கொடுமை.. எலும்பும் தோலுமாக உயிருக்குப் போராடிய செல்லப் பிராணிகள்.. கல்லா கட்டிய காப்பகத்திற்கு சீல்!
சென்னை : காப்பகம் என்ற பெயரில் செல்லப் பிராணியின் உரிமையாளரிடம் கட்டணம் வசூலித்துக் கொண்டு, பிராணிகளை வதைத்து வந்துள்ளது 'யஷிவா அனிமல் ட்ரெஸ்ட்'.
பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு அங்கு பராமரிப்பு இல்லாமல் தவித்து வந்த செல்லப் பிராணிகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
பொதுவாக செல்லப்பிராணிகள் காட்டும் அன்புக்கு ஈடு இணையே இல்லை. வாழ்நாளில் ஒருவர் செல்லப் பிராணியின் பாசத்திற்கு அடிமையாகிவிட்டால், அதன் பின்னால் அவருக்கு மனித பாசம் என்பதுகூட இரண்டாம் பட்சம்தான். அந்தளவுக்கு அன்பு மழையைக் கொட்டுபவை செல்லப் பிராணிகள். அதன் பாசத்திற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர்கள் அதிகம்.

செல்லப் பிராணிகள்
ஆனால் சென்னையைப் போன்ற அபார்ட்மெண்ட் கலாச்சாரத்தில் வீட்டில் செல்லப்பிராணிகளை தங்களின் இஷ்டம் போல வளர்க்க முடிவதில்லை. ஆயிரம் கட்டுப்பாடுகள் அவர்களை அழுத்துகின்றன. ஆகவே ஆசைக்குக் கொஞ்ச நாட்கள் வளர்ந்துவிட்டு, அதன் பின் முடியாமல் ஏதேனும் காப்பகத்தில் கொண்டு போய் ஒப்படைத்துவிடுகிறார்கள். அப்படி செல்லப் பிராணிகளைப் பராமரிப்பதற்காகச் சென்னை சுற்றுவட்டாரத்தில் பல காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதைப் போன்ற ஒரு காப்பகம்தான் 'யஷிவா அனிமல் ட்ரெஸ்ட்'.

காப்பகம்
இந்தக் காப்பகம் மேற்குத் தாம்பரத்தில் செயல்பட்டு வருகிறது. இது ஒரு தனியார் காப்பகம். கட்டணம் பெற்றுக் கொண்டு வீட்டு விலங்குகளைப் பரிமரிப்பதற்காக இந்த ட்ரெஸ்ட் உருவாகப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட பூனைகள், நாய்கள் போன்ற வீட்டு விலங்குகள் உள்ளன. அனைத்தையும் உரிமையாலரிடம் கட்டணம் பெற்றுக் கொண்டு இவர்கள் வளர்த்து வருகின்றனர். ஆனால் கட்டணத்தை மட்டும் சரியாகப் பெற்றுக் கொள்ளும் இவர்கள், உரிய உணவை அந்த உயிரினங்களுக்கு வழங்குவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

உரிமையாளரையே அனுமதிப்பதில்லை
விலங்குகளை பார்ப்பதற்காக உரிமையாளர் செல்லும் போது பார்ப்பதற்கு அனுமதியும் தருவதில்லை எனக் குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. அதேபோல் அங்குள்ள வளர்ப்பு பிராணிகள் துன்புறுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் பிரச்சனையை பிரகாஷ் என்பவர் விலங்குநல ஆர்வலர்கள் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். பிரகாஷ் பலமுறை இந்தக் காப்பகத்திற்கு நேரடியாகச் சென்று அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை. ஆகவே இந்தப் புகாரை அவர் அளித்துள்ளார். இதை அறிந்த அதிரடியாக களத்தில் குதித்துள்ளனர்.

அடித்து காயம்
சோமங்கலம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் ஒரு குழுவினர் ஆய்வு நடத்த வேண்டி அந்தக் காப்பகத்திற்குச் சென்றுள்ளனர். அளிக்கப்பட்ட புகாரில் உள்ளதைப் போலவே நாய்களும் பூனைகளும் எலும்பும் தோலுமாக, சரியான உணவு இன்றி பரிதாபமான நிலையில் கிடந்துள்ளன. பல நாட்களாக உணவு வழங்கப்படாததால், சில பூனை இறந்து கிடந்துள்ளன. அதை சக பூனைகள் தங்களின் பசிக்காக உண்ணும் பரிதாப காட்சியைக் கண்ட குழுவினர் அப்படியே ஆடிப்போய் உள்ளனர். மேலும் சில வளர்ப்பு பிராணிகளை அடித்துக் காயப்படுத்தியதனால் அவற்றின் கால்கள் முறிந்து நடக்க முடியாமல் தவித்ததையும் பார்த்துள்ளனர். உயிருக்குப் போராடும் நிலையில் ஏறக்குறைய அனைத்து பிராணிகளும் இருந்ததைக் கண்டு விலங்கு நல அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றுள்ளனர்.

சட்ட ரீதியாக தண்டிக்கலாம்
இது குறித்து நாம் பிரகாஷிடம் பேசினோம். அவர், "நான் பலநாட்களாக இந்தக் கொடுமைக்குத் தீர்வு காண வேண்டிப் போராடி வருகிறேன். பொதுவாக தங்களின் செல்லப்பிராணிகளைக் கட்டணம் கட்டி காப்பகங்களில் ஒப்படைப்பவர்கள், அது சரியான காப்பகம்தானா? உரிய முறையில் சேவை செய்கிறார்களா? அதன் மீது புகார் உள்ளதா? அதை எல்லாம் விட அரசு அனுமதி பெற்றுச் செயல்படுகிறதா? எனப் பல கோணங்களில் விசாரிக்க வேண்டும். அப்படி செயல்படவில்லை என்றால் காப்பகத்தின் மீது வழக்குத் தொடரலாம். சட்ட ரீதியாக அவர்களை தண்டிக்கலாம். ஆனால் அதைப் பலரும் செய்வதில்லை. அந்த விழிப்புணர்வு வளர வேண்டும்" என்கிறார்.

செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள்
இவரது புகாரில் பேரில் உடனடியாக அனைத்து பிராணிகளையும் குழுவினர் பறிமுதல் செய்து மற்ற காப்பகங்களுக்கு அனுப்பி உள்ளனர். மேலும் சிகிச்சை தேவையான பிராணிகளை மருத்துவமனைக்கு அனுப்பியும் வைத்துள்ளனர். வந்த புகாரின் அடிப்படையில் விலங்குகள் வதை தடைச் சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு விலங்குகள் நலவாரிய அதிகாரிகளைச் செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications