சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெளிநாட்டு பயணத்திற்கான உண்மையான காரணங்களை சொல்லுங்க.. முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: "வெளிப்படையாக நான் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்களுக்கு உள்நோக்கம் கற்பிக்கும் முதல்வர், தன்னுடைய வெளிநாட்டுப் பயணத்தில் ஒளிந்து கிடக்கின்ற மர்மங்களை - உண்மையான காரணங்களை தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்" என திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தொழிலதிபர்களைச் சந்தித்து தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு செல்கிறேன்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி 14 நாள் சுற்றுப்பயணமாக வெளிநாடு செல்லும் முன்பு இன்று பேட்டியளித்திருப்பது 'கேழ்வரகில் நெய் வடிகிறது, கேளுங்கள்' என்ற நமது நாட்டுப்புற முதுமொழியைப் போல போலிருக்கிறது.

உலக முதலீட்டாளர் மாநாடு

உலக முதலீட்டாளர் மாநாடு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது 'முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு' 2015 செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 தேதி ஆகிய இரு நாட்கள் நடத்தப்பட்டது. 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த முதலீடுகள் இதுவரை தமிழகத்தை எட்டிப் பார்க்கவே இல்லை.

இரண்டாவது மாநாடு

இரண்டாவது மாநாடு

பிறகு, எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு 'இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு' 2019 ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு திரட்டி விட்டதாக, ஜெயலலிதாவை விட ஒருபடி மேலே போய், ஆடம்பரமாக விளம்பரம் செய்யப்பட்டது.

5.42 லட்சம் கோடி முதலீடுகள்

5.42 லட்சம் கோடி முதலீடுகள்

இந்த இரு மாநாடுகளிலும் போடப்பட்ட 402 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வரப் போவதாகச் சொன்ன 5.42 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வந்ததா? இல்லவே இல்லை!
முதலீடு அறிவிப்புகள் கானல் நீராகிவிட்டது. வெற்று விளம்பரச் செலவுதான் மிச்சம்! புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட தொழிலதிபர்களிடம் இந்த முதலீடுகளைப் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டதா? அதுவும் இல்லை.

விளக்கம் சொல்ல முடியவில்லை

விளக்கம் சொல்ல முடியவில்லை

இது குறித்து ஒரு 'வெள்ளை அறிக்கை' தாக்கல் செய்யக்கோரி மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் தொடர்ந்து நான் வலியுறுத்தியும், இதுவரை எடப்பாடி பழனிசாமியால் ஒரு விளக்கம் சொல்ல முடியவில்லை.
'சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?' - என்பது போல் முதலீடுகள் வரவில்லை. இங்கே சட்டி உடைந்துவிட்டது; அகப்பை முறிந்துவிட்டது. அதனால் முதல்வருக்கு வெள்ளை அறிக்கை வெளியிடும் துணிச்சல் வரவில்லை.

அமைச்சர்களின் பயணம்

அமைச்சர்களின் பயணம்

"முதலீடுகள் பெறுவதற்குச் செல்லும் என் வெளிநாட்டுப் பயணத்தை கொச்சைப்படுத்துவதா? "என்று கேட்டிருக்கிறார் முதல்வர். நான் கேட்பது ஒரேயொரு கேள்விதான்.
இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்பு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் துறைச் செயலாளர்களுடன் 'படை, படையாக' வெளிநாட்டிற்கு, ரத கஜ துரக பதாதி போல், அரசு செலவில் சென்றார்கள்.

வெளிநாட்டுக்கு போவது ஏன்

வெளிநாட்டுக்கு போவது ஏன்

"உலக முதலீட்டாளர்களைக் கவருவதற்காக நாங்கள் செல்கிறோம்" என்று அறிவித்தார்கள். அப்போதே முதல்வர் போயிருந்தால் - அது வேறு விஷயம். ஆனால் உலக முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்து ஏழு மாதங்கள் கழித்து முதல்வர் வெளிநாடு போவது ஏன்? இதுதான் என் கேள்வி.

முதலீடுகளை பெற முடியவில்லை

முதலீடுகளை பெற முடியவில்லை

இரு உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி முதலீடுகளைப் பெற முடியாத ஒரு முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் போவது 'கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவர், எப்படி வானம் ஏறி வைகுந்தம் காட்டுவார்' என்ற கேள்வி - எனக்கு மட்டுமல்ல - தமிழக மக்களுக்கே இப்போது எழுந்திருக்கிறது.

அரசு முறை பயணம்

அரசு முறை பயணம்

"மு.க.ஸ்டாலின் மட்டும் ஏன் அடிக்கடி வெளிநாடு செல்கிறார்" என்று இன்னொரு கேள்வி எழுப்பியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. துணை முதல்வராக இருந்த நேரத்தில் நான் அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்றிருக்கிறேன். ஆனால், அப்போது நான் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கும், மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் நிதியுதவி பெற்று வந்திருக்கிறேன்.

தொழிற்சாலைகள் வந்தது

தொழிற்சாலைகள் வந்தது


தி.மு.க. ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடோ, வெளிநாட்டுப் பயணங்களோ, வீண் விளம்பரங்களோ, இல்லாமலேயே முதலீடுகளை பெருமளவில் திரட்ட முடிந்தது. அம்பத்தூரிலிருந்து காஞ்சிபுரம் வரையிலும், வண்டலூரிலிருந்து செங்கல்பட்டு வரையிலும் எங்கு பார்த்தாலும் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க முடிந்தது. தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அனைவரும் முன்வந்தார்கள் என்றால் - எங்கள் ஆட்சியில் இருந்த நேர்மையும், உடனுக்குடன் முடிவு எடுத்த
டுகளை அனுமதிக்கும் நிர்வாக திறமையுமே காரணம்!

முதல்வருக்கு அழகல்ல

முதல்வருக்கு அழகல்ல

என்னுடைய தனிப்பட்ட பயணங்கள் எல்லாம் வெளிப்படையானவை. குடும்பத்தினருடன் செல்லும் சொந்தப் பயணங்களுடன், அரசுமுறை பயணமாகப் போவதை தஎடப்பாடி பழனிசாமி ஒப்பிடுவது ஒரு முதல்வருக்கு அழகல்ல; ஒப்பீடும் முறையானது இல்லை.

கமிஷன் கெடுபிடி

கமிஷன் கெடுபிடி

ஆகவே, 'துர்நாற்றம் அடிக்கும் ஊழல்', 'அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள்', 'புதிய முதலீடு செய்ய வருவோரிடம் கமிஷன் கெடுபிடி', 'முற்றிலும் ஸ்தம்பித்துப் போன அரசு நிர்வாகம்' ஆகியவற்றால் இன்றைக்கு தமிழகம் பொருளாதாரத்தில் - தொழில்வளர்ச்சியில் - முதலீடுகளைப்
பெறுவது, ஆகிய அனைத்திலும், கெட்டப் பெயர் வாங்கி, பின்தங்கி - படுதோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

முதலீடுகள் வரவில்லை

முதலீடுகள் வரவில்லை

'சட்டத்தின் ஆட்சி' எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பரிதாபமாகத் தோற்றுப் போனதால் எத்தனை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினாலும், எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டாலும் - முதலீடுகள் கிடைக்காமல் தத்தளித்து, தனிமரமாய் நிற்கிறது தமிழகம். அதற்காக செய்த செலவுகள் விழலுக்கு இரைத்த நீராக மாறியிருப்பதற்கு முழுக்க முழுக்க திரு. எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக திறமையின்மையும், கெட்ட வழிகாட்டுதலுமே காரணம்!

முதலீடுகள் பெற முடியாதது ஏன்

முதலீடுகள் பெற முடியாதது ஏன்

இதுபோன்ற நேரத்தில் அரசுமுறைபயணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 14 நாட்கள் வெளிநாடு செல்கின்றபோது - "ஏற்கனவே ஏன் முதலீடுகளைப் பெற முடியவில்லை என்பதற்கு பதில் சொல்லுங்கள்" என்று பிரதான எதிர்க்கட்சியின் சார்பில் நான் கேள்வி எழுப்புவதில் என்ன தவறு?பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் கேள்விக்கு முறையாக பதில் சொல்ல வக்கில்லாமல், உள்நோக்கம் கற்பிக்கும் முதல்வருக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வருக்கு கேள்வி

முதல்வருக்கு கேள்வி

ஆகவே, 'நான் வெளிப்படையாக வெளிநாடு செல்வதை மர்மம்' என்று கூறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய வெளிநாட்டுப் பயணத்தில் ஒளிந்து கிடக்கின்ற மர்மங்களை - உண்மையான காரணங்களை தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்; ஏற்கனவே தமிழக மக்களிடையே பரவியிருக்கும் சந்தேகங்களுக்கு நேர்மையாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதைவிடுத்து, திசைதிருப்பும் முயற்சியினால் தினை அளவு நன்மையும் விளையாது என்ற அரிச்சுவடியைப் புரிந்துகொள்ள வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.

English summary
Dmk leader MK Stalin statement about chief minister edappadi palanisamy's foreign trip, he ask two questions to chief minister palanisamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X