எடப்பாடிக்கு எதிராக ரகசிய பிளான்.. தொண்டர்களை கவர ‘அந்த விஷயம்’ ஆதரவாளர்களிடம் ஓபிஎஸ் பேசியது என்ன?
சென்னை : அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இடையே பனிப்போர் நிகழ்ந்து வரும் நிலையில், இருவரும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
தனக்கு கட்சி நிர்வாகிகள் மத்தியில் இருக்கும் ஆதரவைக் காட்டி, பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டது ஓ.பி.எஸ் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வரும் ஓ.பன்னீர்செல்வம், இரட்டைத் தலைமையே நீடிக்க வேண்டும் என பெரும்பாலானோர் வலியுறுத்தும்படி செய்ய வேண்டும் என தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெடித்த பிரச்சனை
அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை பற்றிய பேச்சுகள் அவ்வப்போது எழுவது வழக்கம். ஆனால், பிறகு அந்த சலசலப்புகள் அதே வேகத்தில் அடங்கிவிடும். ஆனால், இந்த முறை இந்த விவகாரம் உக்கிரமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடந்த விவாதங்கள் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

ஒற்றைத் தலைமை கோஷம்
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது அலுவலகத்திற்கு வெளியே நின்றிருந்த தொண்டர்களில் சிலர் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அப்போது அங்கிருந்த மற்றொரு தரப்பினர் ஓ.பன்னீர்செல்வம் தான் கட்சி தலைமை பதவிக்கு வர வேண்டும் என கோஷமிட்டனர். ஆலோசனைக் கூட்டத்திலும் ஒற்றைத் தலைமை வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் பலர் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கூட்டம் முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்திக்கையில், கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக விவாதிக்கப்பட்டது எனத் தெரிவித்தார். பெரும்பான்மையான நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அதிமுகவுக்கு ஒற்றை தலைமைதான் தேவை என்பதை வலியுறுத்தினர் எனத் தெரிவித்தார்.

பழிவாங்கல்
ஜெயக்குமாரின் பேட்டி அதிமுகவுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ராஜ்ய சபா தேர்தலில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான ஜெயக்குமாருக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு காரணமான ஓ.பன்னீர்செல்வம் மீதான ஆத்திரத்தை ஒற்றைத் தலைமை மேட்டரை பகிரங்கமாக வெளியில் சொல்லி ஜெயக்குமார் பழிதீர்த்துக் கொண்டதாக ஓபிஎஸ் தரப்பினர் கூறுகின்றனர். அதனால்தான் மீட்டிங்கில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக எழுந்த ஒற்றைத் தலைமை கருத்துகளை, வெளியே வந்ததுமே சொல்லி, விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளார் ஜெயக்குமார் என அதிமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

தனித்தனியாக ஆலோசனை
ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது வீட்டில் கட்சி நிர்வாகிகள் சிலருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதேபோல் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியையும் சில முக்கிய நிர்வாகிகள் சந்தித்தனர். இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் தொடர்ச்சியாக ஆலோசனை மேற்கொண்டார். மாறி மாறி முக்கிய நிர்வாகிகள், ஓபிஎஸ், இபிஎஸ் வீட்டிற்குச் சென்று வருவதால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பரபரப்படைந்துள்ளனர்.

ஓபிஎஸ் சொன்னது என்ன?
ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வரும் முக்கிய நிர்வாகிகள் பலரும், ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்துப் பேசவில்லை என மழுப்பலாக பதில் சொல்லி வருகின்றனர். ஆனால், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையை ஏற்க ஆதரவு பெருகியுள்ள நிலையில், தனது நிலையை காப்பாற்றிக் கொள்ள அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தே அவர் முக்கிய நிர்வாகிகளுடன் பேசியதாகக் கூறப்படுகிறது.

ஜெயக்குமார் மீது கோபம்
ஓ.பன்னீர்செல்வத்தை இன்று சந்தித்துப் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ஒற்றைத் தலைமை விவாத மேட்டரை வெளியில் கசிய விட்ட ஜெயக்குமாரை கடுமையாகச் சாடினார். அவர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதன்மூலம், ஜெயக்குமார் மீது ஓபிஎஸ் தரப்பு பயங்கர கடுப்பில் இருப்பது தெளிவாகியுள்ளது.

எதிர்க்கட்சி நாம்தான்
மேலும், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 25 சதவீதம் பேர் தான் ஒற்றை தலைமை தொடர்பான கோரிக்கை வைத்தனர். ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. கட்சியைக் காப்பாற்ற வேண்டும். கட்சி வேலைகளை தொடர்ந்து செய்யுங்கள். மக்கள் எதிர்க்கட்சியாக நம்மைத்தான் நம்புகிறார்கள் என்று தான் ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளிடம் பேசி வருகிறார் என்றும் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ் வேண்டுகோள்
இதற்கிடையே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தனது ட்விட்டர் பக்கத்தில், அஇஅதிமுக தொண்டர்கள் அனைவரும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும் என பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதும், அவற்றை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கிழித்ததும் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில்தான் ஓபிஎஸ் இவ்வாறு ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ஓபிஎஸ் திட்டம் என்ன?
எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள் ஆதரவு அதிகம் இருப்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், ஒட்டுமொத்தமாக பெரும்பாலானவர்கள் ஒற்றைத் தலைமை கோரிக்கையை எழுப்பியது ஓபிஎஸ்க்கே அதிர்ச்சிதான் என்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம், இப்போதைய நிலைமைக்கு தான் ஒற்றைத் தலைமையாக வர முடியாது என தெரிந்தே இருக்கிறார். அதேநேரம் எடப்பாடி பழனிசாமியின் கை முழுமையாக ஓங்கிவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார் என்கிறார்கள் அவரை நன்றாக அறிந்தவர்கள்.

அடுத்து என்ன செய்வது
எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆவதை தடுக்க என்ன செய்வது என்பதுதான் இந்த இரண்டு நாளாக ஆலோசனையில் ஓ.பி.எஸ், தனது ஆதரவாளர்களுடன் பேசிய விஷயமாம். கட்சியில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் எனச் சொல்லியும், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவன் தான் என்பதை தொண்டர்களிடம் பதிய வைத்தும் எடப்பாடி பழனிசாமியின் திட்டத்தை முறியடிக்க திட்டமிடுவதாகச் சொல்கிறார்கள். கட்சியில் குழப்பம் வருவதை தான் எப்போதும் விரும்பமாட்டேன் எனச் சொல்லும் விதத்திலேயே அவரது அடுத்தகட்டச் செயல்பாடுகள் இருக்கும் என்றும், அதன் மூலமே தொண்டர்களின் ஆதரவைப் பெற முடியும் என்றும் கணக்குப் போட்டுள்ளாராம் ஓபிஎஸ். எடப்பாடி பழனிசாமி மீது லேசான அதிருப்தியில் இருக்கும் மற்றவர்களை தனக்கு ஆதரவாகத் திருப்பவும், ஆதரவாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications