"டமார்".. காளிமுத்து பேசாததா.. நாஞ்சில் மனோகரன் கலைஞரை சொல்லாததா.. பாஜக ப்ளான்?.. குபீர் குபேந்திரன்
எடப்பாடி பழனிசாமியின் பேட்டி குறித்து பத்திரிகையார் குபேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸை கட்சியில் சேர்த்துக் கொள்ள கடைசிவரை வாய்ப்பு இருக்காது.. ஓபிஎஸ்ஸுக்கு கட்சியில் இருந்து வெளியே செல்லவே நிறைய வாய்ப்பு உள்ளது" என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, சென்னைக்கு வரும்போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை தாங்கள் சந்திக்க வேண்டிய அவசியமில்லை.. பாஜக ஒரு தேசியக் கட்சி, அதிமுக என்பது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி.
மோடி, அமித்ஷா கட்சி வேறு, எங்கள் கட்சி வேறு. பாஜக தேசியக் கட்சி. அதிமுக, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி. 31 ஆண்டுகாலம் தமிழகத்தை சிறப்பாக ஆண்ட கட்சி அதிமுக. இரண்டு கட்சிகளும் வேறு வேறு என்று கூறியுள்ளார். இந்த பேட்டி பல்வேறு அதிர்வலைகளை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.

குஷி சந்தோஷம்
ஒருவேளை எடப்பாடி பழனிசாமி பாஜகவை எதிர்க்க துணிந்துவிட்டாரா? அப்படியானால் தனித்து போட்டியிடவும் முடிவு செய்துவிடுவார்களா? என்ற எதிர்பார்ப்பும் தொண்டர்களிடம் எழுந்துள்ளது.. அதேசமயம், அமித்ஷாவையே இவ்வாறு பேசிவிட்டது, பாஜகவை ஏற்காத எடப்பாடி டீமுக்கு பெரும் குஷியை தந்துள்ளதாகவும் தெரிகிறது.. இந்நிலையில், எடப்பாடி பேச்சு குறித்து, மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் நம் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் தன்னுடைய அனுமானங்களையும், கருத்துக்களையும் வெளிப்படுத்தி உள்ளார்.. அதன் சுருக்கம்தான் இது:

தட்டில் சமம்
"எடப்பாடி பழனிசாமி பாஜகவை எதிர்ப்பதாக நான் பார்க்கவில்லை, அந்த பேட்டியை யதார்த்தமாகவே பார்க்கிறேன்.. அமித்ஷாவை ஏன் போய் சந்திக்கவில்லை என்று செய்தியாளர்கள் மாறி மாறி கேள்விகளை கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.. அந்த மாதிரி நேரத்தில் வழக்கமாக பல தலைவர்கள் என்ன செல்வார்கள் என்றால், "நேரமில்லை, வேற பணியில் இருந்தேன்" என்று சொல்லுவார்கள்.. எடப்பாடியும் அதை சொல்லியிருக்கலாம்.. ஆனால் எடப்பாடி நியாயமான காரணத்தை அன்று சொல்லி உள்ளார்.

62 எம்எல்ஏக்கள்
அமித்ஷா வேற ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறார்.. அதுவும் இல்லாமல், அவர் வரும்போதெல்லாம் நான் ஏன் சந்திக்க வேண்டும்? என்பது நியாயமான கேள்வியாகவே தெரிகிறது.. ஒருவேளை கோபத்தில் எடப்பாடி அப்படி சொல்லியிருக்கிறார் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணமாகத்தான் இருக்க முடியும்.. ஓபிஎஸ்ஸையும், தன்னையும் சமமாக கருதுகிறது பாஜக.. அதை எடப்பாடி விரும்பவில்லை.. அதாவது, வெறும் 4 எம்எல்ஏக்கள் மட்டுமே வைத்திருக்கிற ஓபிஎஸ்ஸையும், 62 எம்எல்ஏக்கள் வைத்திருக்கிற தன்னையும் ஒரே தட்டில் வைப்பதா? என்ற ஆதங்கமாக இருக்கலாம்..

தலை இலை
பிரதமர் வரும்போதும், வழியனுப்பும்போதும், ஓபிஎஸ்ஸையும் தன்னையும் அருகருகே நிற்க வைப்பது, இரு தரப்பிற்கும் தலா 5 பேருக்கு அப்பாயிண்ட்மென்ட் தருவது என இருவரையும் சமமாக கருதினால், தன் தரப்பு பதில் இதுவாகத்தான் இருக்கும் என்று சொல்ல எடப்பாடி நினைத்திருக்கலாம். இது ஒன்றை மட்டுமே வைத்து, பாஜகவை எதிர்க்க துணிந்துவிட்டாரா என்று எதையுமே இப்போதே கணிக்க முடியாது.. நாடாளுமன்ற தேர்தல் விரை இந்த பிரச்சனை நீடிக்கவே செய்யும்..

ஊசலாட்டம்
பாஜகவை விட்டு விலகி வந்தால் என்ன நடக்கும் என்பதும், எடப்பாடிக்கு உள்ளூர ஊசலாடிக் கொண்டிருக்கிறது.. ஒருவேளை பாஜகவை விட்டு விலகினால், தமிழகத்தின் மறுக்க முடியாத தலைவராகி நின்றுவிடுவார்.. அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தில்லை.. ஆனால் அதை செய்வாரா என்று தெரியவில்லை.. காரணம், அவருக்கு சின்னம் கிடைக்க வேண்டும், கட்சி பலமாக வேண்டும்.. ஆனால்,அவருக்கு குடைச்சல்கள் தரக்கூடிய இடத்தில்தான் பாஜக இப்பவும் உள்ளது.. தேர்தல் கமிஷன் என்ன செய்ய போகுதோ? சின்னம் கிடைக்காமலும் போகலாம்..

கருணாநிதி
ஒருவேளை, சின்னம் இல்லாமல் தேர்தலில் நின்று, தோல்வியையும் சந்தித்துவிட்டால், ஆகப்பெரிய தலைவராக இவராமல் பரிணமிக்க முடியவில்லை என்று சொல்லி, மற்றவர்கள் எல்லாம் அப்போது ஒன்று சேர்ந்து விடுவார்கள்.. அதனால், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற எடப்பாடி தயாராகவே இருப்பார்.. ஆனால், "அதிமுகவுக்கு நான்தான் தலைவர், ஓபிஎஸ்ஸோ, சசிகலாவோ, தினகரனோ கிடையாது.. இதை ஏற்றுக்கொண்டு என்னிடம் வந்து சேருங்கள்" என்ற ரூட்டிலேயே எடப்பாடி போவார்..

நாஞ்சில் மனோகரன்
எடப்பாடி வேண்டாம் என்று பாஜகவே ஒதுங்கி கொண்டால், அது சாமர்த்தியமான முடிவு.. தமிழகத்தில் அதிமுக இன்னும் பலப்பட வாய்ப்புள்ளது.. ஒருவேளை பாஜக, ஓபிஎஸ்ஸை இணைத்துக் கொள்ளும்படி தொடர்ந்து அழுத்தம் தந்தால், எடப்பாடியும் பாஜக தரப்புக்கு நிபந்தனைகள் ஏதாவது வைக்கலாம்.. "நான் வெற்றி பெற்று காட்டுகிறேன், ஓபிஎஸ் ஒன்றும் பெரிய தலைவர் கிடையாது, நிர்வாகிகள் யாரும் அவரிடம் இல்லை, வலிமையான தலைவர் நான்தான்" என்று நிபந்தனை போடுவார்.. பாஜக நிபந்தனை போட்டால், மாற்று நிபந்தனையை எடப்பாடியும் விதிப்பார்... மற்றபடி இவ்வளவு நடந்த பிறகும், ஓபிஎஸ்ஸை இணைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை..

காளிமுத்து
அதிமுகவிலும் சரி, திமுகவிலும் சரி, தலைவர்களை விமர்சித்தவர்கள் எத்தனையோ பேர், மறுபடியும் அந்த கட்சியில் இணைந்திருக்கிறார்கள்.. ஜெயலலிதாவை காளிமுத்து விமர்சித்தது போல், வேற யாரும் விமர்சித்ததேயில்லை.. ஆனால் அதே காளிமுத்து, ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக் கொண்டு, இந்த கட்சியிலேயே இருந்தார்.. நாஞ்சில் மனோகரனும் அப்படித்தான். கலைஞர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார்.. பிறகு, அதே நாஞ்சில் மனோகரன், கலைஞர் கருணாநிதியை தலைவராக ஏற்றுக் கொண்டார்..

டீல் ஓகே?
இங்கே அப்படி இல்லை.. எடப்பாடி தலைவர் பதவியையே கேட்கிறார்.. அதிமுகவுக்கு தன்னை தலைவராக ஏற்றுக் கொண்டு, ஓபிஎஸ், தேனி மாவட்ட செயலாளராகவே இருந்துவிட்டால் எடப்பாடிக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது.. தலைமை பதவிக்கு ஓபிஎஸ் பங்கீடு கேட்கும்போதுதான், எடப்பாடி அதை ஏற்கவில்லை.. அதனால், ஓபிஎஸ்ஸை கட்சியில் சேர்த்துக் கொள்ள கடைசிவரை வாய்ப்பு இருக்காது.. ஓபிஎஸ்ஸுக்கு கட்சியில் இருந்து வெளியே செல்லவே நிறைய வாய்ப்பு உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications