சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரெய்டு ஆபீசர்ஸ் டிவி பார்த்துட்டு பிரியாணி சாப்பிட்டாங்க-வெறும் கையோடு போய்ட்டாங்க.. ஸ்டாலின் கலகல

Google Oneindia Tamil News

சென்னை: தமது மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரி சோதனை நடத்திய அதிகாரிகள் காலை முதல் இரவு வரை டிவி பார்த்துவிட்டு வெறும் கையோடு திரும்பிச் சென்றுவிட்டனர் என கூறியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது ஸ்டாலின் பேசியதாவது:

சட்டமன்ற பொதுத்தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் நம்முடைய கழகத்தின் சார்பில் போட்டியிடும் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களை நீங்களெல்லாம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டுமென்று கேட்க வந்திருக்கிறேன். தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு நான் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். இப்போது என் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்றால், நான் முதன்முதலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக நின்றபோது தலைவர் கருணாநிதி எனக்காக வாக்குக் கேட்டார். அது என் நினைவிற்கு வருகிறது. அவ்வாறு அவர் ஓட்டு கேட்கும்போது, "தமிழ்நாடு முழுவதும் சுற்றி சுற்றி வந்திருக்கிறேன். கடைசியாக ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். இங்கே இருக்கும் மக்கள் ஊர் ஊராக சென்று வாக்கு கேட்கிறாய். உன் பிள்ளைக்கு வாக்கு கேட்க மாட்டாயா? என்று கேட்டு விடக்கூடாது என்பதற்காக நான் வாக்கு கேட்க வந்திருக்கிறேன்" என்று சொன்னார்.

அதேபோல நான் தமிழ்நாடு முழுவதும் வாக்கு கேட்டு விட்டேன். இவர் தமிழ்நாடு முழுதும் சுற்றுகிறார். ஆனால் அவரது பிள்ளைக்கு வாக்கு கேட்கவில்லையே என்று நீங்கள் நினைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இப்போது உங்களிடத்தில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு நம்முடைய வேட்பாளர் தம்பி உதயநிதி, "நீங்கள் மற்ற இடங்களுக்கு செல்லுங்கள். இங்கு வர வேண்டிய அவசியம் இல்லை. இங்கு வெற்றி உறுதியாகிவிட்டது" என்று சொன்னார். ஆனால் "நீ சொல்லலாம், ஆனால் அந்த தொகுதியில் இருக்கும் மக்கள் என்னை சும்மா விடமாட்டார்கள். அதனால் நிச்சயம் நான் வந்து வாக்கு கேட்பேன்" என்று முடிவு செய்து இதற்காக தேதி குறித்து, நேரத்தை குறித்து, நானே வந்து இருக்கிறேன். இந்த தொகுதிக்கு ஒரு பெரிய சிறப்பு உண்டு.

என்னதான் மோடி வந்தாலும், அமித்ஷா வந்தாலும், அது ஜீரோ தான். நாம் தான் ஹீரோ... மு.க.ஸ்டாலின்என்னதான் மோடி வந்தாலும், அமித்ஷா வந்தாலும், அது ஜீரோ தான். நாம் தான் ஹீரோ... மு.க.ஸ்டாலின்

கருணாநிதி அன்பழகன்

கருணாநிதி அன்பழகன்

நம்முடைய தலைவர் கருணாநிதி இந்தத் தொகுதியில் மூன்று முறை நின்று மூன்று முறையும் அமோகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல நம்முடைய பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் இந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவ்வாறு வரலாற்றில் இடம்பெற்ற இந்த தொகுதியில் இன்றைக்கு தலைவர் கலைஞருடைய பேரனாக இருக்கும் என்னுடைய மகன் உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக நிற்கிறார். அவரைச் சிறப்பான வகையில் வெற்றி பெற வைத்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வரும் ஆறாம் தேதி மறந்துவிடாமல் நீங்கள் அத்தனை பேரும் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்.

ஊடக கருத்து கணிப்புகள்

ஊடக கருத்து கணிப்புகள்

இன்று பிரச்சாரத்தின் நிறைவு நாள், 7 மணியுடன் பிரச்சாரம் முடிவடைய இருக்கிறது. ஊடகங்களில் பத்திரிகைகளில் தொலைக்காட்சிகளில் கருத்துக்கணிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை முழுமையாக ஏற்றுக் கொள்வது நமக்கு வழக்கமல்ல, பழக்கமல்ல. நாம் நம்முடைய பணியைத்தான் செய்ய வேண்டும். அதுதான் கலைஞர் அவர்கள் நமக்கு தொடர்ந்து சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதைத்தான் இப்போது நாம் கடைப்பிடிக்கிறோம். அதைப் பார்த்து ஏமாந்து விட மாட்டோம். ஆனால் அந்த கருத்துக் கணிப்புகள் ஆளுங்கட்சிக்கு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே அந்த அச்சத்தின் காரணமாக தோல்வி பயத்தின் காரணமாக ஏதேதோ உளற ஆரம்பித்திருக்கிறார்கள். இன்றைக்கு காலையில் இந்து, தினமணி, தினமலர், தினத்தந்தி என எல்லா பத்திரிகைகளிலும் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் கொடுத்திருக்கிறார்கள். அதாவது திராவிட முன்னேற்றக் கழகம் செய்த தவறுகள் என்று தலைப்புச் செய்திகளாக போட்டு இன்றைக்கு தி.மு.க. பெறவிருக்கும் வெற்றியை எப்படியாவது தடுத்திட வேண்டும் என்று அந்த முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதிமுகவின் வரலாறு

அதிமுகவின் வரலாறு

ஆனால் நான் கேட்கிற ஒரே கேள்வி, கடந்த பத்து வருடங்களாக தமிழ்நாட்டில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள்? அ.தி.மு.க. தான் ஆட்சியில் இருக்கிறது. நம் மீது ஏதாவது தவறு இருந்திருந்தால், அவர்கள் விளம்பரம் கொடுத்து இருக்கிறார்கள் அல்லவா, அதை உண்மை என்று நிரூபித்து, அது சம்பந்தமாக இதுவரை நம் மீது ஏதாவது வழக்கு போட்டு இருக்கிறார்களா? ஒரு வழக்கு உண்டா? அவ்வாறு வழக்கு போட்டாலும் அவை நிரூபிக்கப்பட்டிருக்கிறதா?கடந்த பத்து ஆண்டுகளாக நாம் ஆட்சியில் இல்லை. அவர்கள் போட்டிருக்கும் செய்தி உண்மையாக இருந்திருந்தால் நம் மீது வழக்குப் போட்டு இருக்க வேண்டும். நம்மை கைது செய்திருக்க வேண்டும். அதற்கு உரிய தண்டனை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கொடுக்கவில்லை. ஆனால் நேர்மாறாக நடந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கட்சியின் யோக்கியதை என்னவென்று கேட்டீர்கள் என்றால் ஜெயலலிதா அவர்களின் முதலமைச்சரின் பதவியே பறிபோனது உங்களுக்கு தெரியும். அவர் சிறைக்குப் போன கதை உங்களுக்குத் தெரியும். எனவே ஒரு ஆட்சியில் முதலமைச்சராக இருப்பவர் ஊழல் நிரூபிக்கப்பட்டு சிறைக்கு சென்ற வரலாறு தான் அ.தி.மு.க.வின் வரலாறு என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

மகள் வீட்டில் ரெய்டு

மகள் வீட்டில் ரெய்டு

கடந்த பத்து ஆண்டுகாலம் நீங்கள் ஆட்சியில் இருந்தபோது அதைப் பற்றி சிந்திக்காதவர்கள், நினைக்காதவர்கள். இன்றைக்கு தேர்தலுக்கு இரண்டு நாளைக்கு முன்பு இப்படி ஒரு விளம்பரத்தை கொடுத்து மக்களை திசை திருப்ப நினைக்கிறீர்கள். அது ஒருக்காலும் நடக்காது. உங்களுக்கு தக்க பதிலடியை வரும் ஆறாம் தேதி மக்கள் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை நான் அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு என்னுடைய மகள் வீட்டில் சோதனை செய்தார்கள். அங்கு வந்து காலையிலிருந்து இரவு வரைக்கும் உட்கார்ந்து டிவி பார்த்தார்கள். டீ குடித்தார்கள். பிரியாணி வாங்கி வரச் சொல்லி சாப்பிட்டார்கள். அவ்வாறு செய்துவிட்டு, "இன்னும் உங்களுக்கு 25 சீட்டு அதிகமாக கிடைக்கும்" என்று சொல்லிவிட்டு சென்றார்கள். இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை.

எடுபடாது மோடி மஸ்தான் வேலைகள்

எடுபடாது மோடி மஸ்தான் வேலைகள்

எதற்காக அந்த சோதனை என்றால் நம்மை மிரட்டுவதற்கு, நம்மை தேர்தல் வேலையை செய்யாமல் வீட்டில் முடக்கி வைப்பதற்கு, ஆனால் இதுபோல 1000 பேரை பார்த்த கட்சிதான் தி.மு.க. மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் தி.மு.க.விடம் பலிக்காது. தி.மு.க. பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்களுக்கு எல்லாம் நாங்கள் அஞ்சி விட மாட்டோம்.

என்ன குட்டிக்கரணம் போட்டாலும்..

என்ன குட்டிக்கரணம் போட்டாலும்..

என்னுடைய பெண் வீட்டில் மட்டுமல்ல, ஒரு வாரத்திற்கு முன்பு திருவண்ணாமலை வேட்பாளர் வேலு அவர்கள் வீட்டில் நான் பிரச்சாரத்துக்கு சென்றிருந்தபோது சோதனை செய்தார்கள். அவர் வீட்டில் இரண்டு நாட்கள் சோதனை செய்தார்கள். அதேபோல கரூரில் செந்தில் பாலாஜி வீட்டில், அவருடைய நண்பர்கள் வீட்டில், உறவினர்கள் வீட்டில் சோதனை செய்தார்கள். எனவே தி.மு.க. தோழர்களை மிரட்டி அச்சுறுத்தி எப்படியாவது இந்தத் தேர்தலில் அவர்களை மூலையில் முடக்கி அதை வைத்து ஒன்றிரண்டு இடங்களில் வெற்றி பெற்றுவிடலாம் என்று பாஜக நினைக்கிறது. நீங்கள் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியாது.

பொய் செய்திகள்

பொய் செய்திகள்

இன்றைக்கு பொய்யான செய்திகளை எடுத்து உண்மையாக நடந்து இருப்பதைப்போல அந்த விளம்பரம் கொடுத்து இருக்கிறீர்கள். அந்த விளம்பரத்தை பார்த்தீர்கள் என்றால் அதை விளம்பரம் போல அமைக்கவில்லை. அதை இன்றைக்கு நேற்று நடந்த செய்தியை போல தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். விவரம் தெரியாதவர்கள் படித்து பார்த்தால் அதை செய்தியாக தான் படிப்பார்கள். அதை விளம்பரமாக பார்க்கமாட்டார்கள். நமக்கு அது தெரிந்ததால் விளம்பரம் என்று நினைக்கிறோம்.

தூத்துக்குடி 13 பேர் படுகொலை

தூத்துக்குடி 13 பேர் படுகொலை

கடந்த பத்து வருடங்களில் இந்த ஆட்சியில் என்னென்ன கொடுமைகள் நடந்து இருக்கிறது? அதைத் தமிழ்நாடு மறந்துவிடும் என்று நினைக்கிறீர்களா? தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது. அதேபோல பொள்ளாச்சி சம்பவம். 250க்கும் மேற்பட்ட பெண்களை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ பதிவு செய்து, அதை அவர்களுக்கு போட்டுக் காட்டி, மிரட்டி பணம் பறிக்கும் ஒரு கும்பல். அதில் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கும் அரசியல் தலைவருக்கு நெருக்கமானவர்கள், அவரோடு சேர்ந்த சிலர் கூட்டு சேர்ந்து இந்த அக்கிரமத்தை செய்திருக்கிறார்கள். இன்றைக்கு விளம்பரம் கொடுக்கிறார்கள். இதைவிட கொடுமை சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒரு பெண் எஸ்.பி.க்கே பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பாலியல் தொல்லை கொடுத்தது காவல் துறையின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஸ்பெஷல் டிஜிபி இவை எல்லாம் தவறாகத் தெரியவில்லை. இதை மக்கள் நிச்சயமாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் அதனால் நான் உங்களை எல்லாம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

தன்மானம் காப்போம்

தன்மானம் காப்போம்

இதற்கெல்லாம் முடிவு கட்ட வருகின்ற ஆறாம் தேதி நீங்கள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று நம்முடைய வேட்பாளர் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். அதே போல நானும் ஒரு வேட்பாளர்தான். முதலமைச்சர் வேட்பாளர். இவர் வெற்றி பெற்றால் தான் நான் முதலமைச்சர். எனவே தமிழ்நாட்டில் இருக்கும் நம்முடைய கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால்தான் நான் முதலமைச்சர் என்பதை மறந்துவிடாமல் உதயசூரியனுக்கு வாக்களித்து, மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும். இந்தத் தேர்தல் நம்முடைய தன்மானத்தைக் காப்பாற்ற வேண்டும். சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும். இது தந்தை பெரியார் பிறந்த மண். அறிஞர் அண்ணா பிறந்த மண். தலைவர் கலைஞர் வாழ்ந்த மண். இது திராவிட மண். மறந்துவிடாதீர்கள். மாநில உரிமைகளை இழந்து கொண்டு இருக்கிறோம். நம்முடைய தன்மானத்தை இழந்து நிற்கிறோம். கடந்த ஐம்பது வருடங்கள் பின்னோக்கி சென்று விட்டோம். கடந்த 10 ஆண்டுகளின் வீழ்ச்சியில் இருந்து தமிழகத்தை மீட்க நீங்கள் அத்தனை பேரும் ஆதரவு தரவேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

English summary
DMK President MK Stalins comments on IT Raid in his daughter's House on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X