என்ஐஏ அதிகாரி! உங்க வீட்டை சோதனை செய்யணும்! ரூ20 லட்சம் அபேஸ் செய்த பாஜக நிர்வாகி! சிக்கியது எப்படி?
சென்னை: என்ஐஏ அதிகாரி போல் நடித்து பாஜக நிர்வாகி ஒருவர் செல்போன் கடைக்காரரிடம் ரூ 20 லட்சம் கொள்ளை அடித்த சம்பவத்தில் அந்த நிர்வாகி சிக்கியது எப்படி?
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் தெருவில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஜமேஷ் முபினின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் அவரது வீட்டிலிருந்து 70 கிலோவுக்கும் மேற்பட்ட வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

6 பேர் கைது
இதையடுத்து அவருடைய கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் உக்கடம் அருகே போலீஸார் சோதனை நடத்திக் கொண்டிருக்கும் போது ஜமேஷா முபினே கார் சிலிண்டரை வெடிக்க வைத்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. தீபாவளி பண்டிகையின் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி கடைவீதியில் சிலிண்டரை வெடிக்கச் செய்து பேரழிவை ஏற்படுத்த சதி திட்டமா என்பது குறித்தும் போலீஸார் சந்தேகித்தனர்.

கார் வெடிப்பு சம்பவம்
கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த ஜமேஷா முபினை கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு அமைப்பு எனப்படும் என்ஐஏ விசாரணை நடத்தியது உக்கடம் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. கார் வெடிப்பு சம்பவம், வெடி பொருட்கள் பறிமுதல், முபினிடம் என்ஐஏ விசாரணை நடத்தியது உள்ளிட்டவற்றால் இந்த வழக்கை என்ஐஏ விசாரணைக்கு தமிழக அரசு மாற்றியது.

கோவை கார் வெடிப்பு சம்பவம்
இந்த நிலையில் இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ போலீஸார் சந்தேகத்திற்கு இடமான இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதிலும் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பவர்களும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் நபர்களின் வீடுகளில் என்ஐஏ போலீஸார் சோதனை மேற்கொண்டு வந்தனர். இதை பயன்படுத்தி கொள்ளை கும்பல் ஒன்று செல்போன் கடை உரிமையாளரின் வீடு மற்றும் கடைகளில் சோதனை நடத்தியது.

ரூ 20 லட்சம் கொள்ளை
சோதனை நடத்துவது போல் நடித்து ரூ 20 லட்சம் கொள்ளை அடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை முத்தியால்பேட்டை மலையப்பன் தெருவில் வசித்து வரும் ஜமால் என்பவர் பர்மா பஜாரில் வைத்து நடத்தி வரும் செல்போன் கடையில்தான் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. ஜமாலின் வீட்டிற்கு கடந்த 12 ஆம் தேதி வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஜமாலிடம் தாங்கள் என்ஐஏ அதிகாரி என்றும் உங்கள் வீட்டை சோதனையிட வந்தோம் என்றும் கூறியுள்ளனர்.

ஜமாலின் வீடு
வீட்டை சோதனையிட்ட போது ஜமாலின் வீட்டிலிருந்து ரூ 10 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. அது போல் அதே கும்பல் செல்போன் கடையில் நடத்திய சோதனையில் மேலும் ஒரு ரூ 10 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றது. இதையடுத்து என்ஐஏ போலீஸார் சோதனை நடத்தியதாக வெளியான தகவலை அடுத்து முத்தியால்பேட்டை போலீஸார் ஜமாலிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் என்ஐஏ அதிகாரிகள் இல்லை என்றும் கொள்ளை கும்பல் என்றும் தெரியவந்தது.

ஜமால் கடையிலும் கொள்ளை
இதையடுத்து ஜமால் வீடு மற்றும் கடை அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் ராயபுரத்தை சேர்ந்தவரும் பாஜக நிர்வாகியுமான வேலு அல்லது வேங்கை அமரன், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கேஸ் டெலிவரி பணியாளரான புஷ்பராஜ், வீரா என்கிற விஜயகுமார், பல்லவன் சாலையைச் சேர்ந்த சப்பரம் தூக்கி பணியாற்றும் கார்த்திக், பல்லவன் சாலை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தேவராஜ் மற்றும் ரவி என தெரியவந்தது. இதையடுத்து இந்த கும்பலை பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வந்த நிலையில் மேற்கண்ட 6 பேரும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications