அனல் காற்று வீசும்... 5 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் - வானிலை அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. பிற்பகல் 12 மணி முதல் 4 மணி வரைக்கும் வெயில் கொளுத்தும் என்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. சென்னை மீனம்பாக்கம், வேலூரில் நேற்று 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

திருத்தணி, திருச்சியில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், மதுரை விமானநிலையம், கரூர் பரமத்தியில் 104 டிகிரி வெப்பநிலையும் பதிவானது. சேலத்தில் 103 டிகிரி வெப்பநிலையும், நாமக்கல், தருமபுரியில் 102 டிகிரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பு குறித்து கூறியுள்ள வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், வடமேற்கு திசையிலிருந்து தமிழகப் பகுதியை நோக்கி தரைக்காற்று வீசத்தொடங்கியுள்ளதால் வெப்பநிலை அதிகரித்து வருவதாக கூறினார். இன்னும் நான்கு முதல் 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் புவியரசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூா், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூா், அரியலூா், மயிலாடுதுறை ஆகிய 20 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 3 டிகிரியில் இருந்து 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இதுபோல, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெப்பநிலை உயரும்
பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணிவரை அனல் காற்று வீசத் தொடங்கும். எனவே தேர்தல் பிரசாரம் செய்யும் வேட்பாளர்களும் கூட்டத்திற்கு செல்பவர்களும் பிற்பகல் 12 மணி முதல் 4 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும் என வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.