சட்டசபையில் இன்று.. ஆளுநர் உரைக்கு நன்றி..! வியூகங்களுடன் ரெடியாக உள்ள எதிர்க்கட்சிகள்
சென்னை: நடப்பாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்கிய நிலையில், வரும் 13ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் நாளையும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் முக்கியமான மூன்று பிரச்னைகளை கையில் எடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டசபை மரபின்படி ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றுவார். அரசியலமைப்பு சட்டத்தின் 176வது சட்டப்பிரிவின்படி இந்த உரையை ஆளுநர் நிகழ்த்துவார். உரையை ஆளுநர் வாசித்தாலும், அதனை தமிழ்நாடு அரசுதான் தயாரித்து கொடுக்கும். இதில் நடப்பாணடில் அமல்படுத்தப்பட உள்ள திட்டங்கள், அரசின் சாதனைகள், கோட்பாடுகள் போன்றவை இடம்பெற்றிருக்கும். இந்த உரையுடன் முதல் நாள் கூட்டத்தொடர் முடிந்துவிடும்.
அடுத்த நாள் இரங்கல் கூட்டம் நடத்தப்படும். இதனையடுத்து நடப்பாண்டின் சட்டமன்றத் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்றும் முடிவெடுக்கப்படும். பின்னர் இரண்டாவது நாளும் அவை ஒத்தி வைக்கப்படும். மூன்றாவது நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் எதிர்க்கட்சியினரும், ஆளும் கட்சி உறுப்பினர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவிப்பார்கள். அதன் பின்னர் இறுதியாக முதலமைச்சர் உரையாற்றுவார். இதுதான் சட்டமன்ற மரபாகும்.

ஆளுநர் உரை
இந்த ஆண்டின் கூட்டத்தொடரின் தொடக்கமே கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முதன் நாளான திங்கட்கிழமை வழக்கம்போல தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டமன்றம் தொடங்கியது. இதனையடுத்து ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார். அப்போது ஆளும் கட்சியின் கூட்டணி கட்சியினர் ஆளுநர் உரைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்ப தொடங்கினர். கடும் எதிர்ப்புக்கு மத்தியில்தான் ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார். 2021ம் ஆண்டு புதியதாக திமுக ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பின்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆனால் இவர் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் மேலெழுந்து வருகின்றன.

அரசியல்
அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் வெளிப்படையாகவே அரசியல் சார்ந்த கருத்துக்களை முன்வைத்து வந்தார். இது திமுக தலைவர்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியது. ஆளுநர் பாஜக உறுப்பினர் போலவும், ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போலவும் நடந்துகொள்வதாக திமுக கூட்டணிக்கட்சித் தலைவர்கள் பலர் விமர்சித்தனர். மற்றொரு புறத்தில் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதித்திருப்பதும் இவர் மீது விமர்சனங்கள் எழ முக்கிய காரணமாகும். இந்நிலையில்தான் கடந்த திங்கட்கிழமை நடப்பாண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது. மேற்குறிப்பிட்ட விஷயங்களால் ஏற்கெனவே அதிருப்தியில் இருந்த திமுக கூட்டணிக்கட்சிகள் ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு அவையை விட்டு வெளிநடப்பு செய்தன.

மரபு
மறுபுறம் அவைக்கு உள்ளே ஆளுநர் தனது உரையை வாசித்து முடித்தார். இதன் தமிழாக்கத்தை அவை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இத்துடன் தேசிய கீதம் இசைத்து அவை முடிவுற்றிருக்க வேண்டும். ஆனால் இங்குதான் பஞ்சாயத்து வெடித்தது. அப்பாவு பேசி முடித்தவுடன் எதிர்பாராத விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேச தொடங்கிவிட்டார். அதாவது, ஆளுநர் வாசித்த உரையில் சில விஷயங்களை ஆளுநர் தவிர்த்துள்ளதாகவும், சில விஷயங்கள் தானாக சேர்த்து பேசியிருப்பதாகவும் கூறினார். பின்னர் ஆளுநர் தானாக பேசிய வார்த்தைகள் அவை குறிப்பில் இடம் பெறாது என்று கூறி தீர்மானத்தை முன்மொழிந்தார்.

சர்ச்சை
இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை எதிர்பார்க்காத ஆளுநர் உடனடியாக அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். அதன் பின்னர் அதிமுக வெளிநடப்பு செய்தது. ஆளுநரை தமிழ்நாடு அரசு அவமானப்படுத்திவிட்டதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்தார். ஆனால் சட்டமன்ற மரபுபடி தமிழ்நாடு அரசு எழுதி கொடுக்கும் வாக்கியத்தை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும். அவருக்கு இருக்கும் அரசியல் கருத்துக்களை இதில் தினிக்கக்கூடாது. ஆனால் நடப்பு கூட்டத்தொடரில் ஆளுநர் மாற்றி வாசித்ததால் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படவும் செய்தது.

முதலமைச்சர் உரை
இந்நிலையில் சட்டமன்றத்தின் மூன்றாவது நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்குகிறது. இது நாளை வரை நடைபெறும். இந்த இரு நாட்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது விமர்சனங்களை பதிவு செய்வார்கள். இதில், சட்டம் ஒழுங்கு, பொங்கல் பரிசு, செவிலியர் போராட்டம் போன்றவற்றை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து இறுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவர்களின் விமர்சனத்திற்கு விளக்கமளித்து பேசுவார். இதன் பின்னர் 13ம் தேதியுடன் கூட்டம் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications