"மோடி பெரியாராக வந்தால் நல்லது தான்.. ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம்" திருமாவளவன் பேட்டி!
சென்னை: சனாதன எதிர்ப்பாளராக பிரதமர் நரேந்திர மோடி வந்தால், ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக உழைத்த இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது மணி மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் கூறுகையில், இந்த மண்ணில் நீடித்து நிலைத்திருக்கும் சாதியை, சனாதன சமூக கட்டமைப்பை தகர்க்க வேண்டும் என்று போராடியவர். அதற்கு எதிராக திராவிடக் கருத்தியலை முன்மொழிந்தனர். அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் இருவரும் தனித்தனியே இயக்கங்களை நடத்தி இருந்தாலும், அவர்களின் அடிப்படை கருத்தியல் திராவிடம்தான்.

விசிக பொதுக்கூட்டம்
தொடர்ந்து, தேசிய அளவில் ஆர்எஸ்எஸ், பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும். இந்த கருத்தை மையப்படுத்தி வரும் செப். 28ம் தேதி மதுரையிலும், அக்.8ம் தேதி கோவையிலும் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் மற்றும் தோழமை கட்சிகளுடன் சேர்ந்து "சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம்" என்கிற கருப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.

தென்காசி சாதிய கொடுமை
பிற மாநிலங்களை போல் தமிழ்நாட்டிலும் சாதிய வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகின்றன. அண்மையில் தென்காசி அருகே பாஞ்சாங்குளம் பள்ளிப் பிள்ளைகளின் உள்ளத்தை காயப்படுத்தும் நோக்கில் சாதி வெறியர்கள் நடந்துகொண்டார்கள். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்திருந்தாலும் கூட, ஊர்க் கட்டுப்பாடு போட்டுள்ளார்கள் என்று கூறுகிறார். அப்படியென்றால் ஊரில் உள்ள சாதியவாதிகள் அனைவரும் சேர்ந்தே அந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. இதனால் கடைக்காரரை கடந்து, இதில் சம்மந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆ.ராசா பற்றி கருத்து
தொடர்ந்து, திமுக எம்பி ராசாவின் பேசியதை வைத்து திரிபுவாதம் செய்கிறார்கள். அவர் பேசியது மனுதர்மத்தில் இப்படி என்பதை மேற்கோள் காட்டி இருக்கிறாரே தவிர, அவர் இந்து சமூகத்தில் யாரையும் பழிக்க வேண்டும் என்று கூறவில்லை. இது யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது பேசியது அல்ல. ஆனால் சனாதன சக்திகள் இதனை திசைதிருப்புகிறார்கள். மனுதர்மத்தை பாதுகாக்க துடிக்கிறார்கள். ஆ.ராசா மீதான குற்றச்சாட்டுகள் சொந்த அரசியலுக்காக தான் என்று விமர்சித்தார்.

பெரியாராக வந்தால் வரவேற்போம்
இதன்பின்னர் சமூக நல்லிணக்க பெரியாரே என்ற பிரதமர் மோடியை பெரியாரோடு ஒப்பிட்ட போஸ்டர் குறித்த கேள்விக்கு, பிரதமர் மோடியை பெரியாராக மாற்ற முயற்சிக்கிறார்கள். சனாதான எதிர்ப்பாளராக பிரதமர் மோடி வந்தால் அவரை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications