TN Budget: 2010 முதல் வழங்கப்படாத கலைஞர் செம்மொழி விருது இனி ஆண்டுதோறும் ஜூன் 3-ல் வழங்கப்படும்!
சென்னை: 2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி விருது இனி ஆண்டுதோறும் ஜூன் 3-ந் தேதி ரூ10 லட்சத்துடன் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட்- நிதிநிலை அறிக்கையை இன்று சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழர் பண்பாடு, தமிழ் ஆட்சி மொழி தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டிருந்தார். அதில் சில முக்கியமானவை:

ஜூன் 3-ல் கலைஞர் செம்மொழி விருது
சென்னையில் உள்ள செம்மொழித் தமிழ்ழாய்வு மத்திய நிறுவனத்துக்குப் புத்துயிர் அளிக்கப்படும். 2010 முதல் வழங்கப்படாமல் இருக்கும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது இனி ஒவ்வோராண்டும் ஜூன் மாதம் 3-ம் நாள் 10 லட்சம் ரூபாயுடன் வழங்கப்படும்.

தமிழ் ஆட்சி மொழி
தலைமைச் செயலகம் முதல் மாநிலத்தின் அனைத்துத் துறை அலுவலகங்கள் வரையிலும் தமிழை ஆட்சி மொழியாகப் பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும். உலக அளவில் போற்றப்படும் தமிழ் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்படும். செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தின்கீழ் தமிழ்ப் படைப்புகள் மொழிபெயர்க்கப்படும்.

தொல்லியல் ஆய்வுக்கு ரூ5 கோடி
தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு தொழில்நுட்ப புத்தகங்கள் தமிழில் வெளியிடப்படும். இந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறைப்படி மேற்கொள்ள, நாட்டில் வேறு எந்த மாநிலத்தை விடவும் அதிக அளவாக ரூ5 கோடி நிதி ஒதுக்கப்படும். கீழடி, சிவகளை, கொடுமணல் பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கல் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும். தேசிய கடல்சார் நிறுவனம், தேசிய கடல் தொழில்நுட்பவியல் நிறுவனம் மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக் கழகம் ஆகிய நிறுவனங்களுடன் இனைந்து முதல் கட்டமாக சங்ககால துறைமுகங்கள் அமைந்திருந்த கொற்கை, அழகன்குளம் பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
Recommended Video

கணினிமயமாகும் சட்டசபை பதிவுகள்
சட்டமன்றத்தின் நூற்றாண்டை குறிக்கும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மன்றத்தில் 1921-ம் ஆண்டில் இருந்து நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும். பேரவையின் நிதிக்குழுக்களின் மதிப்பீடு, பொதுக்கணக்கு, பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பாட்டை வலுப்படுத்துவதற்காக உரிய அலுவலர்களுடன் கணினிமயமாக்கப்பட்ட சிறப்ப்புச் செயலகம் அமைக்கப்படும்.












Click it and Unblock the Notifications