'வாவ்'.. சென்னையில் புத்தாண்டில் நடந்த சூப்பர் சம்பவம்.. குட்நியூஸ் சொன்ன டிஜிபி சைலேந்திர பாபு
சென்னை: சென்னையில் ஒரு விபத்து கூட இல்லாமல் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்து முடிந்திருப்பதால் போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மேலும், தமிழகம் முழுவதும் எந்தவித அசாம்பாவித சம்பவங்களும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடைபெறவில்லை என்பதும் கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது திறம்பட பணியாற்றியதற்காக போலீஸாருக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

பயமுறுத்தும் புத்தாண்டு கொண்டாட்டம்
தமிழகத்தில்., குறிப்பாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்றாலே பொதுமக்கள் குடும்பத்துடன் வெளியே வர முடியாத அளவுக்கு தான் முந்தைய ஆண்டுகளில் நிலைமை இருந்தது. இளைஞர்கள் மது அருந்திவிட்டு தாறுமாறாக பைக், கார்களை ஓட்டுவது, முக்கிய சாலைகளில் பைக் ரேஸ் நடத்துவது என சென்னையே அன்று தலைகீழாக மாறியிருக்கும். அதேபோல, அன்றைய தினம் விபத்துகளுக்கும், அசம்பாவிதச் சம்பவங்களுக்கும் பஞ்சம் இருக்காது. குறைந்தபட்சம், 5 பேராவது விபத்துகளில் சிக்கி உயிரிழந்திருப்பார்கள்.

போலீஸ் காட்டிய கெடுபிடி
இந்நிலையில், இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்த விபத்துகளும், அசம்பாவித சம்பவங்களும் நடைபெறக்கூடாது என சென்னை போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. இதன்பேரில், தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்ட போலீஸார், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தனர். மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டக்கூடாது, ஒரே பைக்கில் 2 பேருக்கு மேல் பயணிக்கக் கூடாது, பைக் ரேஸில் ஈடுபடக்கூடாது என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தினார். மேலும், இதனை செயல்படுத்துவதற்காக 16,000-க்கும் மேற்பட்ட போலீஸார் சென்னையில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

வாகனங்கள் பறிமுதல்
368 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. பொது மக்களின் பாதுகாப்பை கருதி 33 மேம்பாலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனிடையே, போலீஸாரின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி பைக் ரேஸில் ஈடுபட்ட, மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டிய 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி, கடந்த 25ம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடத்திய வாகன சோதனையில், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து மொத்தம் 694 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சைலேந்திர பாபு பாராட்டு
போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கைகள் மற்றும் கெடுபிடிகள் காரணமாக சென்னையில் ஒரு விபத்து கூட இல்லாமல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்ற. அதேபோல, தமிழகம் முழுவதுமே எந்தவித அசம்பாவிதச் சம்பவங்களும் இன்றி புத்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவடைந்திருக்கின்றன. இந்த நடவடிக்கைக்காக போலீஸாருக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள பாராட்டுச் செய்தியில், "புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனைத்து மாநகரங்களிலும், மாவட்டங்களிலும் காவல் துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. தமிழகம் எங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் எந்தவித அசம்பாவித சம்பவங்களும், விபத்துகளும் இல்லாமல் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட அனைத்து காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு டிஜிபி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications