ஜெய் பீம் படத்தில் இன்னும் இவ்வளவு இருக்கா? பாமக கொடி முதல் ராமதாஸ் பெயர் வரை! புது பஞ்சாயத்து
சென்னை: ஜெய்பீம் திரைப்படத்தில் அக்னி கலசம் புகைப்படத்துடன் காலண்டர் ஒன்று இடம்பெற்றிருந்தது தான் முதலில் பிரச்சனை வெடிக்க காரணமாக இருந்தது. ஆனால் இப்போது அதே படத்தில் நான்கு இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி மறைமுகமாக குறிப்பிடப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.
கொடுமைக்கார போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்துள்ள கதாபாத்திரம் தொலைபேசியில் பேசும்போது, பின்னணியில் உள்ள காலண்டரில் அக்னி கலசம் இடம் பெற்றிருந்தது.
இது தொடர்பாக பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதால் கிராபிக்ஸ் மூலம் அகற்றப்பட்டது.

குருமூர்த்தி என்று மாற்றம்
ஆனால் உண்மை சம்பவத்தை படமாக எடுக்கும்போது காவலர் பெயர் அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக குருமூர்த்தி என்று மாற்றியது ஏன் என்ற கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவரான மறைந்த குருவை குறிப்பிடும் வகையில் இந்த பெயர் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

5 கோடி நஷ்ட ஈடு
இருப்பினும் பெயர் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று நடிகர் சூர்யா ஒரு அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டார். ஆனால் பகிரங்க மன்னிப்பு கோராவிட்டால் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வன்னியர் சங்கம், சூர்யா உள்ளிட்ட படக்குழுவினருக்கு, வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

4 குறியீடுகள்
இது ஒரு பக்கம் என்றால் ஜெய் பீம் படத்தில் மொத்தம் நான்கு குறியீடுகள் சுட்டிக் காட்டப்படுகின்றன என்று குற்றம்சாட்டி இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் போட்டோக்கள் வேகமாக பரவி வருகின்றன. வன்னியர் அக்னி கலசம் காலண்டர், ஒரு குறியீடு என்றால் இன்னொரு காட்சியில் எதிர்மறைக் கதாபாத்திரம் ஒருவர் தனது சட்டையின் மீது போட்டு இருக்கக்கூடிய துண்டில் பாமக கட்சி கொடி இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது பாமக கொடிதானா என்பதை உற்றுப் பார்த்தால்தான் தெரிந்து கொள்ள முடியும்.

ராமதாஸ் பெயர்
ஜாதி வெறியில் ஊறிப்போய் இருக்கக்கூடிய கிராமத்தில், பாமக கட்சியின் கொடி போன்ற ஒரு கொடி பறப்பது போன்ற ஒரு காட்சி உள்ளது. அது பாமக கொடி இல்லை என்று ஒரு தரப்பு சொல்கிறது. ஆனால் அப்படித்தான் தெரிவதாக இன்னொரு தரப்பு கூறுகிறது. செங்கேனி கதாப்பாத்திரத்தின் குழந்தையை போலீசார் இழுத்துச் செல்லும் காட்சியில் அவரவர் சாலையில் அழுது புரளும் காட்சியின் பின்னணியில் உள்ள ஒரு பஸ் நிலையத்தின் நிழல்குடையில் ராமதாஸ் என்று பெயர் எழுதப்பட்டுள்ளது.
Recommended Video

புது பஞ்சாயத்து
வன்னியர் மற்றும் பாமக ஆகியவற்றுக்கு எதிராக திட்டமிட்டு இதுபோன்ற காட்சிகளை அமைத்து இருப்பதாக பாமக ஆதரவாளர்கள் சமூகவலைத்தளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர். ஏற்கனவே நடக்கும் பஞ்சாயத்து முடிவுக்கு வராத நிலையில் புதிதாக கிளம்பியிருக்கும் இந்த தகவல்கள் இப்போது தீ போல பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications