புண்படுத்திட்டே இருக்கீங்க..டெல்லிக்கு பறக்கும் ஓபிஎஸ்! ’மெயின்’ தலையிடம் ஒரே புலம்பலாம்! என்னாச்சு?
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் பாஜக ஆதரவு தங்கள் தரப்புக்கு தான் இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் கூறிவரும் நிலையில் தொடர்ந்து பாஜக தலைமை மத்திய அரசு மூலம் எடப்பாடிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது அவரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேச இருப்பதாக தேனி தரப்பினர் கூறியிருக்கின்றனர்.
அதிமுக எனும் அரசியல் களத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையேயான ஆடு புலி ஆட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. ஜெயலலிதா எனும் ஒற்றை ஆளுமை இருந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே இருவரது எண்ணமாக இருக்கிறது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம், பொதுக்குழு, பேட்டி, அறிக்கைகள், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் என தங்களால் முடிந்த அளவுக்கு இருவருமே தீவிரமாக செயல்பட்டு வந்தாலும் அதிமுகவை பொறுத்தவரை தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் கை தான் ஓங்கி இருக்கிறது.

அதிமுக விவகாரம்
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு வருகின்ற ஜனவரி 4-ம் தேதி மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து இரு தரப்பும் மிகுந்த ஆர்வத்துடன் வழக்கின் விசாரணையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் மறைமுகமாகவும் சில விவகாரங்களில் நேரடியாகவும் ஆதிக்கம் செலுத்தி வரும் பாஜக யாருக்கு ஆதரவாக இருக்கிறது என்பதை தற்போது பேசும் பொருளாக இருக்கிறது. தொண்டர்கள் தன் பக்கம் பாஜக தலைமையும் தன் பக்கம் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கூறி வருகிறார்.

பாஜக ஆதரவு
இடையில் அவருக்கு சாதகமான சில அம்சங்கள் அதனை வெளிச்சம் போட்டு காட்டியது. சென்னை வந்த அமித்ஷாவை நேரில் சந்தித்தது, குஜராத் முதலமைச்சர் பதவி ஏற்பு விழா என தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை விட ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதனால் அதிமுக தனது கட்டுப்பாட்டிற்குள் விரைவில் வரும் என உற்சாகத்தில் இருந்தார் ஓபிஎஸ். நிர்வாகிகள் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தனக்குத்தான் என எடப்பாடி கூறி வந்த போதிலும் பாஜகவுடன் இணக்கமாக செயல்படவில்லை. மேலும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சிக்குள் மீண்டும் சேர்க்க வேண்டும் என அந்த கட்சி கூறியதால் விரைவில் பாஜக கூட்டணியில் இருந்து கழற்றிவிடப்படலாம் எனவும் அடுத்தடுத்து செய்திகள் வெளியாகின.

இபிஎஸ்க்கு இன்ப அதிர்ச்சி
அதே நேரத்தில் திடீர் திடீரென இபிஸ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கவும் பாஜக தவறவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஜி-20 மாநாடு தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு சார்பில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இதை அடுத்தே அவரை சமாதானம் செய்வதற்காக குஜராத் முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் தரப்புக்கு பாஜகவாலே முழுக்க முழுக்க பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

என்ன காரணம்?
அதாவது ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு இந்தியா முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதி இருக்கிறது. அதில் அதிமுக சார்பில் கலந்து கொள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிடப்பட்டிருப்பது தான் தற்போதைய அரசியல் ஹாட் டாபிக். விரைவில் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கு முன்னதாகவே மத்திய அரசு குறிப்பாக மத்திய சட்ட அமைச்சகம் அதிமுக பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டு இருப்பது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

டெல்லி பயணம்
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள ஓபிஎஸ் தரப்பு மீண்டும் எடப்பாடியை அவ்வாறு அழைக்கக்கூடாது என கடிதம் அனுப்பி இருக்கிறது. மேலும் இது வழக்கின் விசாரணை மீது தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அந்த தரப்பு குற்றம் சாட்டி வருகிறது. பாஜக எடப்பாடி இடையிலான மோதல் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்துள்ளதாகவும் ஓபிஎஸ்-க்கு பதில் இபிஎஸ்ஐ அங்கீகரிக்க அந்த கட்சி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இது குறித்து பேசுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

அமித் ஷாவுடன் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மரணம் அடைந்த நிலையில் அகமதாபாத் செல்லும் அவர் பின்னர், உள்துறை அமைச்சர் அமித்சாவையும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவையும் அடுத்த வாரத்தில் சந்திக்கலாம் எனவும் அதற்காக அப்பாயிண்ட்மெண்ட் பெரும் முயற்சியில் ஓபிஎஸ் தரப்பு நிர்வாகி ஒருவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. திங்கட்கிழமை அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் ஓபிஎஸ் நிச்சயமாக பயணம் மேற்கொள்வார் என்கின்றனர் தேனி தரப்பினர். அதே நேரத்தில் பாஜக ஆதரவும் தனக்கு இருக்கிறது நிர்வாகிகள் ஆதரவும் தனக்கு இருக்கிறது எனவே நான் தான் அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தரப்பு ஆதரவாளர்களும் உற்சாகமாக கூறி வருகிறாராம்.












Click it and Unblock the Notifications