'எல்லாத்தையும் ‘மேல’ இருக்கவங்க பாத்துப்பாங்க’! இனி என் பாதை சிங்கப் பாதை! அதிரடி ஆலோசனையில் ஓபிஎஸ்!
சென்னை : டெல்லியில் குடியரசு தலைவர் பிரிவு உபச்சார விழாவுக்குச் சென்ற அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் நேரம் ஒதுக்க மறுத்ததாக தகவல் வெளியான நிலையில், உற்சாகமடைந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசி மூலம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் அடுத்தடுத்து நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் முற்றிய நிலையில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களால் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பதவியேற்ற அதே மேடையிலேயே கட்சியில் தனக்கு எதிராக செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்குவதற்கான தீர்மானம் முன்மொழிக்கப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

எடப்பாடி பழனிச்சாமி
விவகாரம் அதோடு முடிவடைந்து விட்டதாக கருதிய நிலையில் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான சட்ட போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளார் ஓபிஎஸ். ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி நீக்குவது, எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களை நீக்கிவிட்டதாக ஓபிஎஸ் அறிவிப்பது என நாளுக்கு நாள் இந்த விவகாரம் சூடு பிடித்து வருகிறது. அதே போல பொருளாளர் துணைப் பொதுச் செயலாளர், அமைப்புச் செயலாளர் என பட்டியல்களை அடுத்தடுத்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட நிலையில், ஏற்கனவே நீக்கப்பட்ட நிர்வாகிகளை கட்சியின் சேர்ப்பதாகவும் 14 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர் பட்டியலை வெளியிட்டு பன்னீர்செல்வம் அதிரடி காட்டி வருகிறார்.

ஓ.பன்னீர்செல்வம்
மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பொதுக்குழு கூட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதோடு, ரிசர்வ் வங்கி, மக்களவை சபாநாயகர் மற்றும் தமிழக சபாநாயகருக்கும் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பான முடிவுகள் இன்னும் எடுக்கப்படாத நிலையில் அடுத்தது என்ன நடக்கும் என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் அதிமுகவினர். இந்த நிலையில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று திரும்பினார். வீட்டிற்கு செல்லாமல் சென்னை அடையாறில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி உள்ள அவர் மருத்துவர் ஆலோசனைப்படி நான்கு நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அதிரடி ஆலோசனை
இருந்தபோதிலும் அதிமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தங்கள் தரப்பு முக்கிய நிர்வாகிகளான மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோருடன் தொலைபேசியில் பேசி வருகிறார். ஆனால் மற்ற நிர்வாகிகளை அவர் சந்திக்கவில்லை. இன்னும் நான்கு நாட்கள் விடுதியில் தங்கி இருந்து பின்னர் விடு திரும்பும் அவர் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் புதிய மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு பட்டியல் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

ஓபிஎஸ்-க்கு பதில்
ரிசர்வ் வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம் அனுப்பிய நிலையில் அதனை பெற்றுக் கொண்டதாக ரிசர்வ் வங்கி மீண்டும் ஓபிஎஸ்-க்கு பதில் அளித்து இருந்தது. அந்த கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற குறிப்பிடப்பட்டிருந்ததால் ஓபிஎஸ் தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது. மேலும் டெல்லிக்கு குடியரசுத் தலைவர் பிரிவு உபச்சார விழாவுக்கு கலந்து கொள்ள சென்ற எடப்பாடி பழனிச்சாமியை தனியே சந்திக்க பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் நேரம் ஒதுக்காத சம்பவமும் ஓபிஎஸ் க்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பாஜக நிர்வாகிகள் மற்றும் தனது மகன் ரவீந்திரநாத் மூலம் பிரதமரிடம் நெருக்கம் காட்ட முயற்சித்து வரும் ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
Recommended Video

உற்சாகம்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புதிய நிர்வாகிகளை நியமிப்பது, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளை அதிமுகவில் சேர்த்து புதிய பொறுப்புகளை வழங்குவது, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இருக்கும் நிர்வாகிகளை ஒன்றிணைத்து அவர்களை தனது ஆதரவாளர்களாக மாற்றுவது என பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளார். மேலும் போட்டி அதிமுக போல செயல்பட ஏதுவாக தலைமை கழக நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் மாநகர் ஒன்றியம் வட்ட அளவிலான செயலாளர்களை நியமிக்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு நாட்களில் அந்த பட்டியல் ஓ பன்னீர் செல்வத்தின் ஒப்புதல் பெறப்பட்டு வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. இன்று முதல் புதிய நிர்வாகிகள் பட்டியல் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுத்து தனது செல்வாக்கை மீண்டும் பெற ஓபிஎஸ் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications