2011 சம்பவம் “நாங்க போட்ட டிராமா”.. பட்டுனு போட்டு உடைத்த சசிகலா.. அதிரவைக்கும் தகவல்.. அடேங்கப்பா!
சென்னை : என்னையும் ஜெயலலிதாவையும் எப்படியாவது பிரித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சி மேற்கொள்ளப்பட்டதால் அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவரும் நானும் சிறிது காலம் பிரித்து இருந்து என்ன நடக்கிறது என்று பார்த்தோம் என சசிகலா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
எங்கள் இருவரையும் வைத்து திட்டமிடப்பட்ட சதியின் பின்னணி குறித்து நாங்கள் தெரிந்து கொண்டவுடன் மீண்டும் ஜெயலலிதாவோடு இருந்து வந்தேன் என சசிகலா கூறியுள்ளார்.
2011 டிசம்பரில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, 2012ல் மீண்டும் இணைந்த பிறகு ஜெயலலிதா, சசிகலா இடையே சுமுக உறவு இல்லை என ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தான் ஆறுமுகசாமி அறிக்கை வெளியிட்டுள்ள தகவலை மறுத்து, நாங்கள் சிறிது காலம் பிரிந்து இருந்ததே நாங்கள் போட்ட திட்டம் தான் எனக் கூறியுள்ளார் சசிகலா.

2011 டிசம்பர் சம்பவம் - பின்னணி
2011 டிசம்பரில், சசிகலாவை அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கியதோடு, போயஸ் இல்லத்தில் இருந்தும் அவரை வெளியேற்றினார். அவரோடு சேர்த்து அவரது உறவினர்களான டிடிவி தினகரன் உள்ளிட்ட 13 பேரையும் கட்சியை விட்டு நீக்கினார். தொடர்ந்து, சசிகலா கணவர் நடராஜன், உறவினர் ராவணன் உள்ளிட்டோர், நில அபகரிப்பு, பண மோசடி உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர். ஜெ சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றால் ஆட்சியை பிடிக்க சசிகலா டீம் சதி செய்ததாகவும், அது உளவுத்துறை மூலம் ஜெயலலிதாவுக்கு தெரியவந்ததால் தான் அவர் மீது அதிரடி ஆக்ஷன் என்றும் அப்போது அதிமுக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

பல ஆண்டுகால நட்பு
1991 முதல் அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலா மிகுந்த செல்வாக்கு பெற்றவராக இருந்தார். 2001 - 2006, 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு என அரசு பணியிட மாற்றங்களிலும், ஒப்பந்தங்களிலும் சசிகலா ஆதிக்கம் செலுத்தினார். 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை தேர்ந்தெடுத்ததே சசிகலாதான் என்றும் கூறப்பட்டது. அந்தப் பட்டியல் ஜெயலலிதாவின் ஒப்புதல் இல்லாமலேயே வெளியாகி, பின்னர் மீண்டும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதும் அரங்கேறியது. இதுபோன்ற நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்திருந்த ஜெ, தொடர்ந்து குடைச்சல்களால் சசிகலாவை ஒதுக்கி வைத்ததாகவும் கூறப்பட்டது.

மீண்டும் சேர்த்துக்கொண்ட ஜெ
ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு சசிகலாவை மீண்டும் சேர்த்துக்கொண்டார் ஜெயலலிதா. தவறு செய்த உறவினர்களின் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்வதாக சசிகலா அறிக்கை மூலம் தெரிவித்திருந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு , அவரை அதிமுகவிலிருந்து நீக்கி ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்வதாக தெரிவித்தார் ஜெயலலிதா. சசிகலாவின் கணவர் நடராஜன் உள்பட, அவரது உறவினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும், கட்சித் தொண்டர்கள் அவர்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.

துரோகிகள்
அப்போது, சசிகலா வெளியிட்ட அறிக்கையில், தனது உறவினர்கள் என்றும் நண்பர்கள் என்றும் கூறிக்கொண்டு, சிலர் ஜெயலலிதாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது மிகப்பெரிய துரோகம் என்றும், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் தனக்குத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். அதிமுக நலனுக்கு எதிராகவும் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்ட அந்த சதி நடவடிக்கைகள், 24 ஆண்டுகள் வாழ்ந்த ஜெயலலிதாவின் இல்லத்திலிருந்து வெளியே வந்தபிறகுதான் தனக்குத் தெரியவந்ததாகவும் சகிகலா குறிப்பிட்டிருந்தார். 2012க்கு பிறகு சசிகலாவின் ஆதிக்கம் கட்சி மற்றும் ஆட்சியில் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது வெளிப்படையாகவே தெரிந்தது.

2016ல் விஸ்வரூபம்
பிறகு 2016ல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் ஆனார் சசிகலா. பிறகு முதல்வராகவும் ஆசைப்பட்டார். ஆனால், அதற்குள் சொத்துக் குவிப்பு வழக்கு உச்சத்திற்கு வந்து சிறை சென்றார் சசிகலா. அதனால், அவரது அத்தனை கனவும் தவிடுபொடியாக, எடப்பாடி பழனிசாமி முதல்வராக்கப்பட்டார். அதற்குப் பிறகு பல பஞ்சாயத்துகள் நடந்து, அவர் சிறையில் இருந்து திரும்பி வருவதற்குள் கனவெல்லாம் திசை மாறிப்போனது. ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சசிகலா மட்டுமல்லாது வழக்கில் சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கானோரிடம் துருவித் துருவி விசாரணை நடத்திய நிலையில், நேற்று அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

சுமுக உறவு இல்லை - பற்றவைத்த பிரியா
இந்த அறிக்கையில் தான், 2012ஆம் ஆண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் மீண்டும் இணைந்தனர். ஆனாலும் அவர்களுக்கு இடையே சுமுகமான உறவு இல்லை, இதனால் சுயநலத்திற்காக ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய சசிகலா தடையாக இருந்ததாகவும், அவரது கடைசி நாட்கள் மர்மம் சூழ்ந்திருப்பதாகவும் ஆறுமுகசாமி ஆணையம் குறிப்பிட்டுள்ளது. சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்தப் புள்ளிக்கு வந்துள்ளது ஆறுமுகசாமி ஆணையம்.

ஒரே போடாகப் போட்ட சசி
ஆனால், இதனை மறுத்துள்ள சசிகலா ஒரே போடாக ஒரு மேட்டரை உடைத்திருக்கிறார். எங்களுடைய உறவு குறித்து இந்த ஆணையம் யாரையோ திருப்திப்படுத்தும் எண்ணத்தில், யாருடைய அரசியல் ஆதாயத்திற்கு உதவுகின்ற நோக்கத்தில் இப்படிப்பட்ட தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்தை இந்த ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? நானும் ஜெயலலிதாவும் கிட்டத்தட்ட சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனைவரும் பொறாமைப்படும் அளவுக்கு ஒருவருக்கொருவர் துணையாக ஒரே வீட்டில் வாழ்ந்து இருக்கிறோம். ஜெயலலிதாவே தெரிவித்தது போல் உற்ற சகோதரியாக, உயிர்த் தோழியாக, இன்னும் சொல்லபோனால் அவருக்கு தாயாக இருந்து பாதுகாத்து வந்துள்ளேன்.

நாங்க போட்ட திட்டம்
என்னையும் ஜெயலலிதாவையும் எப்படியாவது பிரித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவரும் நானும் சிறிது காலம் பிரித்து இருந்து என்ன நடக்கிறது என்று பார்த்தோம். இந்த சதியின் பின்னணி குறித்து நாங்கள் தெரிந்து கொண்டவுடன் மீண்டும் ஜெயலலிதாவோடு இருந்து வந்தேன். 2012 முதல் ஜெயலலிதாவுக்கும் எனக்கும் இடையிலான உறவு சரியில்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எப்படி தெரியும். யார் இதைப்பற்றி ஆணையத்திடம் சொன்னது? இறந்துபோன ஜெயலலிதாவும் இவர்களிடத்தில் சொல்லி இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும்போது இப்படி ஒரு பொய்யான, அபத்தமான கருத்தை ஆணையம் தெரிவிக்க காரணம் என்ன? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் சசிகலா.

அடேங்கப்பா
சசிகலா குடும்பத்தினர் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் உளவுத்துறையின் ரகசிய ரிப்போர்ட் காரணமாகவே சசிகலா நீக்கப்பட்டதாக அப்போது பேச்சுகள் அடிபட்ட நிலையில், ஜெ.வும், நானும் திட்டமிட்டே உண்மையை தெரிந்து கொள்வதற்காக பிரிந்திருந்தோம் எனக் கூறி அதிமுகவினரையும், அரசியல் அரங்கையும் அதிர வைத்திருக்கிறார் சசிகலா. சசிகலா கூறியுள்ள தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது, சசிகலா தனக்கு அருகில் இருப்பதாகச் சொல்லும் அவரது அக்கா ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கே வெளிச்சம்!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications