சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுயக்கட்டுப்பாடு, அச்சமின்மை மனஉறுதி, சத்தான உணவு- கொரோனாவை வெல்லும் வழி!

Google Oneindia Tamil News

சுயக்கட்டுப்பாடு, அச்சமின்மை மனஉறுதி, சத்தான உணவு = உடனடியான முறையான சிகிச்சை இவையே நோய்த்தொற்றை வெல்லும் வழி!

ஆம்.
இன்றோடு பதினைந்தாவது நாள் வீட்டில் தனிச்சிறை.

என் மனைவிக்கும் மகனுக்கும். இனப்பற்று மொழிப்பற்றால் நான் கொண்டுவந்து சேர்த்த துயரங்களைத் தாங்கியது போலவே இப்போதும் குடும்பம் தாங்கிக்கொண்டது.

பொதுவாக நான் சொந்த சிக்கல்களை பகிர்வதில்லை. ஆனால் பெருந்தொற்று சமூகச்சிக்கலாக விளைந்திருப்பதால் நோயை வெற்றிக்கொண்ட பட்டறிவை பகிர்கிறேன். ஒருவருக்கேனும் பயன்படலாம் என்பதால்.

Inspiring Covid Stories: Netizen Speaks Sons Covid 19 Positive Treatment

மே 4

முன்னிரவு. மனைவிக்கு தலைவலி காய்ச்சல் உடல்வலி சோர்வு அறிகுறிகள் தென்பட்ட அடுத்த நொடி தாமதிக்காது தனி அறைக்குள் தனிமைப்படுத்தினேன். உடனே கபசுரக் கசாயம் காய்ச்சி கொடுத்தேன். சவாலுக்கு தயாரானேன்.

இரவு 9.30 மணிக்கு போற்றுதலுக்குரிய மருத்துவர் வேலாயுதம் அவர்களிடம் ஆலோசனை பெற்றேன்.

மே 5

காலை 8.30 மணிக்கு மாநகராட்சி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பரிசோதனை செய்யவேண்டும் என்றேன். முகாமுக்கு அழைத்து வரச்சொன்னார்கள். மனைவியின் உடல்நிலை ஏற்றதாக இல்லை என்பதை சொல்லி போராடி வீட்டுக்கே வரவழைத்தேன். 12 மணிக்கு RT PCR Test எனக்கும் மனைவிக்கும் எடுக்கப்பட்டு மே 7 மனைவிக்கு தொற்று உறுதியானது.

"நீங்க இருக்கீங்கள்ல எனக்கென்ன கவலை?" என்று மனைவியும் என்மீதான நம்பிக்கையில் உறுதியோடு இருந்தார். எக்ஸ்ரே ,ரத்தப்பரிசோதனை முடித்து வீட்டிலேயே பார்த்துக்கொள்கிறோம் என்று மருத்துவரிடம் சொல்லிவிட்டேன்.

அதிமதுர கசாயத்துக்கான 9 மூலப்பொருட்களை இணை இயக்குநர் அன்புத்தம்பி காமராஜ் அவர்கள் வாங்கிக்கொண்டு வீட்டுக்கே வந்து கொடுத்தார். மதிப்புமிகு நண்பர் செந்தில்பிரசாத் அவர்கள் அவருடைய பல்ஸ் ஆக்ஸிமீட்டரை தந்து உதவினார்.

மே 9

மாநகராட்சி ஊழியர்கள் அவர்களாகவே வந்து மகனுக்கும் மகளுக்கும் பரிசோதனை எடுத்துப்போன அன்று இரவு மகனுக்கு அறிகுறிகள் தொடங்கின. எங்கே தனிமைப்படுத்துவது..?

கூடத்தில் ஒருமுனையை அவருக்கும் மறுமுனையை எனக்குமாக பிரித்துக்கொண்டோம். மே 11 மகனுக்கும் தொற்று உறுதி என்றது பரிசோதனை முடிவு. CT Scan இருவருக்கும் எடுத்தோம்.

மனைவிக்கு நுரையீரலில் மிதமான பாதிப்பு. தொற்று ஏற்படாத மகளை இன்னொரு அறைக்குள் தனித்திருக்கச் செய்தேன். மகளுக்கு தொற்று ஏற்படாமல் காத்தே தீரவேண்டும் என்று உறுதிபூண்டேன். தொற்றில்லாத மகளுக்கும் தொற்றுடையவர்களுக்கும் இடையில் நடந்த நான்.

17 ஆண்டுகளாக வீட்டில் தொலைக்காட்சி இல்லாததால் எப்போதுமே வீடு அமைதியாக இருக்கும். (எப்போதேனும் அமைதி குலைந்தால் அதற்கு நானே பொறுப்பு)

எனவே வழக்கத்தைவிட அவர்களை கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கச்செய்தேன். வழக்கத்தை விட அதிகமாகவே புத்தகங்களை படித்துத் தீர்த்தார்கள் மகனும் மகளும்.

காலை
கபசுர கசாயம்,
அதிமதுர கசாயம்

காலை உணவு,மதிய உணவு,

மாலை சுண்டல்கள்,இரவு கபசுரகசாயம்,இரவு உணவு,

அதிமதுர கசாயம் மற்றும்

மருந்துகள் என முழுநாளும் சுழன்றேன்.

மகனுக்கு தொற்று ஏற்பட்ட உடனே எனக்குள் வேகமும் உறுதியும் ஏறியது. கொரோனாவை படமெடுத்தாடும் ஒரு கொடிய கருநாகமாக மனதில் உருவகப்படுத்திக்கொண்டேன். அதன் தலையில் கடுங்கோபத்தோடு வேகமாக கொத்திக்கொண்டே இருந்தேன்.... இறுதியில் அது செத்துவிழுந்தது.

அறிகுறிகள் தெரிந்த உடனே வேகமாக செயல்பட்டால் வெல்வது எளிது. எல்லோரிடமும் ஆலோசனை கேட்பதை முதலில் நிறுத்துங்கள். மருத்துவர்களில் பலருக்கே இன்னும் சரியாக புரிபடவில்லை என்பதே உண்மை. துறைசார்ந்த அறிவுடையவர்களிடம் அதிலும் சரியானவர்களிடம் பேசுங்கள். தெரியாததை தெரியாது என்று சொல்லத்தெரிந்தவர்களிடம் பேசுங்கள். தொற்று ஏற்பட்ட யாரோ ஒருவரின் மருந்தையே நீங்களும் எடுக்காதீர்கள். தொற்றுடையோர் பேசுவதை குறைத்துவிடுங்கள்.

முடிந்தால் நிறுத்திவிடுங்கள். மூச்சு வீணாகக்கூடாது. பசிக்கவே பசிக்காது.ஆனால் உணவை தவிர்க்கவே கூடாது சூடான நீர் அடிக்கடி பருகுங்கள். மற்றவை உங்களுக்கு பகிரப்பட்டவை தான். பகிரப்படும் எல்லாவற்றையும் பின்பற்றாதீர்கள். கொரோனா இல்லாத வீடாக உங்கள் வீடு இருக்கவேண்டுமெனில் வீட்டை விட்டு வெளியேறாதீர்கள். எங்கும் சமூக இடைவெளி என்பதே இல்லை. தேவைப்படாத காலத்தில் மனிதருக்குள் இடைவெளியை கடைப்பிடித்த பலர் இப்போது பயத்தாலும், பலர் அலட்சியத்தாலும் பலர் அறிவின்மையாலும் நெருங்கிவந்து உரசுகின்றனர்.

தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்! தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

அரசு முகாம்களில் எக்ஸ்ரே மற்றும் பரிசோதனை எடுக்கப்போகும்போது உடன் செல்வோர் மிகுந்த கவனமாக இருக்கவேண்டும். அங்கு அனைவருமே தொற்றாளர்கள் மற்றும் பரப்புவோர் தான். என் மகனுக்காக போனபோது வரிசையில் நிற்கையில் மகனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு நிற்கும் நிலை ஏற்பட்டது. இருந்தாலும் கொரோனா என்னை விட்டு விலகி நிற்கிறது. இது நாள் வரை நான் பின்பற்றிய உணவு முறையே காரணமாக இருக்கலாம். எப்போதுமே உணவே மருந்து என கொண்டால் எந்நோயையும் விரட்டலாம். எது இருந்தாலும் இல்லையென்றாலும் மனதில் மகிழ்ச்சி இருக்கவேண்டும்.

பொறாமை,காழ்ப்பு,வெறுப்புக்கு இடமில்லையெனில் அந்த மனதில் மகிழ்ச்சி எப்போதும் குடிகொள்ளும். கொரோனாவை விட கொரோனா கால வறுமை கொடிது தான்! ஆயினும் மகிழ்ச்சி வெறும் பொருளில் இல்லை வெற்றியில் இல்லை பிறர் துன்பம் ரசிப்பதில் இல்லை.. மொத்தத்தில் மகிழ்ச்சி வெளியே இல்லை. அன்பால் நிறைந்து வாழ்தலே மகிழ்ச்சி. வறுமையில் செம்மை அதனினும் மகிழ்ச்சி... இவ்வாறு Balamurali Varman தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் நீங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு வந்தவரா? உங்களின் கதையை [email protected] மெயில் ஐடிக்கு அனுப்புங்கள்!

English summary
Here is a Netizen's FB Post on his son'es Covid Treatment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X