பதவியை ராஜினாமா செய்து இடைத்தேர்தல்! எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் எடுக்கும் மெகா அஸ்திரம்? உண்மையா?
சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் தொண்டர்கள் தன் பக்கம் உள்ளார்கள் என கூறிவரும் ஓ.பன்னீர்செல்வம் இடைத்தேர்தல் எனும் மாபெரும் அஸ்திரத்தை கையில் எடுக்க இருப்பதாக தகவல்கள் உலா வரும் நிலையில், அவையெல்லாம் வெறும் வதந்தி தான் என்கின்றனர் அவர் தரப்பு ஆதரவாளர்கள்.
அதிமுகவில் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து வந்த அதிகார யுத்தம் தற்போது இடைவேளையை சந்தித்து இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி.
ஏற்கனவே சசிகலாவால் பதவியை இழந்து கிட்டத்தட்ட அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓபிஎஸ் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைந்தார. தற்போது அவரும் தன்னை ஓரம் கட்ட நினைப்பதால் வெகுண்டு எழுந்தார் ஓபிஎஸ்.

எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக பொதுக்குழு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்து வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்தத. இதை அடுத்து உற்றாக மிகுதியில் தலைகால் புரியாமல் அவரது ஆதரவாளர்கள் கொண்டாடித் தீர்த்தனர். மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவ்வளவு தான் இனி தாங்கள்தான் எல்லாமே என நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் தரப்புக்கு இழுக்கும் முயற்சிகளும் நடைபெற்றன.

ஓ.பன்னீர் செல்வம்
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லும் எனவும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதனால் ஓ.பன்னீர் செல்வத்திற்கு மீண்டும் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் இறுதி நம்பிக்கையாக நாளை உச்ச நீதிமன்றம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஒருவேளை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும் பொதுக்குழு நடக்கும் போது நிச்சயம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் நிர்வாகிகள் ஆதரவு இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

ஆதரவு தேவை
அதே நேரத்தில் தொண்டர்கள் ஆதரவு தனக்கு தான் இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். ஆனால் தொண்டர்கள் வாக்களிக்கும் முறை அதிமுகவில் இருந்தாலும் அதற்கும் பத்து மாவட்ட செயலாளர்களின் ஆதரவு தேவை என்ற பெரிய தடுப்புச் சுவரை எழுப்பி வைத்திருக்கிறார் எடப்பாடி. இதனால் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட முடியாது ஏன் தற்போதைய சூழலில் அவர் அதிமுக உறுப்பினரே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேர்தல் களத்தில் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க முடிவு எடுத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரது பதவியை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலை உருவாக்க முடிவு செய்து இருக்கிறார்.

இடைத் தேர்தல்
அப்போது எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் அப்போது தொண்டர்கள் பலம் யாருக்கு இருக்கும் என்பது தெரிந்துவிடும் என தகவகல்கள் வெளியாகின. இடைத்தேர்தல் நடத்தும் போது இருவருமே இரட்டை இலை சின்னத்தை கேட்டால் சின்னம் முடக்கப்பட்டு வேறு ஒரு சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்படும். அப்போது யார் அணி வெற்றி பெறுகிறதோ அல்லது அதிகபட்ச ஓட்டுகள் கிடைக்கிறதோ அவர்கள் தான் அதிமுகவின் தலைமையை கைப்பற்ற வாய்ப்பாக அமையும் எனவும் சிலர் கூறி வந்தனர். ஏற்கனவே திமுக அசுர பலத்துடன் இருக்கும் நிலையில் தற்போது இதுபோன்ற விஷப்பரிட்சைகளை ஓ பன்னீர்செல்வம் எழுத மாட்டார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

உண்மையில்லை
மேலும் வைத்தியலிங்கத்தையோ மனோஜ் பாண்டியனையோ ராஜினாமா செய்யச் சொன்னால் ஏன் நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டியது தானே என எதிர் கேள்வி வரும் என்பதையும் அவர் உணர்ந்துள்ளார். இடைத்தேடலில் ஆளுங்கட்சியை தோற்றாலும் அதிமுக ஒன்றாக இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என உணர வைக்க ஒரு வாய்ப்பாக இருக்கும் எனக் கூறப்பட்டாலும் இடைத்தேர்தல் என்பதெல்லாம் வாய்ப்பே இல்லை என உறுதியாகச் சொல்கின்றனர் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். மேலும் இந்த தகவலை கிளப்பி விட்டது யார் எனவும் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications