ஆளுநர் ரவிக்கு உரை திடீரென தரப்பட்டதா? வானதி வைத்த குற்றச்சாட்டு.. ஆதாரத்துடன் பதிலடி தந்த "தங்கம்"
சென்னை: நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் ஆளுநர் உரையாற்றினார். இந்த உரையில் சிலவற்றை ஆளுநர் வேண்டுமென்றே பேசாமல் தவிர்த்திருந்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சட்டப்பேரவையின் மரபுகளை மீறி சில விஷயங்கள் நடந்தன. ஆக ஆளுநர் உரை என்பது என்ன? அந்த உரை தமிழ்நாடு அரசு தயாரித்தாலும் எத்தனை நாட்களுக்கு முன்னர் ஆளுநரிடம் கொடுக்கும்? போன்ற கேள்விகள் மேலெழுந்திருக்கிறது. இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்றம் புதியதாக கூடும் போது முதல் நாளில் ஆளுநர் சிறப்புரை ஆற்றுவார். இந்த உரையில் நடப்பாண்டில் மாநில அரசு அமல்படுத்தப்பட உள்ள முக்கிய திட்டங்களின் சுருக்கம் இடம்பெற்றிருக்கும். இதனை தமிழ்நாடு அரசுதான் தயாரிக்கு அவருக்கு கொடுக்கும். இந்நிலையில் இந்த ஆண்டு ஆளுநர் உரை சர்ச்சையில் முடிந்திருக்கிறது.
கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் தமிழ்நாட்டுக்கு ஆர்.என்.ரவி ஆளுநராக புதியதாக பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் மேலெழுந்து வந்தன. குறிப்பாக பொதுவெளியில் அரசியல் சார்ந்த கருத்தை பேசி வருவது, தமிழ்நாடு அரசு இயற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திரும்ப அனுப்பியது போன்றவை தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான உரசலை மேலும் அதிகரித்தது. இப்படி இருக்கையில், இரண்டாவது ஆண்டாக சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி இன்று உரையாற்றினார்.

எதிர்ப்பு முழக்கம்
இந்த உரை தொடங்கியதுமே ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட தொடங்கினர். ஆளுநர் வெளியேற வேண்டும் என்றும், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனையடுத்து, அவரது உரையை புறக்கணித்து சட்டப்பேரவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். மாநில அரசு இயற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை என்றும், சில வார்த்தைகளை அவர் வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டார் எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இது குறித்து பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை,

விமர்சனம்
"தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டு தேவையான நலத்திட்டகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தொகுத்து அதனை ஆளுநரிடம் படிக்க வழங்கி இருக்கிறது. இதைதான் ஆளுநர் வாசிக்க வேண்டும், இதுதான் மரபு. ஆனால் இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் போல தன்னுடைய இஷ்டத்திற்கு வாசிக்கிறார். அரசு எழுதி கொடுத்த கருத்தை வாசிக்காமல் இவர் தன் விருப்பத்திற்கு எதையாவது வாசிப்பது என்பது அரசியலமைப்பை மீறுவதாகும். இந்த விமர்சனத்தை நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறோம். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறியிருந்தார்.

பாஜக குற்றச்சாட்டு
இந்நிலையில் மறுபுறம் சட்டப்பேரவையில் ஆளுநரின் உரையை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு தயாரித்துகொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக வாசிக்கவில்லை என்று கூறினார். மேலும், அவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரையின் நகலில் உள்ள வாக்கியங்கள் மட்டுமே அவை குறிப்பில் பதிவேற்றப்படும் என்று கூறி தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்படி ஆளுநர் உரைக்கு பின்னர் தீர்மானம் முன்மொழியப்படுவது தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இதுவே முதன்முறை என்று சொல்லப்படுகிறது.

உரை
இந்நிலையில் ஆளுநர் உரை குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இந்த உரையை தயாரிக்கும் பணியில் அவை நடைபெறும் நாட்களுக்கு 15 நாட்கள் முன்பே தொடங்கப்பட்டுவிடும் என்றும், இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரையானது ஆளுநருக்கு ஒரு வாரத்திற்கு முன்னரே கொடுக்கப்பட்டு விடும் என்று சொல்லப்படுகிறது. அப்படி இல்லையென்றாலும் கூட குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு முன்னரே இந்த உரை ஆளுநருக்கு கொடுக்கப்பட்டுவிடும் என்று மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். எனவே பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியதை போல திடீரென்று உரை ஆளுநருக்கு கொடுக்கப்பட வாய்ப்பில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம்
இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி செய்துள்ளார். அதாவது ஆளுநருக்கான உரை தயாரிக்கப்பட்டு கடந்த 5ம் தேதி முதலமைச்சரின் ஒப்புதல் பெறப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதனை அவர் கடந்த 7ம் தேதி ஏற்றுக்கொண்டார். இதற்கான ஆதாரமாக முதலமைச்சர் கையெழுத்திட்ட, ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக கையெழுத்திட்ட ஆவணத்தை பத்திரிகையாளர்கள் முன்பு அமைச்சர் தங்கம் தென்னரசு முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications