மய்யத்தையும் கொஞ்சம் கவனிங்க ஆண்டவரே! கமலுக்கு ‘தக் லைஃப்’ கொடுக்கும் விஜய்! புலம்பும் நிர்வாகிகள்!
சென்னை: விக்ரம் படம் கொடுத்த மெகா வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருந்த நடிகர் கமல்ஹாசன், அரசியலை விடுத்து சினிமா பக்கம் தன் கவனத்தை திருப்பினார். ஆனால் இந்தியன்-2 படம் செம அடி வாங்கிய நிலையில், தக் லைஃப் படத்தை நம்பி இருக்கிறார். இதற்கிடையே நேற்று கட்சியை ஆரம்பித்த விஜய் கூட ஆளும் கட்சியுடன் சண்டை செய்யும் நிலையில், பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் கமல்ஹாசன் ஒரு அறிக்கை கூட விடாமல் இருப்பதால் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் நாம் எந்த கட்சியில் இருக்கிறோம் என்பது தெரியாமல் துவண்டு போயுள்ளதாக புலம்புகின்றனர்.
தமிழ் சினிமாவின் பெருமை மிகு நடிகர்கள் வரிசையில் கமல்ஹாசனுக்கு எப்போதுமே தனியிடம் உண்டு. வித்தியாசமான கதைகள், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வருவது, 50 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் இருந்தாலும், தற்போது அப்டேட்டில் இருப்பது என கமல்ஹாசனின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்..

களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய அவரது திரை பயணம், நடன உதவியாளர், நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பல்வேறு பரிணாமங்களை தாண்டி பயணித்து வருகிறது. 5 தலைமுறைகளை தாண்டி இன்னும் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் ஆண்டவர் என அழைக்கப்படும் கமல்ஹாசன்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அரசியல் எனும் மேக்கப் போட்டார் கமல்ஹாசன். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை ஆரம்பித்து சில தேர்தல்களில் போட்டியிட்டு இருந்தாலும் 2021 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது மக்கள் நீதி மய்யம். சில தொகுதிகளில் கௌரவமான ஓட்டுக்களை பெற்றாலும், கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கோவையில் பாஜகவிடம் வீழ்ந்தார்.
இதை அடுத்து ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களிலும் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட வெற்றி பெற்ற நிலையில் மக்கள் நீதி மைய வேட்பாளர்கள் குறிப்பிட தகுந்த அளவு வெற்றியைப் பெறவில்லை. அதற்கு அடுத்த நாட்களிலும் தீவிர அரசியலில் ஈடுபடாத கமல் விக்ரம், பிக் பாஸ் உள்ளிட்ட தான் சார்ந்த நிகழ்வுகளில் கவனம் செலுத்தினார்.
இதனால் அறிக்கை, ட்விட்டர் அரசியலோடு நின்று விட்டது அக்கட்சி. தொண்டர்களை சந்திப்பது பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் என அரசியல் களத்திற்கு தேவையான எதையும் கமல்ஹாசன் மேற்கொள்ளாததால் பல கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் சோர்வடைந்தனர். இதற்கிடையே ராகுல் காந்தியின் தேச ஒற்றுமை யாத்திரை மூலம் அவரது நட்பை பெற்ற கமல்ஹாசன் திமுக கூட்டணிலும் இணைந்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு சீட் ஒதுக்கப்படாத நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. இதனையடுத்து 10 தொகுதிகளில் கூட்டணிக்காக வாக்கு சேகரித்தார் கமலஹாசன். இந்த நிலையில் சினிமாவில் இருந்து அடுத்த அரசியல் வரவாக தமிழக அரசியல் களத்தில் குதித்து இருக்கிறார் நடிகர் விஜய். எடுத்த எடுப்பிலேயே பாஜக, திமுக, நாம் தமிழர் கட்சிகளை குறிவைத்து அரசியல் செய்து வருகிறார். இதனால் நேரடியாகவோ மறைமுகமாகவோ விஜய் குறித்து பேச வேண்டும் என்ற நிலைக்கு அந்த கட்சிகள் தள்ளப்பட்டு இருக்கிறது.
இப்படியாக நேற்று கட்சி ஆரம்பித்த விஜய் பரபரப்பான அரசியல் செய்துவரும் நிலையில் கடைசி படத்தில் நடித்து வருகிறார். ஆனால் தனது கேரியரின் இறுதிப் பகுதியில் இருந்த கமல்ஹாசன் ஒரு வெற்றி தேவை என போராடி வந்த நிலையில் விக்ரம் படம் அவருக்கு கை கொடுத்தது. விக்ரம் படத்தின் மெகா வெற்றியால் மீண்டும் சினிமாவில் பிஸியான கமல்ஹாசன் இந்தியன் 2 படம் வெளியான நிலையில் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. படத்தின் தோல்வியை விட கமல்ஹாசனை அதிகம் விமர்சித்தனர் நெட்டிசன்கள்.
இதனால் சிறிது காலம் அதிருப்தியில் இருந்த அவர் தற்போது மணிரத்தினத்தின் தக் லைஃப் படத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். ஒரு படத்தின் தோல்வியால் மீண்டும் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என ஆர்வம் காட்டி வரும் கமல்ஹாசன், அரசியலில் தோற்ற தனது கட்சியை மறந்து விட்டதாகவே கூறுகின்றனர் நிர்வாகிகள்.
சிறு சிறு கட்சிகள் கூட அவ்வப்போது ஆர்ப்பாட்டம், போராட்டம், அறிக்கை என அரசியல் செய்துவரும் நிலையில் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் படத்தின் டிரைலர்களையும் மட்டுமே வெளியிட்டு வருகிறார் கமல்ஹாசன். பெயருக்கு பொதுக்குழு செயற்குழு நடத்திவிட்டு எந்தவித அரசியலும் செய்யவில்லை, அவருக்கு மட்டும் மாநிலங்களவை எம்பி பதவி கிடைத்தால் போதுமா? மற்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் என்ன செய்வார்கள்? என்பது குறித்து அவருக்கு கவலையில்லையா என புலம்புகின்றனர் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள்.
அது மட்டும் அல்லாமல் ஏற்கனவே பல நிர்வாகிகள் அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு சென்று விட்ட நிலையில், கட்சியில் தொண்டர்கள் இருக்கிறார்களா என்பதே தெரியவில்லை. இப்படி இருக்க சினிமாவில் காட்டும் கவனத்தை கொஞ்சம் கட்சியின் பக்கமும் ஆண்டவர் திருப்ப வேண்டும் என புலம்புகின்றனர் நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications