தூக்கி எறியப்பட்ட ஓபிஎஸ்! ’நிகழ்கால பரதனுக்கு’ வந்த சோதனை! பட்டாசு வெடித்துக் கொண்டாடும் ர.ர.க்கள்!
சென்னை : அதிமுக ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளிலிருந்து முன்னாள் முதல்வரான ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நாளிதழ்களில் கொடுக்கப்பட்ட படம் ஒன்றை அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்று இருந்த விதிமுறை அதிமுக பொதுக்குழுவில் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஓ.பன்னீர்செல்வத்தின் பலத்த எதிர்ப்பை மீறி எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானத்தை நத்தம் விஸ்வநாதன் கொண்டுவந்த நிலையில், அது பொதுக்குழுவால் நிறைவேற்றப்பட்டு திமுக ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளிலிருந்து முன்னாள் முதல்வரான ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளார்.

இபிஎஸ் தரப்பு உற்சாகம்
இந்நிலையில் கோவையில் ஈபி.எஸ் தரப்பினர் ,ஓபிஎஸ் புகைப்படங்களை கிழித்தும்,பட்டாசுகள் வெடித்தும்,இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒ.பி.எஸ் புகைப்படம் அகற்றம் செய்தும், புகைப்படங்களை கிழித்தும் ஒ.பி.எஸ்க்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி ஈபிஎஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு
கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகவும் எடப்பாடி தரப்பு நிர்வாகிகள் முழக்கமிட்டு வருகின்றனர். குறிப்பாக சேலம், சென்னை, திண்டுக்கல், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வரும் நிலையில், பொது இடங்களில் ஓபிஎஸ் தரப்பினர் அமைதி காத்து வருகின்றனர்.

ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் அதிருப்தி
அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நாளிதழ்களில் கொடுக்கப்பட்ட படம் ஒன்றை அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதில் "விசுவாசத்தில் நிகழ்கால பரதன் என்ற தலைப்பில் துணை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீ ர்செல்வத்தின் விசுவாசம் பற்றி முழு பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் 2001, 2014-ம் ஆண்டுகளில் முதலமைச்சராக பதவியேற்ற ஓபிஎஸ் மீண்டும் அந்த பதவியை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தது நினைவு கூறப்பட்டுள்ளது.

நிகழ்கால பரதன்
அதேபோல் 2016-ல் 3ஆம் முறையாக முதலமைச்சராக இருந்த போது மக்களின் ஆதரவு இருந்த போது கட்சி தலைமை நிர்வாகிகள் வேண்டுகோளுக்கு இணங்க பதவியை ஓபிஎஸ் விட்டுக்கொடுத்ததாக விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.ராமர் வனவாசம் சென்ற போது பரதனிடம் ஒப்படைக்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தை மீண்டும் ராமரிடமே ஒப்படைத்ததை சுட்டிக்காட்டி ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா புகழ்ந்ததாகவும், ஆனால் தற்போது அவரையே கட்சியை விட்டே இபிஎஸ் விரட்டியது தவறு என பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications