சூழ்ந்த செய்தியாளர்கள்.. ‘ஒரே வரி’யில் பதில்.. உடனே காருக்கு போய்ட்டாரே..! ஓபிஎஸ் சொன்ன விஷயம்!
சென்னை : அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று ஐகோர்ட் அளித்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தீர்ப்பு பற்றி ஒரே வரியில் கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பளித்தது சென்னை ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு. அதன்படி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பையடுத்து, ஓபிஎஸ்ஸின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் எனக் கேள்வி எழுந்தது. இந்நிலையில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒரே வரியில் பதில் சொல்லிவிட்டு, காரில் ஏறினார் ஓ.பன்னீர்செல்வம்.

ஆகஸ்ட் 17 தீர்ப்பு
எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழுவை எதிர்த்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில், கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி தீர்ப்பளித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11ல் கூட்டிய பொதுக்குழு செல்லாது; கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி, பொதுக்குழுவை கூட்ட முடியாது, ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடரவேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இன்று வெளியான தீர்ப்பு
இந்த உத்தரவை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார் .மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆகஸ்ட் 25ல் ஒரே நாளில் மேல்முறையீட்டு வழக்கில் வாதங்கள் முடிந்தன. அதைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு வழக்கில் இன்று காலை, நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், ஜூலை 11 நடந்த பொதுக்குழு செல்லும் என்றும், தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தரப்புக்கு ஷாக்
இந்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றாகியுள்ளது. அதேபோல, ஓ.பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டதும் செல்லும் என்றாகியுள்ளது. இன்றைய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வந்துள்ளது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தகட்ட நகர்வு
இந்த தீர்ப்பையடுத்து, ஓபிஎஸ் தரப்பின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் சட்ட வல்லுநர்கள் உடன் ஆலோசனை நடத்திய பிறகு மேல்முறையீடு குறித்து முடிவு எடுக்கப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்திருந்தார்.

ஓபிஎஸ்ஸை சூழ்ந்த பத்திரிகையாளர்கள்
இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தனது வீட்டில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், பண்ணை வீட்டிற்கு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காகக் கிளம்பினார். அப்போது, அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டு, இன்றைய தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினர்.

மேல்முறையீடு
அதற்கு பதிலளித்த அவர், "ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்" என ஒரே வரியில் தெரிவித்துவிட்டு காரில் ஏறினார்.












Click it and Unblock the Notifications