அதிமுகவின் இரட்டை தலைமை தோல்வியா? சசிகலா தேவையா? என்ன சொல்கிறது தேர்தல் கள நிலவரம்
சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய தோல்வியை எதிர்கொண்டிருக்கிறது. அதிமுகவின் இரட்டை தலைமைக்கு கிடைத்த தோல்வியாகவும் சசிகலா போல ஒற்றை தலைமையை முயற்சித்துப் பார்க்க வேண்டிய தருணம் இது என்கின்றனர் அக்கட்சியின் மூத்த தலைவர்கள்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கிவிட்டு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பொறுப்பேற்றனர். அதிமுக வரலாற்றில் முதல் முறையாக இரட்டை தலைமை உருவாக்கப்பட்டது.
அதேபோல் முதல் முறையாக அதிமுகவில் வலிமை வாய்ந்த பொதுச்செயலாளர் பதவி என்பது இல்லாமல் ஆக்கப்பட்டது. இப்படி இரட்டைத் தலைமையுடன் இயங்கிய அதிமுக பொதுவாக ஒவ்வொரு பிரச்சனையிலும் உட்கட்சி மோதல்களால் திணறித்தான் போனது.
பரபரப்பு பேச்சு.. சாவர்க்கரை மன்னிப்பு கடிதம் எழுத சொன்னதே காந்திதான்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

முட்டி மோதிய இரட்டை தலைமை
சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக திடீரென வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீட்டை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் தென்மாவட்டங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனை அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் ரசிக்கவில்லை. அவர்கள் நினைத்தது போல தேர்தல் பிரசாரத்தின் போது கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிட்டது. இந்த எதிர்ப்புகளைப் பற்றி இன்னொரு தலைமையான எடப்பாடி பழனிசாமி கண்டு கொள்ளவில்லை. சசிகலா, தினகரனை கட்சியில் சேர்த்துக் கொண்டால் அதிமுக வலிமை பெறும் என்பது ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் இந்த இருவரையும் ஒருபோதும் அதிமுகவில் சேர்க்கவே முடியாது இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் திட்டவட்டமாக கருத்தாக இருந்தது. வேட்பாளர்கள் தேர்விலும் ஒருங்கிணைப்பாளர் என்கிற வகையில் தமது கை ஓங்கி இருக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் அப்போது ஆட்சி அதிகாரம் கையில் இருந்ததால் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தாம் நினைத்ததையே சாதித்தார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் அதிருப்தியை காட்டியது.

திசைக்கொரு துருவங்கள்
தேர்தல் களத்தின் போது யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே கடும் மோதல் வெடித்தது. இது தொடர்பாக பல கட்டங்களாக நடந்த ஆலோசனைகளின் முடிவில் எடப்பாடி பழனிசாமியே ரேஸில் வென்றார். அப்போதும் ஓ.பன்னீர்செல்வம் கையறு நிலையில்தான் இருந்தார். சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதும் இருவரும் இணைந்து செயல்படாமல் யார்தான் பெரியவர் என பார்த்துவிடுவோமே என்கிற கோதாவிலேயே குறியாக இருந்தனர். இதனால் 2 சட்டசபை தேர்தல்களில் தொடர் வெற்றியைப் பெற்ற அதிமுக தோல்வியைத்தான் சந்திக்க முடிந்தது. ஆட்சி அதிகாரத்தை திமுகவிடம் பறிகொடுத்தது. ஆனாலும் ஒரு கவுரமான இடங்களை அதிமுக பெற்றது ஆறுதலாகத்தான் பார்க்கப்பட்டது.

தேர்தலுக்குப் பின்னும் ஓயவில்லை
சட்டசபை தேர்தல் முடிந்த பின்னரும் இரட்டை தலைமையின் அதிகார சண்டை ஓயவில்லை. யார் எதிர்க்கட்சித் தலைவர் என இருவரும் முட்டி மோதினர். அதிலும் எடப்பாடி பழனிசாமிதான் வென்றார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஏற்கவே முடியாது என்கிற மனநிலையில்தான் ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அதாவது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக தாம் இருந்தாலும் எப்போதும் நெம்பர் 2 என்கிற நிலைக்கே தாம் தள்ளப்படுவதை கண்டு குமுறிக் கொண்டிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின்னர் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து பேச்சு எழுந்தது. அப்போதும் கூட எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியது. ஒருகட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பேச வேண்டிய நிலையையும் உருவாக்கினார் எடப்பாடி பழனிசாமி.

குமுறலை கொட்டிய ஓபிஎஸ்
இத்தனை குமுறல்களையும் மனதில் வைத்திருந்த ஓ.பன்னீர்செல்வம், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின் போது பகிரங்கமாகவே சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து பேசினார். தேர்தலின் போது தலைவர்கள் மேற்கொண்ட வியூகங்களால்தான் அதிமுக தோற்றது என ஓ.பன்னீர்செல்வம் பேசினார்; செல்லூர் ராஜூ போன்றவர்களும் பேசினர். அதாவது எடப்பாடி பழனிசாமி அணியின் வியூகங்களால்தான் அதிமுகவுக்கு தோல்வி கிடைத்தது என்று பகிரங்கமாகவே சொன்னது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு. அத்துடன் அதிமுக மாஜி அமைச்சர்கள் மீதான அடுத்தடுத்த ஊழல்கள், கோடநாடு கொலை-கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் தொடர்பு குறித்த விவாதங்கள் என உள்ளாட்சித் தேர்தல் களம் அத்தனையும் அதிமுகவுக்கு எதிராகவே இருந்தன. இதனைத்தான் தற்போதைய தேர்தல் முடிவுகளும் வெளிப்படுத்தி இருக்கின்றன.

அதிமுகவுக்கு பெருந்தோல்வி
அதிமுக ஆளும் கட்சியாக இருந்த போது 2019-ல் நடத்திய உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு இணையான இடங்களைப் பெற்றது. ஆனால் இப்போது அதிமுக தலைவர்களே கனவிலும் நினைக்காத பெருந்தோல்வியை சந்தித்துள்ளனர். 140 மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெறும் 2 இடங்கள்தான் அதிமுகவுக்கு என்பதெல்லாம் சரித்திரம் காணாத தோல்விதான். அதேபோல் ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 990 இடங்களில் திமுக போய்விட 200 இடங்களுக்கே அதிமுக போராடுவதும் அக்கட்சியின் தொண்டர்களுக்கு மிகப் பெரும் துயர செய்திதான். அதிகாரத்தில் இருந்த போது பெருமிதத்துடன் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சொன்ன இரட்டை தலைமை என்பது அதிமுகவுக்கு எப்படியான தேர்தல் முடிவுகளை தந்திருக்கிறது என்பது சுய பரிசோதனைக்குரியதாகவே அவர்கள் பார்த்தாக வேண்டும்.

அதிமுக தலைவர்கள் என்ன செய்ய வேண்டும்?
கோடிக்கணக்கான தொண்டர்களைக் கொண்டிருக்கும் அதிமுக எனும் பேரியக்கம் இப்படி சிறுத்துப் போய்விட்ட சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு இரட்டை தலைமை வேண்டாம்; வலுவான ஒற்றைத் தலைமைதான் அவசியம் என்பது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும். அதேபோல் வலிமையான ஒரு ஒற்றைத் தலைமையை உருவாக்குவது குறித்தும் ஆராய வேண்டும். அந்த வலிமையான ஒற்றைத் தலைமையாக சசிகலாவை ஏன் முன்னிறுத்தியும் பார்க்கக் கூடாது என்பது குறித்தும் அதிமுகவினர் விவாதிக்கலாம். ஒருவேளை சசிகலா, தினகரன் என அனைவரையும் இணைத்து சசிகலா என்கிற ஒற்றை தலைமையின் கீழ் அதிமுக ஒருமித்து நின்றால் சட்டசபை தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் அமமுகவால் ஏற்பட்ட சேதாரங்களை இனிவரும் காலங்களில் தவிர்த்துவிடலாம்; சட்டசபை தேர்தலில் அமமுகவால் மட்டுமே பல தொகுதிகளை அதிமுக இழந்தது. அமமுக தனிக்கட்சியாக இல்லாமல் இருந்திருந்தால் திமுகவுக்கு மிகக் கடுமையான ஒரு நெருக்கடியை சட்டசபை தேர்தலில் நிச்சயம் அதிமுகவால் தந்திருக்க முடியும் என்பது கண்கூடான உண்மை. அதே நிலைமைதான் தற்போதைய உள்ளாட்சித் தேர்தல் களமும் சொல்லும் பாடமும். ஆகையால் இரட்டை தலைமை இனி தேவையா? ஒற்றைத் தலைமையாக சசிகலாவை ஏற்பதா? என்பது குறித்து உறுதியான முடிவெடுக்க வேண்டியது அதிமுக மூத்த தலைவர்கள் என்கின்றனர் அக்கட்சியின் நிர்வாகிகள்.