‘இணைந்த கைகள்’ டிடிவி தினகரனை சந்திக்கும் ஓபிஎஸ்? வீட்டை சுற்றி போஸ்டர்களை பாருங்க! படையெடுப்பாம்!
சென்னை : கிட்டத்தட்ட 99 % நிர்வாகிகள் எடப்பாடி தரப்புக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், பொதுக்குழுவை நடத்த விடாமல் தடுப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரனை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் 8-வது நாளாக தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இபிஎஸ் வீட்டில் அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், எம்.பி.தர்மர் ஆகியோர் ஓபிஎஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்திய நிலையில் , ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் பலர் இபிஎஸ் தரப்புக்கு தாவி வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு
இன்று மட்டும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த நெல்லை மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா, விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுகச் செயலாளர் அலெக்சாண்டர் , முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை வழங்கினர். இதனால் கிட்டத்தட்ட 99 % நிர்வாகிகள் எடப்பாடி தரப்புக்கு ஆதரவாக இருப்பதைக் காண முடிகிறது.

டிடிவி தினகரன் ஆதரவு
இந்நிலையில் பொதுக்குழுவை நடத்த விடாமல் தடுப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரனை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கட்சி அடிப்படையில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் தர்ம யுத்தத்துக்கு முன்புவரை டிடிவி தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் இணக்கமாகவே இருந்துவந்தார். குறிப்பாக அதிமுகவின் பொருளாளராக டிடிவி தினகரன் இருந்தபோதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு உயர தொடங்கியது. இதையடுத்து பல பரிணாமங்களை அடைந்த பன்னீர்செல்வம் முதலமைச்சர் வரை உயர்ந்தார்.

சந்தித்து ஆலோசனை
மேலும் தர்ம யுத்தத்துக்குப் பிறகு பல நேரங்களில் ஓபிஎஸ் டிடிவி தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டிருந்தது தெரிந்ததே. அதேபோல சமுதாய அளவிலும் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இயல்பாகவே இருவருக்கும் நல்ல நட்பு இருந்ததாக கூறுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். இந்நிலையில் ஒருவேளை எடப்பாடி பழனிச்சாமி இடம் அதிமுக சென்றுவிட்டால் சசிகலா டிடிவி தினகரன் இணைவது சிரமம் என்பதால் தற்போது ஏற்பட்டிருக்கும் விவகாரத்தை வைத்து கட்சிக்குள் நுழைய தினகரன் தக்க நேரம் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்.

மிரட்டல் போஸ்டர்
தற்போது அதன் மூலம் இதனை ஓரளவுக்கு நிறைவேற்றிக்கொள்ள முடியும் என அவர் கருதுவதாக கூறப்படுகிறது. இதையடுத்தே இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளை இருவரும் சந்தித்துப் பேசலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே பொதுக்குழு கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கானோர் படை எடுப்போம் என ஓபிஎஸ் வீட்டைச்சுற்றி அவரது ஆதரவாளர்கள் புதிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

தீய சக்திகளுக்கு கண்டனம்
அதில்," சென்னையில் நடக்கும் பொது குழுவிற்கு "தமிழகம் முழுவதும் இருக்கும் லட்சக்கணக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் படை எடுப்போம் இதய தெய்வம் எம்ஜிஆர் அவர்களின் கட்சி சட்ட விதிப்படி "தொண்டர்களே கட்சியின் தலைமையை தேர்வு செய்ய வேண்டும்" என்ற விதிமுறைகளை தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி மாற்ற முயற்சிக்கும் தீய சக்திகளுக்கு எங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது உரிமையை பறிக்கும் 23ஆம் தேதி சென்னையில் நடக்கும் பொது குழுவிற்கு "தமிழகம் முழுவதும் இருக்கும் லட்சக்கணக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் படை எடுப்போம்"

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
அதிமுக சட்ட விதி 43: கழக சட்ட திட்ட விதிகளை மாற்றவும் திருத்தவும் நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்தது ஆகும். ஆனால் இந்த சட்ட திட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள கழக பொதுச் செயலாளரை கழக தொண்டர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றுவதற்கு திருத்துவதற்கு உரியதல்ல. என எம்.ஜி. ராமச்சந்திரன் என கையெழுத்திட பட்டுள்ளது" இதனை மிரட்டல் தொனியிலேயே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications