முஸ்லிம் சமுதாயத்தினர் மத்தியில் அச்ச உணர்வு! சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலிக்கு முழு ஆதரவு -ஐயூஎம்எல்
சென்னை: முஸ்லிம் சமுதாயத்தினர் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் கவலை தெரிவித்துள்ளார்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றும் அதே நேரத்தில் விசாரணை முடிவுக்கு முன்பே குறிப்பிட்ட சமுதாயத்தினரை காயப்படுத்துவது முறையல்ல எனவும் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா.. முதல்வர் ஸ்டாலினுக்கு காதர் மொகிதீன் நேரில் அழைப்பு!

அமைதி -நல்லிணக்கம்
தமிழகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பாதுகாத்திட முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதை வரவேற்கின்றோம். ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சட்டத்தை பாராளு மன்றத்தில் அறிமுகம் செய்த நிலையிலிருந்தே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்ததோடு என்.ஐ.ஏ சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படும் என எச்சரிக்கையும் செய்தனர்.

என்.ஐ.ஏ. சட்டம்
அமைதிப்பூங்காவான தமிழகத்தில் தற்போது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் தொடர்ச்சியாக என்.ஐ.ஏ.சட்டத்தைப் பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதே நேரத்தில் விசாரணையின் முடிவுக்கு முன்பாகவே ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை காயப்படுத்தி செய்திகள் வெளியிடப்படுகின்றது.

அச்ச உணர்வு
இதன் காரணமாக முஸ்லிம் சமுதாயத்தினர் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ந் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் தமிழகத்தில் 50 இடங்களில் எந்த நோக்கமும் அறிவிக்கப்படாமல் அணிவகுப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசத்தந்தையை படுகொலை செய்த நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும், இவ்வியக்கத்தைச் சேர்ந்தவர்களே காந்தி பிறந்த தினத்தில் தமிழகத்தில் முதன்முறையாக அணிவகுப்பை நடத்த இருப்பதும், பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன.

மனிதச்சங்கிலி
சமூக நல்லிணக்கம் தழைக்க வேண்டும், சகோதரத்துவம் நிலைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி(சி.பி.எம்.), இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் சார்பில் அக்டோபர் 2-ந் தேதி மாலை 4.00 மணிக்கு நடைபெறும் தமிழகம் தழுவிய சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தனது அறிக்கையில் தெரிவித் துள்ளார்.