திமுக அரசு தான் சட்டத்தின் அரசு-நீதியின் அரசாக உள்ளது.. மனித உரிமைகள் ஆணைய விழாவில் ஸ்டாலின் பேச்சு
சென்னை: சென்னையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ‛உச்சநீதிமன்ற கிளை சென்னைக்கு வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் வேண்டும்'' என உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு மேடையில் வலியுறுத்தினார். மேலும் எனது தலைமையிலான அரசு சட்டத்தின் அரசாக, நீதியின் அரசாக செயல்பட்டு வருகிறது என பெருமையாக பேசினார்.
சென்னையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கருணாநிதி உருவாக்கிய ஆணையம்
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் 25வது ஆண்டை முன்னிட்டு நடைபெறும் இந்த வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1993ல் உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் 1997ல் தான் தொடங்கப்பட்டது. நிலுவையில் இருந்த கோரிக்கையை நிறைவேற்றியவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். இதற்கான முறையான அறிவிப்பை 1997 ஏப்ரல் 16ம் தேதி முதல்வராக இருந்த கருணாநிதி அறிவிப்பு வெளியிட்டு செயல்படுத்தினார்.

ஒரே அர்த்தத்தில் வேறுவேறு சொற்கள்
அதன்படி உருவான ஆணையத்தின் வெள்ளி விழாவை தான் இன்று கொண்டாடி வருகிறோம். இதனால் மனித உரிமைகள் காக்கும் மாண்பாளராக செயல்பட்ட கருணாநிதியை இந்த இடத்தில் நினைவுக்கூறுவது பொருத்தமாக இருக்கும். மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மனித உரிமை மாண்புகள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். தந்தை பெரியார் முதன் முதலில் தான் உருவாக்கிய அமைப்புக்கு சுயமரியாதை இயக்கம் என பெயரிட்டு இருந்தார். சுயமரியாதை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியமானது. சுயமரியாதை, தன்மானம், மனிதநேயம், மனித உரிமைகள் ஆகிய அனைத்தும் ஒரு பொருளை தரக்கூடிய வேறு வேறு சொற்கள் தான்.

அரசியலமைப்பு சட்டம் சொல்லுகிறது
இதனால் தான் தனி மனித சுயமரியாதையாக இருந்தாலும், இனத்தின் தன்மானமாக இருந்தாலும், மானுட கூட்டத்தின் உரிமையாக இருந்தாலும் அவை எந்த காலத்திலும் எந்த சூழலிலும் பாதிக்கப்படக்கூடாது. பறிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக கவனமாக இருக்கிறோம். இவை எல்லாம் அரசியல் கட்சி ஒன்றின் கருத்து இல்லை. இதனை தான் அரசியலமைப்பு சட்டமும் சொல்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமை என்பது மனித உரிமை தான். சமத்துவ உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை எண்ணங்களை வெளியிடும் உரிமை, ஒன்று கூடும் உரிமை, பணிகள் செய்யும் உரிமை, மதசுதந்திரம், கல்வி உரிமை, சொத்துரிமை, பாதிக்கப்பட்டால் அதற்கு தீர்வு காணக்கூடிய உரிமை ஆகிய பல்வேறு உரிமைகளை அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. இதனை காக்கும் உரிமை அனைத்து அரசிடமும் உள்ளது. இதனை காக்கும் பணியில் இருந்து நாங்கள் ஒருநாளும் தவற மாட்டோம்.

சட்டத்தின் அரசாக...
எனது தலைமையிலான அரசு சட்டத்தின் அரசாக, நீதியின் அரசாக செயல்பட்டு வருவதை நன்றாக அறிவீர்கள். எனவே தான் நீதித்துறை கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி வருகிறோம். நீதித்துறை உள்கட்டமைப்பு மேம்படுத்த நிலம் வழங்கப்பட்டுள்ளது. சேமநல நீதி உயர்த்தப்பட்டுள்ளது.

பணியிடங்கள் நிரப்பப்படும்
மேலும் இந்த விழாவில் சில அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன். அதன்படி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஆணையத்தின் விசாரணை குழுவில் காவல்துறையின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக கூறி உள்ளனர். இதுபற்றி ஆய்வு நடத்தி முடிவு செய்யப்படும். மனித உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள் விளிம்பு நிலை மக்களுக்காக போராடி வருபவர்களையும் இதில் பயன்படுத்தி கொள்வது பற்றி ஆராயப்படும்.

தமிழில் இணையதளம்
மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும். மனித உரிமை தகவல்கள் தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிடப்படும். மாநில மனித உரிமை கொள்கை, கோட்பாடுகள் குறித்தும் அதனை பின்பற்றுவது பற்றியும் அனைத்து தரப்புக்கும் அறிவுறுத்துவது குறித்து பயிற்சி முகாம் நடத்தப்படும். எந்தவொரு தனிமனிதனின் உரிமையும் மீறப்படக்கூடாது. எத்தகைய சமூகமும் இழிவுப்படுத்தப்படக்கூடாது. யாரும் சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பிவிடக்கூடாது ஆகிய மூன்றும் தான் திமுக அரசின் மனித உரிமை கொள்கையாகும்.

சென்னையில் உச்சநீதிமன்ற கிளை
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் எனது கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். பொதுமக்கள், வழக்கறிஞர்கள் பயன்பெரும் வகையில் உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழி ஆக்கப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சியில் மக்களின் கோரிக்கையை இவை அமைத்துள்ளன'' என்றார்.












Click it and Unblock the Notifications