நம் அனைவருக்கும் உள்ள சந்தேகம்.. ஓய்வு காலத்தில் வசதியாக வாழ எவ்வளவு பணம் தேவை? ஈஸி விளக்கம் இதோ
சென்னை: பொதுவாக நம் அனைவருக்கும் ஓய்வு பெற்று நிம்மதியாக வாழ எவ்வளவு பணம் தேவை என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கும்.. அதற்கான பதிலைப் பிரபல பொருளாதார வல்லுநர் கே ராஜேஷ் விளக்கியுள்ளார்.
நமது முந்தைய தலைமுறையினர் 20, 30 ஆண்டுகள் கூட ஒரே நிறுவனத்தில் வேலை செய்து.. அங்கேயே ஓய்வு பெறுவார்கள். ஆனால், இந்த இளம் தலைமுறையினர் பல நிறுவனங்களை மாற வேண்டி இருக்கிறது.

இதனால் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதில்லை. இதனால் ஓய்வு பெற்று நிம்மதியாக வாழ எவ்வளவு பணம் தேவை என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கான பதிலைத் தான் பிரபல பொருளாதார வல்லுநர் கே ராஜேஷ் தந்துள்ளார்.
கே ராஜேஷ்: இது தொடர்பாக பிரபல பொருளாதார வல்லுநர் கே ராஜேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "கார்ப்பரேட் கலாச்சாரத்தில் பணிபுரியும் எனது நண்பர்கள் பலர் தங்கள் பணி வாழ்க்கையால் சோர்வடைந்துள்ளனர், அவர்கள் என்னிடம் தொடர்ந்து கேட்கும் ஒரு கேள்வி எனக்கு ஓய்வு பெற்று நிம்மதியாக வாழ எவ்வளவு பணம் தேவை? நம் பெற்றோர்கள் 30 அல்லது 40 வருடங்கள் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்த (hard work) காலம் போய்விட்டது. ஆனால் தற்போதுள்ள தலைமுறை hard workingலிருந்து smart workingக்கு மாறிவிட்டது.
மாறிவரும் காலத்தினால், அதிக வருமான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேபோல் அதிக செலவு நிலைகளும் அதிகரித்துள்ளன. ஆனால், சேமிக்கும் வழிகளும், முதலீட்டு வாய்ப்புகளும் அந்த அளவிற்கு அதிகரிக்கவில்லை. மாறிவரும் பொருளாதாரச் சூழல் காரணமாக வட்டி விகிதங்களும் குறைந்துகொண்டே வருகின்றன.
எவ்வளவு கார்பஸ் தேவை: நிம்மதியாக, financially independent ஆக நமது ஓய்வுக் காலங்களைக் கழிக்க, பல வருமான ஆதாரங்களை உருவாக்க வேண்டும் மற்றும் ஓய்வூதிய கார்பஸ் இலக்கை நிர்ணயிக்க வேண்டும், அதை அடைந்தவுடன் நாம் ஓய்வு பெறலாம். அந்த கார்பஸ் எவ்வளவு இருக்க வேண்டும்? நான் வசதியாக ஓய்வு பெற எவ்வளவு பணம் தேவை? இந்த மாதிரியான கேள்விகளுக்கு இந்த கட்டுரையில் விடையுள்ளது. தொடர்ந்து படியுங்கள்...
4% விதி: வில்லியன் பெங்கன் 1994 இல் நிதி திட்டமிடல் துறையில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். அவரது ஆய்வின்படி, ஒவ்வொரு ஆண்டும் உங்கள் போர்ட்ஃபோலியோவில் 4% தொகையை நீங்கள் எடுக்க முடிந்தால், 30 ஆண்டுகளுக்கு உங்கள் முதலீடு உங்களுக்குப் பயனளிக்கும். ஆனால் எவ்வளவு முதலீடு Retirement Corpus) தேவை என்பதை எவ்வாறு கணக்கிடுவது?
உங்களது தற்போதைய வருடாந்திர செலவு எவ்வளவு என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதே அளவில் உங்கள் ஓய்வுக் காலத்தில் செலவுகள் எவ்வளவு உயர்ந்திருக்குமென்று (பணவீக்கம் காரணமாக) calculate செய்து வைத்துக் கொள்ளுங்கள் (இணையத்தில் அதற்கான calculators நிறைய உள்ளன). உதாரணமாக ஒரு மாதத்திற்கு 1 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். ஆண்டுச் செலவு 12 லட்சம்.
ஓய்வூதிய கார்பஸ்: வில்லியமின் கூற்றுப்படி, ஓய்வு பெற வேண்டுமென்றால், உங்களது வருடாந்திர செலவினத்தின் 25 மடங்கு கார்பஸ் உங்களிடம் இருக்க வேண்டும். ஆகவே, உங்களிடம் 25 மடங்கு × 12 லட்சங்கள், அதாவது 3 கோடிகள் இருக்க வேண்டும். பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் திரும்பப் பெறும் தொகை 3% அதிகரித்துக் கொண்டே சென்றாலும், 30 வருடங்கள் கழிந்தாலும் உங்களிடம் பணம் தீர்ந்துவிடாது. அதாவது ஓய்வூதிய கார்பஸ் = 25 x ஆண்டு செலவு
நாம் ஒரு Index Mutual Fundல் முதலீடு செய்கிறோம் என்றால், நவம்பர் 1996 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, NIFTY 50 யின் பங்குகள் 12.2% CAGR வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது NIFTY Next 50 குறியீட்டின் பங்குகள் 17.2% வருடாந்திர வருவாயை வழங்கியுள்ளது. இது, உங்களது வருடாந்திர செலவான 4% விட அதிகம், மேலும், பணவீக்கத்தை (6%) கழித்தாலும், உங்களுடைய முதலீடு (Corpus) குறையவே குறையாது.
கார்பஸை 50% இன்டெக்ஸ் + 50% பத்திரம் (Bond/NCD) அல்லது நிலையான கருவிகளில் முதலீடு செய்தால், ஒட்டுமொத்த வருமானம் நமது திரும்பப் பெறும் வரம்பை (withdrawal) விட அதிகமாக இருக்கும்.
மற்றொரு வழி: நீங்கள் எப்போது ஓய்வு பெறலாம் என்பதைத் தீர்மானிக்க மற்றொரு வழி உள்ளது. விக்கி ராபின் மற்றும் ஜோ டொமிங்குஸ் Your Money or Your Life என்ற புத்தகத்தில் Cross-Over Point (குறுக்குவெட்டுப் புள்ளி) என்ற கருத்தைப் பற்றி விவாதித்திருந்தனர். உங்கள் மாதாந்திர வருமானம் உங்கள் மாதாந்திர செலவினங்களைக் கடக்கும் போது, இது பொருளாதாரச் சுதந்திரத்தை (Financial Independence) வழங்குகிறது.
எடுத்துக்காட்டாக, உங்கள் மாதாந்திரச் செலவு 1 லட்சமாக இருந்தால், உங்கள் முதலீடு ஒரு மாதத்திற்கு 1 லட்சத்துக்கு மேல் உங்களுக்கு வருமானம் ஈட்டினால், நீங்கள் Cross-Over Pointயை அடைந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். இந்த Cross-Over Pointயை அடையத் தேவையான பணத்தை எப்படி கண்டுபிடிப்பது இந்த தொகையை கிராஸ்ஓவர் சொத்துக்கள் என்று அழைக்கலாம்.
கிராஸ்ஓவர் சொத்துக்கள் = மாதாந்திர செலவுகள் / மாதாந்திர வருமானம்
எவ்வளவு தேவை: எங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோ 4% வருடாந்திர வருமானத்தைத் தருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதைப் பிரித்தால் மாத வருமானம் 4%/12 = 0.33% ஆக இருக்கும். உங்களின் மாதச் செலவு 1 லட்சமென்று வைத்துக்கொண்டால், கிராஸ்ஓவர் சொத்துக்களைப் பெற, 1 லட்சத்தை 0.33% ஆல் வகுத்தால் வரும் தொகையே உங்களது Corpus. அதாவது 3 கோடி.
நாம் ஆண்டுக்கு 12%, அதாவது மாதத்திற்கு 1% மேல் வருமானம் ஈட்ட, நாம் ஓய்வு பெறுவதற்கான கார்பஸ் தேவை வெறும் 1 கோடி மட்டுமே. இது 4% விதியில் நாம் சொல்வதை விட 3 மடங்கு குறைவு. இதற்கு முக்கிய காரணம், நாங்கள் கருதிய முதலீட்டு வருமானம் 12% ஆகும்.
எது புத்திசாலித்தனம்: நமது முதலீடு, நமக்கு ஈட்டித்தரும் வருமானமானது, நமது withdrawal (வருடாந்திர செலவுகளுக்காக நீங்கள் எடுக்கும் தொகை) வரம்பை விட அதிகமாக வளரும் வரை, கவலை ஏதுவுமின்றி நாம் தொடர்ந்து செலவு செய்து வசதியாக வாழலாம். முதலீட்டு diversification பற்றி நாங்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை, நீங்கள் பங்குகளைத் தேர்ந்தெடுக்கத் தேவையில்லை, பத்திரம் மற்றும் பங்குகளில் முதலீடு செய்யும் சமநிலையான பரஸ்பர நிதிகளில் (Mutual Funds) முதலீடு செய்வது நல்லது.
ஈக்விட்டி வருமானம் நிலையற்றதாக இருப்பதால், சந்தைகள் வீழ்ச்சியடையும் போது, மதிப்பு விரைவில் சிதைந்துவிடும், எனவே எல்லாவற்றையும் பங்குச் சந்தையில் வைத்திருப்பது புத்திசாலித்தனம் அல்ல.
அதேபோல் மருத்துவச் செலவுகளுக்கு Health இன்சூரன்ஸ் எடுத்துவைத்துக் கொள்வதும், ஆயுள் காப்பீடு (Term Insurance) எடுத்து வைத்துக் கொள்வதும் நமது நிதி மேலாண்மையை இன்னும் மேம்படுத்தும். அடுத்த தலைமுறைக்குக் கொஞ்சமாவது சொத்து சேர்த்து வைத்துச் செல்லலாம். இந்த இரண்டு இன்சூரன்ஸ்களையும் இளம் வயதிலேயே எடுப்பது நல்லது. அப்பொழுது தான் பிரீமியம் தொகை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications