உஷார்.. எச்சில் தொடாதீங்க.. ஊதாதீங்க.. தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை
சென்னை: மளிகை, இறைச்சி, உணவுப்பொருட்களை வாங்கும் பை உறைகளை எச்சில் தொட்டு எடுக்கவோ, வாயால் ஊதவோ கூடாது என்று வணிகர்களை தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.பொது ஊரடங்கின்போது சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு தளர்வுகளும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.

பார்சல் சேவை மட்டும்
உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க அனுமதிக்கப்பட்டது. உணவக பார்சல் சேவையில் உறைகளின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளது. மளிகை கடைகளும், இறைச்சி மற்றும் மீன் கடைகளும் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதித்த நிலையில் அந்த கடைகளிலும் உறைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

எச்சில் தொடக் கூடாது
உறைகளை எடுக்கும் போது கடை ஊழியர்கள் எச்சில் தொட்டு உறைகளை எடுப்பது, பொருட்களை உள்ளே போடுவதற்காக வாயால் ஊதுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது கொரோனா தொற்று பரவுவதற்கு வழிவகுக்கும். எனவே, என்பதால் இதனைத் தவிர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.

உயர் நீதிமன்றம் உத்தரவு
சமீபத்தில் இது தொடர்பான பொது நல வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடைகளின் ஊழியர்கள் உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை பார்சல் செய்யும் போது உறைகளை கையால் எச்சில் தொட்டு பிரித்தல், வாயால் ஊதுதல் போன்ற செயல்களால் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது. இது குறித்து கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தவும் அவர்கள் அத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

கடை உரிமையாளர்கள்
உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை பார்சல் செய்யும் போது உறைகளை கையால் எச்சில் தொட்டு எடுத்தல், வாயால் ஊதி பிரித்தல் போன்ற செயல்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதை கடை உரிமையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஊழியர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி, அத்தகைய செயல்பாடுகளில் ஊழியர்கள் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்." இவ்வாறு ஜெ.ராதாகிருஷ்ணன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications