எடப்பாடி டீம் செய்த தவறு.. கடைசி நேரத்தில் பாயிண்டை எடுத்த ரஞ்சித்குமார்.. வந்ததே பெரிய சிக்கல்!
சென்னை : எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக மேற்கொண்டு வந்த நடவடிக்கையே, அவரது தரப்புக்கு இப்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவது பற்றி ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
உடனே, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எடப்பாடி பழனிசாமியிடம், நீங்கள் தானே இப்போது பொறுப்பில் இருக்கிறீர்கள், உடனே ஏன் தேர்தலை நடத்த அவசரம் காட்டுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினர்.
இதனால், ஷாக் ஆன எடப்பாடி பழனிசாமி தரப்பு,இந்த வழக்கு முடிந்து தீர்ப்பு வரும் வரை பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் என உத்தரவாதம் அளித்தது. இதனால், அடுத்த 50 நாட்களுக்கு தேர்தல் தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ முயற்சிகளிலும் ஈபிஎஸ் தரப்பால் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முறையீட்டுக்கு மேல் முறையீடு
ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என உத்தரவு பிறப்பித்தார். அதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல் முறையீடு செய்த நிலையில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது என இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

ரஞ்சித்குமார் வாதம்
இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் வாதிட்டார். இவர் ஜெயலலிதாவுக்காக சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜரானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவின் அனைத்து பதவிகளையும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர்கள் தான் நியமிக்க முடியும். அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது கட்சியின் விதிமுறைகளுக்கு எதிரானது, கட்சிக்கு தேவையான அனைத்தையும் செய்ய தயாராக இருந்த நிலையில் ஓபிஎஸ்ஸை வேண்டாம் என்று வெளியே தள்ளி தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளனர் என வாதங்களை முன்வைத்தார்.

சரியான நேரத்தில்
ஓபிஎஸ் தரப்பின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதாகக் கூறப்படுவதால், வாதங்களைக் கேட்டபிறகே முடிவெடுக்க முடியும், தசரா விடுமுறைக்குப் பிறகு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றனர். அப்போதுதான் வழக்கிற்கு வெளியே இருந்து முக்கியமான விஷயத்தை எடுத்து வைத்தார் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் ரஞ்சித்குமார்.

ஓபிஎஸ் பாதிக்கப்படுவார்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தற்போது பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். அப்படி வழக்கு நிலுவையில் இருக்கும்போதே தேர்தலை நடத்தினால் எங்கள் தரப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்று ரஞ்சித்குமார் தெரிவித்தார். இதற்கு ஈபிஎஸ் தரப்பு பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கூடாது என்றும் அதுபோன்று செய்தால் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற வாதத்தை முன்வைத்தது.

தேர்தல் நடத்த முடியாது
இதையடுத்தே, இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும்போதே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு அவசரம் என்ன? என நீதிபதிகள் ஈபிஎஸ் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். வழக்கு முடியும் வரை அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தக்கூடாது என்றனர். வழக்கு தசரா விடுமுறைக்குப் பிறகு நவம்பர் 21ஆம் தேதி விசாரணைக்கு வரும் எனக் கூறி ஒத்திவைத்தனர். இதனால், எடப்பாடி பழனிசாமியின் திட்டத்தில் மண் விழுந்துள்ளது.

50 நாட்களுக்கு நோ சான்ஸ்
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தும் திட்டத்தோடு, காய்நகர்த்தி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, இன்றைய உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இனி எடப்பாடி பழனிசாமியால் 50 நாட்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் பற்றிய எந்த அதிகாரப்பூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. அவசர அவசரமாக செய்து வந்த முயற்சிகளை ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் புட்டுப்புட்டு வைத்ததால், ஈபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications