லக்கிம்பூர் கலவரம்: எனது மகன் அங்கு இருந்திருந்தால் உயிரோடு வந்திருக்க மாட்டான் - அஜய் மிஷ்ரா
எனது மகன் சம்பவ இடத்தில் இல்லை என்றும் அவன் அங்கு இருந்திருந்தால் உயிருடன் திரும்பியிருக்க மாட்டான். அவர்கள் மக்களை கொலை செய்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை: எனது மகன் சம்பவ இடத்தில் இல்லை என்றும் அவன் அங்கு இருந்திருந்தால் உயிருடன் திரும்பியிருக்க மாட்டான் என்று மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார். கலவரக்காரர்கள்தான் மக்களை கொலை செய்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது. அதனை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள்,வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள்.

தொடர் போராட்டம்
விவசாயிகளை அடிக்கடி பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு, வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதில் பிடிவாதமாக உள்ளது. அடுத்த ஆண்டு உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் இங்கு பாஜகவுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கறுப்புக்கொடி போராட்டம்
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி அருகே உள்ள மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கிராமத்தில் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதில் உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருந்தார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு செல்லும் பாஜக தலைவர்களுக்கு கருப்பு கொடி காட்டி விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

மோதல்
லக்கிம்பூரில் திரண்ட ஏராளமான விவசாயிகள் திரண்டு நின்றிருந்தனர். துணை முதல்வர் மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தபோது விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டனர். அப்போது விவசாயிகளுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. மோதல் பின்னர் வன்முறையாக மாறியது.

கார் மோதி மரணம்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். மேலும், பாஜக தொண்டர்கள் சிலரும் விவசாயிகளை கலைக்க முயன்றனர். துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர். இந்த விபத்தில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்த நிலையில், 8 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் குற்றச்சாட்டு
இதனையடுத்து அங்கு கடும் வன்முறை மூண்டது. இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனின் கார் உள்பட பல கார்களை விவசாயிகள் தீ வைத்து கொளுத்தினார்கள். மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் கூட்டத்தில் காரை மோத செய்தும், துப்பாக்கியால் சுட்டும் 3 பேரை கொன்றதாக விவசாயிகள் பகீர் குற்றம்சாட்டி உள்ளனர். இதனிடையே சம்பவ இடத்தில் எனது மகன் இல்லை என மிஷ்ரா விளக்கம் அளித்துள்ளார்.

மகன் இல்லை
எனது மகன் சம்பவ இடத்தில் இல்லை என்றும் அவன் அங்கு இருந்திருந்தால் உயிருடன் திரும்பியிருக்க மாட்டான். அவர்கள் மக்களை கொலை செய்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார். காரை சேதப்படுத்தியதுடன், அதற்கு தீவைத்தார்கள். எங்களிடம் வீடியோ ஆதாரம் உள்ளது. இதனால் எங்களது கார் கூட்டத்திற்குள் புகுந்தது. இருவர் உயிரிழந்தனர். அதன்பின் எங்கள் தொண்டர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர் என்றும் அஜய் மிஷ்ரா கூறியுள்ளார்.

நீதி விசாரணை கோரிக்கை
நான் காலை 9 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை பன்வாரிப்பூரில் இருந்தேன். என் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை, இந்த விவகாரம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனியின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கூறினார்.

கொடூர குற்றம்
லக்கிம்பூர் வன்முறை குறித்து சிபிஐ விசாரணை நடத்த ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது. டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், "இது போன்ற கொடூரமான குற்றம்" செய்தவர்களுக்கு "கடுமையான தண்டனை" வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications