிலும் தன் கன்ட்ரோலிலேயே கூட்டணியை வைத்திருக்க நினைத்தது.. இதைதான் எடப்பாடி பழனிசாமி தரப்பு விரும்பவில்லை என்கிறார்கள்.

கணை 3
சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே, அதாவது எம்பி தேர்தலின்போதே, பாஜகவை கழட்டிவிட்டு தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி யோசித்திருந்தாராம்.. இதற்கு காரணம், அப்போதுதான், குடியுரிமை சட்டம், சிஏஏ போன்ற விவகாரங்கள் தலைதூக்கி மக்கள் மனதில் குறிப்பாக சிறுபான்மையினர் மத்தியில் அதிருப்தி அலை படர்ந்திருந்தது.. எனவே, பாஜகவை தவிர்த்து தேர்தலை சந்திக்கவே எடப்பாடி முடிவு செய்திருந்தபோது, ஓபிஎஸ் அப்போது உள்ளே புகுந்து, ஆட்டத்தை கலைத்துவிட்டதுடன், பாஜகவுடன் தான் கூட்டணி என்பதையும் எடப்பாடியை கேட்காமலேயே அறிவித்து விட்டதாக தெரிகிறது. இந்த கோபமும் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கத்தான் செய்தது.

அன்வர் ராஜா
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக, தோல்வியை சந்திக்க நேர்ந்தது என்று சிவி சண்முகம் அப்போதே ஆவேசமாக ஒரு பேட்டி தந்திருந்தார்.. சிவி சண்முகம் இப்படி பேசியது, மிகுந்த பரபரப்பாக அப்போது பார்க்கப்பட்டது.. டெல்லி மேலிடமும் இந்த பேச்சை கவனித்தது. ஆனால், சிவி சண்முகம் பேசியது, அவரது சொந்த கருத்து என்று ஓபிஎஸ் முந்திக் கொண்டுவந்து, இந்த விஷயத்தை ஆஃப் செய்து, மேலிட பாஜகவையும் கூல் செய்துவிட்டார்.. இந்த கோபமும் எடப்பாடி பழனிசாமிக்கு அப்போது இருக்கத்தான் செய்தது.

தம்பிதுரை
ஓபிஎஸ் உடன் இருக்கும்வரை பாஜகவை கழட்டிவிட முடியாது என்பதை உணர்ந்துதான், ஓபிஎஸ்ஸை வெளியேற்றும் சூழல் ஏற்பட்டதாக தெரிகிறது.. தன் ஆதரவாளரான தருமனுக்கு சீட் தந்ததையடுத்து, ஓபிஎஸ்ஸை வெளியேற்ற மூவ்கள் நடந்ததாக சொல்லப்படுகிறது.. எவ்வளவுதான் நிர்வாகிகள் பலத்தை 95 சதவீதம் பெற்றிருந்தாலும், குஜராத் பதவியேற்பு நிகழ்வுவரை, ஓபிஎஸ்ஸுக்கான முக்கியத்துவத்தை பாஜக மேலிடம் தந்து வருவதை அறிந்துதான், எடப்பாடி பழனிசாமி தரப்பு மேலும் அப்செட் ஆனதாகவும், இந்த நிகழ்வுக்கு பிறகுதான், சிவி சண்முகத்தின் அந்த திமுக - பாஜக கூட்டணி பேச்சு வெடித்து கிளம்பியதாகவும் கூறப்படுகிறது.

செங்கோட்டையன்
சுருக்கமாக சொல்லப்போனால், கடந்த 3 வருட காலமாகவே பாஜக கூட்டணியை விரும்பாமல், மென்று விழுங்கி கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இப்போது ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்க்கும் மனநிலைமைக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது.. ஜெயக்குமார், சிவி சண்முகம், கேபி முனுசாமி, தம்பிதுரை, செங்கோட்டையன் போன்றோர் எல்லாமே ஓரணியில் உறுதியாக நின்றுள்ளதாக தெரிகிறது.. இரட்டை இலை இல்லாவிட்டாலும் கூட, அதை சமாளித்துவிட வேண்டும் என்ற முடிவுக்கும் வந்துள்ளார்களாம்.. ஒருவேளை, தனக்கு நெருக்கமான 5 மாஜிக்களுக்கு, நெருக்கடிகளை தந்து, பாஜக மேலிடம் வளைத்து தன்பக்கம் இழுத்தாலோ அதையும் எதிர்கொள்ள எடப்பாடி தயாராகிவிட்டதாகவே சொல்கிறார்கள்.

அன்வர்ராஜா
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஓபிஎஸ் அல்லாத கூட்டணிக்கு பாஜக முன்வந்தால் அதை ஏற்க தயார் அல்லது பாஜக இல்லாமலேயே தேர்தலை சந்திக்கவும் தயார் என்பதே தற்சமயம் எடப்பாடி தரப்பின் முடிவாக உள்ளது.. இதன்மூலம் பாஜக எதிர்ப்பு ஓட்டுக்களை அறுவடை செய்ய முடியும், இதன்மூலம் திமுகவுக்கு செல்லும் பாஜக அதிருப்தி ஓட்டுக்களை தன்பக்கம் திருப்ப முடியும் என்பதே மாஸ்டர் பிளானாக உள்ளது.. அதிருப்தியில் உள்ள அன்வர்ராஜா, கேசி பழனிசாமி, போன்ற சீனியர்களையும் அழைத்து கொண்டு, கட்சியை பலப்படுத்தும் முயற்சியிலும் எடப்பாடி இறங்க போவதாக தெரிகிறது. ஒரேடியாக பாஜகவை எதிர்த்து கொண்டு எடப்பாடியால் தேர்தலை சந்திக்க முடியுமா? இதற்கு பாஜகவின் ரியாக்ஷன்கள் என்னவாக இருக்கும்? தெரியவில்லை.. பார்ப்போம்..!!

ரூட் மாறுதே
இதனிடையே, இன்னொரு கூட்டணி ஒன்று கசிந்து வருகிறது.. "பாஜக - திமுகவுடன் கூட்டணி" என்று சிவி சண்முகம் கொளுத்திப்போடவும், கூட்டணி கணக்கு மாறலாம் என்கிறார்கள்.. கமல் காங்கிரஸ் பக்கம் ஆதரவு தந்து டெல்லி செல்ல உள்ளார்.. அழகிரியும் அதை வரவேற்றுள்ளார்.. எடப்பாடியின் காங்கிரஸ் நகர்வும் திரைமறைவில் நடந்து வருவதாக சொல்கிறார்கள்.. ஆக, எடப்பாடி + பாமக + காங்கிரஸ் + கமல் + கம்யூனிஸ்ட்கள் என்றும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாம். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.. அரசியலில் எதுவுமே மாறும் என்பதால், எதையுமே உறுதியாக சொல்ல முடியாத சூழலும் உள்ளது.. அந்தவகையில், இந்த கூட்டணி அனுமானமும் வியப்பை தந்து வருகிறது.. என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications