ஒரு கட்சி மட்டும் மதத்தை சொந்தம் கொண்டாடக் கூடாது.. பாஜகவை மறைமுகமாக தாக்கிய அமைச்சர் பிடிஆர்!
சென்னை: கார் மீது பாஜகவினர் செருப்பு வீசி தாக்குதல் நடத்திய பின்னர், முதல்முறையாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. அப்போது மதுரை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினரால் செருப்பு வீசப்பட்டது. தொடர்ந்து பாஜகவில் இருந்து நேற்று நீக்கப்பட்ட மதுரை சரவணன் அமைச்சரிடம் மன்னிப்பு கோரினார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீச்சு.. பாஜகவைச் சேர்ந்த 5 பேர் கைது!

பிடிஆர் ட்வீட்
இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அனைத்து கட்சியினரும் பாஜகவினருக்கு கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ராணுவ வீரரின் மரணத்தில் பாஜக விளம்பர அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார். அதேபோல் பல்வேறு புகைப்படங்களையும் ஆதாரமாக வெளியிட்டார்.

ஜனநாயகம்
தொடர்ந்து 75வது சுதந்திரத் தினத்தன்று சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றிய நிகழ்ச்சிக்கு பின், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவின் ஜனநாயகம் சக்தி வாய்ந்தது.

ராணுவம், அரசியல்
அதற்கு முக்கியக் காரணம் தேசப்பற்றையும், அரசியலையும் பிரித்து வைத்திருப்பதும், ராணுவத்தையும் அரசியலையும் பிரித்து வைப்பதிருப்பதும் தான். 75 ஆண்டுகள் இந்தியா ஜனநாயக சக்தியாக விளங்கியதற்கு இதுதான் மூலக்காரணம். நாகரீகம் உள்ள அரசியல்வாதிகள், தேசப்பற்றையும் ராணுவத்தையும், அரசியல் கட்சிக்குள் இழுக்கவே கூடாது.

பாஜக மீது விமர்சனம்
சீனப்போர், பாகிஸ்தான் போர், கார்கில் போர் என அண்ணா காலம் முதல் கருணாநிதி காலம் வரை திமுகவும், தமிழ்நாடும் ராணுவத்திற்கும், மத்திய அரசுக்கும் அனைத்து வகையிலும் ஆதரவளித்துள்ளோம். நாட்டுப்பற்றில் தமிழகத்தை விடவும் யாரும் மிஞ்ச முடியாது. ஏற்கனவே இந்தியாவில் உள்ள ஒரு மதத்தை அவர்கள் சொத்து போல் ஒரு கட்சி வைத்துள்ளனர்.
Recommended Video

நாட்டுக்கு நல்லதல்ல
தற்போது ராணுவத்தை, நாட்டையும் அவர்கள் சொத்து போல் இழுப்பது நாட்டிற்கு நல்லதல்ல. இதனை சுதந்திர தினத்தில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பாஜகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.