சென்னை ஈசிஆரில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்.. எங்கு அமையப்போகிறது? தேர்வானது சூப்பர் இடம்!
சென்னை: சென்னையில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான 34 ஏக்கர் நிலம் முட்டுக்காடு பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கின்றன.
சென்னையை பொறுத்தவரை உலகத்தரமான வசதிகளுடன் கூட்டரங்கு நடத்த வேண்டும் என்றால் தற்போது கிண்டியை அடுத்து உள்ள நந்தம்பாக்கத்தில் தான் வசதி உள்ளது. ஆனால் சென்னை நந்தம்பாக்கத்தில் வர்த்தக மையம் அமைந்திருந்தாலும், வளர்ந்து வரும் தேவைக்கும், எதிர்காலத் தேவைக்கும் போதுமானதாக இல்லை என்பதே எதிர்த்தமான உண்மை.

வரும் காலங்களில் ஏராளமான மக்கள் அமரும் வகையில் பிரம்மாண்ட கூட்ட அரங்கம் சென்னையில் அமைக்க வேண்டியது அவசியம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதுபற்றி சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 2-ம் தேதி நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீட்டு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "சென்னை நந்தம்பாக்கத்தில் வர்த்தக மையம் அமைந்திருந்தாலும், வளர்ந்து வரும் தேவைக்கும், எதிர்காலத் தேவைக்கும் போதுமானதாக இல்லை.
எனவே, இதனைக் கருத்தில் கொண்டு 'கலைஞர் Convention Centre' சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய - உலகத்தரத்திலான மாநாட்டு அரங்கம், மிக பிரம்மாண்டமாக உலகத் தரத்தில் சென்னை கிழக்கு கடற்கரை பகுதியில் அமைக்கப்படும்" என்றார்.
இதனிடையே அண்மையில் ஏஆர் ரகுமான் இசை கச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் நடந்தது. இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு காரணம் சாலை அமைப்பு தான். சென்னை கிழக்கு கடற்கரை சாலையை பொறுத்தவரை சென்னையின் மிக குறுகிய நான்கு வழிச்சாலை என்று சொல்லலாம்.இன்னமும் முழுமையாக நான்கு வழிச்சாலை ஆகவில்லை. சாலையின் அகலம் மிக குறைவு. ஆனால் பக்கத்தில் உள்ள ஓம்ஆர் சாலை பெரிய நான்கு வழிச்சாலை தான். ஆனால் மெட்ரோ பணிகள் நடப்பதால் சோழிங்கநல்லூர் வரை ஏற்கனவே சொல்லவே முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பீக் அவர்ஸில் அடையாறு முதல் சோழிங்க நல்லூர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஓம்ஆர் சாலையில் தான் சென்னையின் ஐடி காரிடர் பகுதிகள் ஆகும். அங்குதான் பல்வேறு ஐடி நிறுவனங்கள் உள்ளன. இங்கு உள்ள நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் செல்லவே இந்த சாலை போதவில்லை. திருவான்மியூர் டைட்டில் பார்க் பகுதியில் உச்சகட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான் ஏஆர் ரகுமான் கச்சேரியின் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
எனவே தமிழக முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, கிழக்கு கடற்கரைசாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதியில் இடம் தேடும் பணியில் தமிழக அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வந்தார்கள். இ்ந்நிலையில், தமிழக பொதுப்பணித்துறை சார்பில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு கிராமத்துக்குட்பட்ட 34 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த இடம் உறுதி செய்யப்பட்டதும், சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் என்றும் விரைவில் இதற்கான தேசிய அளவிலான ஒப்பந்தம் கோரப்படும் என்றும் ஓராண்டில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுதிறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேநேரம் முட்டுக்காட்டில் பொது மாநாட்டு மையத்தை அமைத்தால்,மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்தில் ஏதாவது பெரிய மாற்றத்தை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் கலாச்சார மையத்தை அமைக்கும் முன்பு அதனால் ஏற்பட போகும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வை ஏற்படுத்திவிட்டு தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
இதனிடையே கலைஞர் நூற்றாண்டு விழா மாநாட்டு மையம் கட்டப்பட உள்ள இடத்திற்கு மெட்ரோ ரயில் உள்பட பல்வேறு வசதிகள் கொண்டு வரவும், அனைத்து வசதிகளுடன், ஓட்டல் மற்றும் பெரிய இருக்கை வசதி கொண்ட மாநாட்டு விழா மண்டம் அமைப்பது குறித்தும் தமிழக பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் மாநாட்டு மண்டபத்தை வடிவமைக்கும் பணியையும் தொடங்கி இருக்கிறது. கண்காட்சி அரங்கங்கள், நட்சத்திரத் தரத்திலான தங்கும் விடுதிகள், உணவகங்கள், ஊடக அரங்கங்கள், பூங்காக்கள், பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவை சர்வதேச தரத்தில் அமைக்கப்பட உள்ளதாம்.












Click it and Unblock the Notifications