1000 ரூபாயை தாண்டியது வீட்டு கேஸ் சிலிண்டர் விலை... இல்லத்தரசிகள் அதிர்ச்சி
வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது.
சென்னை: பெட்ரோல் டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து தமிழகத்தில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.50 அதிகரித்துள்ளது. இதன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1015ஆக விற்பனையாகிறது.
Recommended Video

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. கடந்த 29 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. என்றாலும் வணிக பயன்பாட்டிற்காக சிலிண்டர் விலையும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து அந்நாட்டு மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்தன. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடான ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்தது.

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர்
மே மாதத்தின் முதல் நாளில் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்களின் விலையை ஒரு சிலிண்டருக்கு 104 ரூபாய் வரை உயர்த்தின. தலைநகர் டெல்லியில் 19 கிலோ வணிக எரிவாயுவின் விலை தற்போது சிலிண்டருக்கு ரூ.102.50 அதிகரித்து ரூ.2,355 ஆக உள்ளது.

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு
2 மாதங்களுக்கு பிறகு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1015ஆக விற்பனையாகிறது இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கவலையடைந்துள்ளனர்.

அடுத்தடுத்து அதிர்ச்சி
ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை 110 ரூபாயை கடந்து உள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வர்த்தக சிலிண்டருக்கான விலையும் உயர்த்தப்பட்டதால் உணவகம், பேக்கரி உள்ளிட்ட தொழில்கள் நடத்தும் வியாபாரிகள் உணவுப்பொருட்களின் விலையை மீண்டும் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

விலை உயர்வு எவ்வளவு தெரியுமா?
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. பின்னர் இது படிப்படியாக அதிகரித்து கடந்த அக்டோபர் 6ஆம் தேதி ரூ.915.50 ஆக உயர்ந்தது. மார்ச் மாதம் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ. 965 ஆக விற்பனையானது. இன்றைய தினம் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சமையல் எரிவாயு ரூ.1015 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் 5 மாதங்களில் ரூ. 100 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 17 மாதங்களில் சமையல் எரிவாயு ரூ.315 அதிகரித்துள்ளது குறிப் பிடத்தக்கது.

இல்லத்தரசிகள் அதிர்ச்சி
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கெனவே சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. விநியோக ஊழியர்களுக்கான டிப்ஸ்ஸையும் சேர்த்தால் வீட்டு மாத பட்ஜெட்டில் சிலிண்டருக்காக மட்டும் ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications