ஓட ஓட விரட்டி கொல்லப்பட்ட ரவுடி.. 3 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: முன்விரோத தகராறில் ரவுடியை கொலை செய்த வழக்கில் மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்தவர் சத்யராஜ். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு தனது சகோதரியுடன் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு எதிரே இவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்விரோதம் காரணமாக மூன்று பேர் கொண்ட கும்பல் சத்யராஜை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர்.

இதில் படுகாயமடைந்த சத்யராஜுக்கு ஓமந்தூரர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில், மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக விஜி என்பவர் சரணடைந்த நிலையில், அப்பன் ராஜ், வேலு ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஆறாவது கூடுதல் நீதிமன்றம், மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து கடந்த 2017-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து, இந்த மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கானது, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டீக்காராமன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொலை செய்யப்பட்ட சத்யராஜின் சகோதிரி அளித்த சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும், தங்களுக்கு எதிராக போதிய சாட்சிகள் இல்லை எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அனைத்து சாட்சிகளையும் முறையாக ஆய்வு செய்தே கீழமை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளதால், அந்த தீர்ப்பில் தலையிட தேவையில்லை எனக்கூறி, மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து, அவர்களுக்கான ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications