"மணல் கொள்ளை.." செந்தில் பாலாஜி மீது கமல்ஹாசன் நேரடி அட்டாக்.."இதுதான் ம.நீ.ம" கொதிக்கும் டுவிட்டர்
சென்னை: ஸ்டாலின் முதல்வரானதும், மாட்டு வண்டியில் போய் ஆற்று மணலை அள்ளி வரலாம் என்று கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி பேசியதற்கு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டவுடன் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள இருக்கும் தடைகள் அகலும் என்றும், இதை தடுக்கும் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்றும் முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதி திமுக வேட்பாளருமான செந்தில் பாலாஜி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் பேருந்து நிலையம் அருகே திமுக தேர்தல் பணிமனை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்கள் மத்தியில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

செந்தில் பாலாஜி பேச்சு
செந்தில் பாலாஜி கூறியது இதுதான்: ஸ்டாலின் முதல்வராக 11 மணிக்கு பதவியேற்றார் என்றால், 11.05 மணிக்கு மாட்டுவண்டியை எடுத்துக் கொண்டு நீங்கள் ஆற்றுக்குள் ஓட்டுங்கள். எந்த அதிகாரியும் உங்களைத் தடுக்க மாட்டான். தடுத்தால் எனக்கு போன் செய்யுங்கள். அந்த அதிகாரி இங்கே இருக்க மாட்டார்கள். இவ்வாறு செந்தில் பாலாஜி பேசும்போது திமுகவினர் ஆரவாரம் செய்து கை தட்டுகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
|
மணல் கொள்ளை
இந்த நிலையில்தான், கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதோ கமல்ஹாசன் டுவிட்டர் பதிவுகள்: தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவங்கி விடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி. எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர்.
|
கொலைவெறி தாக்குதல்
அதன் காரணமாக கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான பின்னும் அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர். இதுதான் கழகங்களுக்கும் மநீமவிற்கும் உள்ள வித்தியாசம். இவ்வாறு கமல்ஹாசன் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

திமுக வாதம்
ஆனால், திமுகவினர் செந்தில் பாலாஜி பேச்சில் தப்பில்லை என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருவதையும் பார்க்க முடிகிறது. கரூரில் இயந்திரம் மூலம் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் தேவைக்கு மட்டும் முறையாக மாட்டு வண்டி மூலம் அள்ள அனுமதி இருக்கிறது. ஆனால் அதிகாரிகள், அதை அனுமதிக்காமல் மறைமுகமாக இயந்திரம் மூலம் மணல் அள்ளுவோருக்கு உடந்தையாக இருக்கின்றனர். எனவே மாட்டு வண்டி மூலம் மணல் எடுக்க அனுமதி தர வேண்டும் என்பது உள்ளூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. அதைத்தான் செந்தில் பாலாஜி கூறியுள்ளார் என்கிறார்கள், அவர்கள்.












Click it and Unblock the Notifications