உச்சக்கட்ட ஜாதிவெறி.. செங்கல்பட்டில் குலத்தொழில் செய்யாததால் ஊரைவிட்டு ஒதுக்கி வீட்டை எரித்த கொடூரம்
குலத் தொழில் செய்யாததால் குடும்பத்தையே ஊரை விட்டு கிராம மக்கள் ஒதுக்கிய நிலையில், அவரது வீட்டையும் மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு: கூவத்தூர் அருகே குலத் தொழிலான சலவைத் தொழிலை செய்யாத காரணத்தால் ஒரு குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராம மக்கள், கோயில்கள் பொதுப்பாதையில் செல்லவிடாமல் தடுத்த நிலையில் அவர்கள் வசித்த வீட்டையும் மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூரை அடுத்து இருக்கிறது கானத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் மூன்று தலைமுறையாக சலவைத் தொழில் செய்து வரும் மிகவும் பின் தங்கிய வகுப்பை சேர்ந்த நந்தகுமார் என்பவரின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மனைவி சுலோச்சனா, மகன் நிர்மல் மற்றும் அவரது மகள் ஆகியோருடன் குடும்பமாக வசித்து வந்த நந்தகுமார், கூவத்தூரிலேயே தனியாக சலவை நிலையம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.

குலத்தொழில் செய்ய வற்புறுத்தல்
இந்த நிலையில் அவரது சொந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் நந்தகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் குலத் தொழில் செய்யாமல் ஏன் வேறு இடத்தில் தொழில் செய்து வருகிறீர்கள் என்று கேட்டு குலத் தொழிலையே செய்யுமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு நந்தகுமார் உடன்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட கொடூரம்
இதன் காரணமாக கிராம மக்கள் நந்தகுமாரையும் அவரது குடும்பத்தினரையும் ஊரைவிட்டு ஒதுக்கி இருக்கின்றனர். இதனால் கோயிலுக்கு நந்தகுமார் மற்றும் குடும்பத்தினர் செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதித்த கிராமவாசிகள், பொதுச் சாலைகளிலும் அவரை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

வீட்டுக்கு தீ வைப்பு
மேலும் நந்தகுமாரின் சாதியை சொல்லி தொடர்ந்து இழிவுபடுத்துவதை வாடிக்கையாக கொண்ட உயர்சாதியினர், அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இந்த நிலையில்தான் கடந்த 24 ஆம் தேதி இரவு வேலை முடிந்து நந்தகுமார் வீடு திரும்பி உள்ளார். வீட்டில் குடும்பத்துடன் நந்தகுமார் உறங்கிக்கொண்டு இருந்தபோது மர்ம நபர்கள் அவரது வீட்டுக்கு தீ வைத்து எரித்துள்ளனர்.

காவல்நிலையத்தில் புகார்
இதை கண்ட அண்டை வீட்டில் வசிக்கும் மக்கள் எரிந்துகொண்டிருந்த நந்தகுமாரின் வீட்டில் தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதனை அடுத்து கூவத்தூர் காவல்நிலையத்துக்கு குடும்பத்துடன் சென்ற நந்தகுமார், தனது வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது பற்றி புகார் அளித்து இருக்கிறார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியரிடம் புகார்
கிராம மக்கள் தொடர்ந்து சாதி ரீதியாக அச்சுறுத்தி வரும் நிலையில் வீடு தீ வைக்கப்பட்ட சம்பவம் தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறும் நந்தகுமார், குடும்பத்தினருடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்து உள்ளார். இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்து இருக்கிறார்.

விசிக எம்.எல்.ஏ. கடிதம்
இதனிடையே திருப்போரூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், நந்தகுமாரையும் அவரது குடும்பத்தினரையும் சாதி ரீதியாக ஒதுக்கி வைத்து கொடுமைப்படுத்தியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications