சாந்தினி புகாரில் மாட்டிக் கொண்ட மாஜி மணிகண்டன்.. "கண்ணால் கண்ட" சாட்சிகளிடம் போலீஸ் தீவிர விசாரணை
சென்னை: துணை நடிகை சாந்தினியுடன் குடும்பம் நடத்திவிட்டு 3 முறை கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக பல்வேறு ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன.
சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் படத்தில் நடித்த இவர் மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்றவர்.
இவர் சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த ஒரு புகார் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6 பக்க புகார்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதுதான் பக்கம் பக்கமாக மொத்தம் 6 பக்கங்களில் புகார் பட்டியல் கொடுத்தார் சாந்தினி. மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உடல் உறவு வைத்தார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன் மனைவி போல சென்னையில் ஒரே வீட்டில் வாழ்ந்தோம். அதனால் 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். ஆனால் அவரது மிரட்டலின் பேரில் அவரது மருத்துவ நண்பர் மருத்துவமனையில் வைத்து கரு கலைக்கப்பட்டது. இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். அடிக்கிறார், உதைக்கிறார். காப்பர்-டி போட வைத்து உறவு வைத்ததால், எனக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறு தனது புகார் மனுவில் நடிகை சாந்தினி தெரிவித்து இருந்தார்.

மணிகண்டன் மறுப்பு
இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த புகாரை மணிகண்டன் மறுத்து பேட்டி கொடுத்தார். நடிகை சாந்தினி யார் என்றே எனக்கு தெரியாது என்றும் பணம் பறிக்கும் கும்பல் பின்னணியில் இந்த பொய்யான புகார் கொடுக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.

தொழில்நுட்ப கருவிகள்
அதேநேரம், சாந்தினி வெறும் தகவல் தொழில்நுட்ப ஆதாரங்களான வாட்ஸ்அப், டெலிகிராம் உரையாடல் போன்றவற்றை மட்டும் ஆதாரமாக சமர்ப்பிக்கவில்லை. சாந்தினி-மணிகண்டனின் நெருக்கத்தை கண்ணால் கண்ட சாட்சிகள் இருப்பதுதான் இந்த வழக்கின் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

கண்ணால் கண்ட சாட்சிகள்
ஏனென்றால் 5 வருடங்கள் ஒரு வீட்டில் இருவரும் இருந்துள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. அமைச்சர் காரில் அவரோடு தான் வலம் வந்ததாக சாந்தினி கூறியுள்ளார். எனவே சாட்சிகள் அவசியம். அந்த வகையில், இந்த நடவடிக்கைகளுக்கு சாட்சிகளாக சாந்தினி குறிப்பிட்டுள்ள பெயர்கள், மணிகண்டனின் உதவியாளர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர். ஏனென்றால் இவர்கள்தான் எப்போதுமே மணிகண்டனுடன் இருந்தவர்கள்.

வரிசையாக ஆதாரங்கள்
இதையடுத்து, மணிகண்டனின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி கவுரீஸ்வரன் மற்றும் உதவியாளர் சரவண பாண்டி ஆகியோர் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து 2 பேரும் நேற்று ஆஜரான நிலையில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் சாந்தினி குற்றச்சாட்டு தொடர்பாக நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று கூறப்படுகிறது. கருக்கலைப்பு செய்த டாக்டரிடமும் விசாரணை நடைபெற உள்ளது. வரிசையாக வரிசைகட்டி நிற்கும் ஆதாரங்களால் மணிகண்டன் கைது செய்யப்பட வாய்ப்பு உருவாகியுள்ளது. பெரும் சிக்கலில் சிக்கியுள்ளார் மாஜி அமைச்சர்.












Click it and Unblock the Notifications