மர்ம கூட்டம்.. என்னாச்சு? பரபரத்த காங்கிரஸ்! ஈவிகேஎஸ் இளங்கோவன் புகார் பற்றி கே.எஸ்.அழகிரி விளக்கம்!
சென்னை: காங்கிரஸ் கட்சி கூட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை, என்ன நடக்கிறது என்றே மர்மமாக இருக்கிறது எனக் கூறிய ஈவிகேஎஸ் இளங்கோவனின் சர்ச்சை புகார் குறித்து விளக்கம் அளித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5 மாநில தேர்தல், பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "தமிழக காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. காங்கிரஸ் கூட்டம் நடந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பத்திரிக்கையில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். யாரையும் அழைக்காமல் கூட்டத்தை நடத்தி இருக்கின்றனர். இதற்கான மர்மம் என்ன என்பதே தெரியவில்லை. கட்சியில் ஒரு கூட்டம் நடக்கிறது என்றால், எங்களை போன்றவர்களை எல்லாம் கூப்பிடுவது வழக்கம்.
இன்றைக்கு யாரையும் கூப்பிடாமல் ஒரு கூட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். அதில் என்ன பேசப்பட்டது என்றும் எனக்கு தெரியவில்லை. அதுபற்றி விசாரித்த பிறகு, அதுகுறித்து கருத்து தெரிவிக்கிறேன். முதலில் எங்களை எல்லாம் முன்னாள் தலைவர்கள் என்று சொன்னார்கள். பிறகு மூத்த தலைவர்கள் என்று சொன்னார்கள். இப்போது முடிந்து போன தலைவர்கள் என்று சொல்கிறார்கள்." எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை சீட் ஒதுக்கப்படும் என்ற கேள்வி எழுந்து வருகிறது. கடந்தமுறை தமிழ்நாட்டில் 9 + புதுச்சேரி சீட் வழங்கப்பட்டது. வரும் தேர்தலிலும் 10 தொகுதிகளை பெற காங்கிரஸ் முயன்று வருகிறது. இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மாநில தலைமையை விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தன்னை காங்கிரஸ் கட்சி கூட்டத்திற்கு அழைக்கவில்லை என்ற ஈவிகேஎஸ் இளங்கோவனின் புகார் குறித்து விளக்கம் அளித்துள்ளார் கேஎஸ் அழகிரி. ஈவிகேஎஸ் இளங்கோவன் அழைக்கப்படாததில் எங்கே தவறு நடந்தது என்று தெரியவில்லை எனக் கூறியுள்ளார் கேஎஸ் அழகிரி.












Click it and Unblock the Notifications