சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொன்விழா ஆண்டு... எம்.ஜி.ஆர்., ஜெ. போல ஒற்றைத் தலைமைக்கு தவமாய் தவமிருக்கும் அதிமுக தொண்டர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக என்கிற கட்சி உருவாகி இப்போது பொன்விழா ஆண்டு கொண்டாடுகிறது. 1972-ல் கட்சியை தொடங்கி 1977-ல் ஆட்சியையே கைப்பற்றிய அளவுக்கு தொண்டர்கள் பலம், மக்கள் செல்வாக்கு பெற்ற அதிமுக இப்போது வலிமையான ஒற்றை தலைமை இல்லாமல் கோஷ்டிகளுக்கு இடையே அல்லாடிக் கொண்டிருப்பது அதன் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இலங்கையின் கண்டியில் பிறந்து இந்தியாவின் கேரளா மாநிலம் பாலக்காடு, தமிழகத்தின் கும்பகோணம் என வளர்ந்து இன்றைய மியான்மர் எனப்படும் பர்மாவின் ரங்கூன் நகரில் நாடகங்கள் நடித்து கால் நூற்றாண்டுகாலத்துக்கும் மேலான இடைவிடாத போராட்டத்தின் மூலம் திரை உலகில் நாயகனாக இடம் பிடித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். காங்கிரஸ் கட்சியின் அனுதாபியாக இருந்த எம்.ஜி.ஆரை மறைந்த முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் திராவிட அரசியலுக்குள் கொண்டு வந்தனர்.

3 சீனியர்கள்.. 3 சீனியர்கள்..

ஒருகட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டை முகங்களாகவே கருணாநிதியும் எம்ஜிஆரும் திகழ்ந்தனர். 1962-ல் எம்.எல்.சி, 1967-ல் எம்.எல்.ஏ., 1969-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் என அடுத்தடுத்த அரசியல் உச்சங்களைத் தொட்டு வந்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜிஆரும் திமுகவும்

எம்.ஜிஆரும் திமுகவும்

1969-ல் முதல்வராக இருந்த அண்ணா காலமானார். அப்போது திமுகவின் அடுத்த தலைவர் யார் என்பதில் நாவலர் நெடுஞ்செழியனுக்கும் கருணாநிதிக்கும் போட்டி ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். தமது ஆதரவை நண்பரான கருணாநிதிக்கு வெளிப்படுத்தினார். அதனால் திமுக எனும் கட்சி கருணாநிதி வசமானது. திமுகவின் தலைவராக வாழ்நாள் முழுவதும் கருணாநிதியே இருந்தார். ஆனால் எம்ஜிஆர், கருணாநிதியின் நட்பு அண்ணா மறைந்து 3 ஆண்டுகளிலேயே கசப்பை எதிர்கொண்டது. திமுக தலைவர்களின் சொத்துகள் குறித்த விவகாரத்தில் பொருளாளர் பதவியில் இருந்து எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்தார் கருணாநிதி. எம்.ஜி.ஆரை ஓரம்கட்டலாம் என கணக்குப் போட்டுதான் தூக்கி அடித்தார் கருணாநிதி. ஆனால் காலம் எம்ஜிஆரை முதல்வர் நாற்காலியில் அமரவைத்தது. எம்ஜிஆர் மறையும் வரை கருணாநிதியால் முதல்வராகவே முடியாத ஒரு துயர வரலாறும் நிகழ்ந்து போனது.

அதிமுக, எம்ஜிஆர், ஜெ.

அதிமுக, எம்ஜிஆர், ஜெ.

1972-ல் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர், அண்ணா திமுக எனும் கட்சியை தொடங்கினார். தமது அண்ணா திமுக, அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றும்; அண்ணாயிசம் என்றெல்லாம் சொன்னவர் எம்ஜிஆர். சினிமா கவர்ச்சியால் லட்சக்கணக்கான ரசிகர்களை தன்வயப்படுத்திய எம்ஜிஆர், அவர்கள் மூலமாகவே அரசியலில் அமோகமான வெற்றியைப் பெற்றார். 1973-ம் ஆண்டு திண்டுக்கல் இடைத்தேர்தலில் தொடங்கிய அதிமுகவின் வெற்றி 1987-ல் எம்.ஜி.ஆர் மறையும் வரை தொடர்ந்த ஒன்றாகத்தான் இருந்தது. எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை டெல்லியில் அரசாண்ட காங்கிரஸுடன் நெருக்கமான கூட்டணியை கொண்டிருந்தார். லோக்சபா தேர்தல்களில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளைத் தருவதும் சட்டசபை தேர்தல்களில் அதிமுக அதிக இடங்களில் போட்டியிடுவதுமான பார்முலாவையும் பின்பற்றினார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். தமது அரசியல் வாரிசாக ஜெயலலிதாவை கட்சிக்குள் கொண்டு வந்தார். கொள்கை பரப்புச் செயலாளர், ராஜ்யசபா எம்.பி. பதவி என ஜெயலலிதாவுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்தார் எம்.ஜி.ஆர். இன்னமும் சொல்லப் போனால் அதிமுகவை தமக்குப் பின்னால் வழிநடத்தக் கூடியவராக ஜெயலலிதாவை எதிர்பார்த்தார் எம்ஜிஆர். அதனால் ஜெயலலிதாவுடன் முரண்பட்டவர்களை எல்லாம் முறைத்துக் கொண்டே இருந்தார் எம்.ஜி.ஆர். ஒருகட்டத்தில் ஒரேடியாக 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தும் பரபரப்பை கிளப்பினார். எம்ஜிஆர் உயிருடன் இருந்த போதே ஜெயலலிதாவுக்கு அதிமுகவில் சீனியர்களான நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், எஸ்.டி.எஸ். என பலரும் கடுமையாக எதிர்ப்பை காட்டித்தான் வந்தனர். அதனால்தான் எம்ஜிஆர் மறைந்த போது அதிமுக பிளவை சந்திக்க வேண்டிய கட்டாயம் வந்தது. எம்ஜிஆர் போட்ட கணக்குப்படியே காலம் ஜெயலலிதாவிடம் அதிமுகவை ஒப்படைத்தது.

ஜெ. எனும் இரும்பு மனுஷி

ஜெ. எனும் இரும்பு மனுஷி

ஜெயலலிதாவை எதிர்த்து எம்ஜிஆருடன் மல்லுக்கட்டிய அத்தனை சீனியர்களையும் தனக்கு கீழே கொண்டு வந்தார் ஜெயலலிதா. அப்படியும் அந்த சீனியர்களின் குடைச்சல் ஓயவில்லை. எம்.ஜி.ஆருக்கு வலது, இடது என்றெல்லாம் ஜெயலலிதா பார்க்கவில்லை. கண்ணை மூடிக் கொண்டு அத்தனை சீனியர்களையும் பந்தாடிவிட்டார்.. கட்சியைவிட்டே துரத்திவிட்டார். ஜெயலலிதா எனும் ஒற்றைத் தலைமையின் கீழ் அண்ணா திமுக வந்தது. அந்த தலைமையின் கண்ணசைவுக்காக பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடந்தனர் அத்தனை நிர்வாகிகளும்.. எம்.ஜி.ஆரைப் போலவே தமது அமைச்சரவை சகாக்கள், கட்சி நிர்வாகிகளை தீவிர கண்காணிப்பில் வைத்திருந்தார் ஜெயலலிதா. அவர் ஒரு இரும்பு மனுஷியாக இருந்தார். ஜெயலலிதா காலத்தில் அதிமுகவின் பலம் அசைக்க முடியாத கூடுதல் வலிமையைப் பெற்றது. ஜெயலலிதா அவ்வப்போது இந்துத்துவ சித்தாந்த ஆதரவாளராக காட்டிக் கொண்டு ஆடு கோழி வெட்ட தடை, கட்டாய மதமாற்ற தடை சட்டம் என கொண்டு வந்தார். ஆனால் இந்த தமிழ் நிலத்தில் அத்தகைய போக்கு கை கொடுக்காது என்பதை புரிந்து கொண்டார். அதானால் பாஜகவை துணிச்சலாக எதிர்த்தார். ஜெயலலிதா காலத்தில் டெல்லி தலைவர்கள் போயஸ் கார்டன் கதவுகள் திறக்காதா என காத்திருந்தனர்.

ஜெயலலிதா செய்தது என்ன?

ஜெயலலிதா செய்தது என்ன?

ஜெயலலிதா ஆட்சியில்தான் தமிழகத்தின் சமூக நீதி மரபைக் காப்பாற்றும் வகையிலான 69% இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது. கோட்பாட்டளவில் அதிமுக, திமுக இரண்டும் ஒன்றுதான். திமுகவில் திராவிட சித்தாந்தப் பேச்சு உரத்து கேட்கும். அதிமுகவில் அப்படியான ஒரு பேச்சு ஒப்புக்கு சப்பானியாக கூட இருக்காது. ஜெயலலிதா மறைந்த போது அதிமுக எனும் அரசியல் கட்சியை இந்தியாவின் 3-வது மிகப் பெரிய கட்சியாக உருவாக்கி வைத்திருந்தார். எம்.ஜி.ஆரைப் போலவே திமுகவுக்கு அரியாசனம் கிடைக்கவிடாமல் அடுத்தடுத்த தேர்தல் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார் ஜெயலலிதா. ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரான காட்சிகளும் அதிமுகவின் கோலங்களும் 50 ஆண்டுகால நெடும் வரலாற்றை வேரோடும் வேரடி மண்ணோடும் வெட்டிச் சாய்த்துவிடுவார்களோ என்கிற பேரச்சத்தைத்தான் தருகிறது.

பரிதாப அதிமுக

பரிதாப அதிமுக

ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய அதிமுகவின் காட்சிகள் இவைதான்.. ஜெயலலிதா வீட்டு பணியாளராக இருந்த சசிகலாவை நம்பியது; சசிகலாவின் உறவினர் என்பதால் தினகரனை நம்பியது; ஜெயலலிதாவின் உறவினர் என்பதால் தீபாவை நம்பியது; தர்மயுத்தம் நடத்தியதால் ஓபிஎஸ்ஸை நம்பியது. முதல்வர் நாற்காலியில் அமர்ந்ததால் எடப்பாடி பழனிசாமியை நம்பியது இப்படித்தான் அதிமுக தொண்டர்களை அல்லாட வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி காலத்து அதிமுகவோ ஊருக்கு ஒரு கட்சியாக கோஷ்டிகளில் திக்கி திணறுகிறது. ஓ.பி.எஸ். எப்போது வேண்டுமானாலும் ஜெயலலிதாவின் சமாதிக்கு போய் மீண்டும் தர்ம யுத்தத்தை தொடங்குவார் என்கிற நிலைமைதான். அதே ஓபிஎஸ் எப்போது வேண்டுமானாலும் சசிகலாவுடன் கை கோர்க்கலாம் என்கிற நிலை.. சசிகலாவுடன் சமாதானமப் போவதா? சண்டை போட்டுக் கொண்டே போவதா? என்கிற குழப்பத்தில் எடப்பாடி பழனிசாமி. ஒருவேளை சசிகலாவை இணைத்துக் கொண்டால் அதற்கு எதிராக எந்த திசையில் இருந்து யார் கிளம்புவார்கள் என்பதும் தெரியாத ஒன்று.

புதுச்சேரி நிலைமை

புதுச்சேரி நிலைமை

மேலும் எந்த பாஜகவை துணிவுடன் ஜெயலலிதா எதிர்த்தாரோ அந்த பாஜகவை முதுகில் சுமந்தே ஆக வேண்டிய கட்டாயத்திலும் அதிமுக இருக்கிறது. பாஜகவின் சரித்திரமே, ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து அந்த கட்சியையே கபளீகரம் செய்வதுதான். அதைத்தான் புதுச்சேரியில் செய்து காட்டியது. புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக சட்டசபையில் இடம்பெற முடியாத அளவுக்கு தோல்வியை சந்தித்துள்ளது அதிமுக. நியமன எம்.எல்.ஏக்களையும் பாஜக தனதாக்கிக் கொண்டது; ராஜ்யசபா எம்பி பதவியையும் தனதாக்கிக் கொண்டது பாஜக. இதனால் புதுச்சேரியில் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

அதிமுக காப்பாற்றப்பட வேண்டும்

அதிமுக காப்பாற்றப்பட வேண்டும்

புதுச்சேரியில் கண்கூடாக நிகழ்ந்த அத்தகைய சூழ்நிலை தமிழகத்திலும் அதிமுகவுக்கு வருவதற்கு ரொம்ப காலமாகாது- அதிமுகவில் வலிமையான ஒற்றை தலைமை இல்லாத வரை இது விரைவில் அரங்கேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆகையால் தங்களுக்கு இடையேயான ஈகோக்களை விட்டு கொடுத்து கட்சியை காப்பாற்ற சர்வபரி தியாகத்துக்கும் தயாரான ஒரு ஒற்றை தலைமையை எவ்வளவு விரைவாக அதிமுக உருவாக்குகிறதோ அவ்வளவு நல்லது அந்த கட்சிக்கு. பொன்விழா ஆண்டை கொண்டாடும் தருணத்திலாவது அதிமுகவின் மூத்த தலைவர்களும் தொண்டர்களும் இது குறித்த ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுத்தலே இப்போதைய உடனடியான தேவை! அதிமுக, திமுக இதில் எது ஓய்ந்தாலும் அந்த இடம் பாஜகவால் நிரப்பப்படும் என்பதால் திராவிட சித்தாந்தம் கொண்டவர்கள், நடுநிலை அரசியலை விரும்புவோர் அதிமுக எனும் கட்சி காக்கப்படவேண்டும் என்கிற கருத்தை முன் வைக்கின்றனர். தமிழகத்தில் ஊழல் முறைகேடு என இரண்டுக்கட்சிகள் மீதும் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் வட மாநிலங்கள் போல் மதச்சண்டை, சாதாரண மக்களுக்கு எதிரான வன்முறை, கல்வி, மருத்துவம், பெண்கள் நிலையில் உள்ள மோசமான நிலை தமிழகத்தில் இல்லை. அமைதியான , வடமாநிலங்களைவிட அனைத்திலும் ஒருபடி மேலாக தமிழகம் உள்ளது இதற்கு திமுக, அதிமுக இரண்டுக்குமே பங்கிருப்பதை மறுக்க முடியாது என்பதால் அதிமுக பாதுகாக்கப்பட வேண்டும். அதிமுக வீறு கொண்டு எழுந்தால் திமுகவுக்கும் பலமான எதிர்க்கட்சியாக இருக்கும், உரைக்கல்லாக இருக்கும். அதற்கு ஏற்ப அதிமுக தலைமையில் உள்ளவர்கள் அதன் பொறுப்புணர்ந்து நடக்கவேண்டும் என்பதே அரசியல் ஆர்வர்லர்கள் எதிர்ப்பார்ப்பு, அதிமுக தொண்டர்களின் எண்ணமும் அதுவே.

English summary
Here is an analysis story on AIADMK's 50 years Journey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X