விதவை மருமகள் தனது மாமனாரிடம் உரிமை கோர முடியுமா? ஐகோர்ட் தீர்ப்பின் முழு விவரம்
சென்னை: மனைவியைப் பராமரிக்க வேண்டிய கணவனின் கடமை, அவர் இறந்த பிறகும் தொடர்கிறது. ஒரு விதவை பெண் தனது மாமனாரிடம் பராமரிப்புத் தொகை கோர சட்டத்தில் இடமுண்டு (HAMA பிரிவு 19). அப்படியிருக்கும்போது, உயிருடன் இருக்கும் கணவர் தனது மனைவியைப் பராமரிக்காமல், அவர் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதை ஏற்க முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பினை விரிவாக பார்ப்போம்.
இந்த வழக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கணவன் மற்றும் மனைவிக்கு இடையிலான குடும்பத் தகராறில் இருந்து தொடங்குகிறது. மனைவி தனக்குப் பராமரிப்புத் தொகை வழங்கக் கோரி உத்தரப்பிரதேசத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், தான் ஒரு இல்லத்தரசி என்றும், தனக்கு வருமானம் ஏதும் இல்லை என்றும் அவர் குடும்ப நல நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

மனைவி மீது வழக்கு
ஆனால், இதை எதிர்த்த கணவர், தன் மனைவி நீதிமன்றத்தில் பொய் சொல்லியிருப்பதாகக் கூறி, அவர் மீது 'பெர்ஜுரி' ( நீதிமன்றத்தில் பொய் சாட்சியம் அளித்தல்) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை குடும்ப நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்தத் தள்ளுபடி உத்தரவை எதிர்த்து, கணவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
கணவர் தரப்பு வாதம்
இந்த மேல்முறையீட்டு வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி அரிந்தம் சின்ஹா, நீதிபதி சத்ய வீர் சிங் ஆகியோர் அடங்கிய விசாரித்தது. இதில் கணவர் தரப்பு வாதிடுகையில், என் மனைவி ஒரு வேலைக்குச் செல்லும் பெண், ஆனால் அவர் தன்னை ஒரு இல்லத்தரசி என்று காட்டி நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்துகிறார். மனைவியின் பெயரில் வங்கியில் ₹20 லட்சத்திற்கும் மேல் நிலையான வைப்பு நிதி உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் 'ரஜினிஷ் vs நேஹா' வழிகாட்டுதலின்படி, சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யும்போது அவர் இந்த வைப்பு நிதி விவரங்களை மறைத்துவிட்டார். எனவே, உண்மையை மறைத்து பொய் சொன்னதற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும்" என்று வாதிட்டார்.
மனைவி தரப்பு விளக்கம்
இதையடுத்து மனைவி தரப்பு வாதிடுகையில், அந்த 20 லட்சம் வைப்பு நிதி என்னுடைய தந்தை கொடுத்தது. அந்தப் பணத்தில் பெரும் பகுதியை நான் ஏற்கனவே எடுத்து செலவு செய்துவிட்டார் (தற்போது சுமார் ₹4 லட்சம் மட்டுமே உள்ளது). எனக்கு இப்போது எந்த வேலை இல்லை என்று வாதிட்டார்.
பராமரிப்பு தொகை
இதையடுத்து இந்த வழக்கை ஆய்வு செய்த நீதிபதி அரிந்தம் சின்ஹா, நீதிபதி சத்ய வீர் சிங் ஆகியோர் சில முக்கியமான சட்டக் கருத்துக்களை முன்வைத்தனர். அவற்றை பார்ப்போம். மனைவி தன்னிடம் இருந்த வைப்பு நிதியை எடுத்துப் பயன்படுத்தியிருப்பதே, அவருக்குப் பராமரிப்புத் தொகை தேவைப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. கணவர் பணம் தராததால் தான் அவர் தனது தந்தையார் கொடுத்த சேமிப்பைச் செலவழித்திருக்கிறார்
ஆதாரங்கள் இல்லை
மனைவி வேலை செய்கிறார் என்று கணவர் கூறுகிறார், ஆனால் அதற்கான எந்தவொரு ஆவணத்தையும் (சம்பளச் சீட்டு அல்லது பணி நியமனக் கடிதம்) அவர் சமர்ப்பிக்கவில்லை. "நான் வேலை செய்யவில்லை" என்று ஒருவர் கூறும்போது, "இல்லை, நான் வேலை செய்யவில்லை" என்று அதை எதிர்மறையாக நிரூபிக்கச் சொல்லி மனைவியை வற்புறுத்த முடியாது. அவர் வேலை செய்கிறார் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு கணவருக்கே உண்டு.
பொய் சொன்னதாக கருத முடியாது
ஒரு தகவலைச் சொல்லாமல் விடுவது என்பது வேறு, ஒரு தவறான தகவலைக் கொடுப்பது என்பது வேறு. இந்த வழக்கில் மனைவி தனது நிதி நிலையை முழுமையாகச் சொல்லவில்லை என்பதால் மட்டுமே அவர் பொய் சொன்னதாகக் கருத முடியாது என்று கூறியதுடன் நீதிபதிகள் கணவரின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டு, ஒரு மிக முக்கியமான சட்டக் கருத்தை தீர்ப்பில் கூறினார்கள். "மனைவியைப் பராமரிக்க வேண்டிய கணவனின் கடமை, அவர் இறந்த பிறகும் தொடர்கிறது. ஒரு விதவை பெண் தனது மாமனாரிடம் பராமரிப்புத் தொகை கோர சட்டத்தில் இடமுண்டு (HAMA பிரிவு 19). அப்படியிருக்கும்போது, உயிருடன் இருக்கும் கணவர் தனது மனைவியைப் பராமரிக்காமல், அவர் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதை ஏற்க முடியாது." என்று நீதிபதிகள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications