21 மொழிகளில் தந்தை பெரியார் சிந்தனை தொகுப்புகள்... தமிழக பட்ஜெட் அறிவிப்புக்கு குவியும் பாராட்டுகள்!
சென்னை: தந்தை பெரியார் சிந்தனை தொகுப்புகள் ரூ5 கோடி செலவில் 21 இந்திய, உலக மொழிகளில் வெளியிடப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இது திராவிடன் மாடல் அரசு என்பதை இது ஒன்றே நிரூபிக்கும் என்கின்றனர் பெரியார் ஆதரவாளர்கள்.
தமிழக சட்டசபையில் நடப்பாண்டு பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ் மொழி வளர்ச்சி, கல்வியை தொடருவதற்கான நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றன.

பெரியார் சிந்தனை தொகுப்பு
மேலும் தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்திடவும், பகுத்தறிவைப் பரப்பிடவும், பெண்ணடிமைத்தனத்தைஒழித்திடவும் தம் கடைசி மூச்சு இருக்கும்வரை அயராது உழைத்தவர் தந்தை பெரியார். அவரின் சிந்தனைகளும் எழுத்துக்களும் காலத்தை வென்று இன்றும் ஒளிர்கின்றன. தனித்துவமிக்க அவரது எழுத்துகளை எட்டுத்திக்கும் எடுத்துச் சென்று, அவரது முற்போக்குச் சிந்தனையால் அனைவரையும் பயனடையச் செய்வது இந்த அரசின் கடமையாகும்.இதனை நிறைவேற்றும் விதமாக, உரிய அறிஞர் குழுவின் பரிந்துரைகளின்படி, பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு, 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாகவும் வெளியிடப்படும். இப்பணிகள் ஐந்து கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என்றும் யாரும் எதிர்பாராத அறிவிப்பையும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.

குவியும் பாராட்டுகள்
தமிழக அரசே தந்தை பெரியார் சிந்தனைகளை தொகுத்து இந்திய, உலக மொழிகளில் வெளியிடும் என்கிற இந்த அறிவிப்புக்கு சமுக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இது திராவிடன் மாடல் அரசு; திராவிடன் பட்ஜெட் என சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டு பதிவிடப்பட்டு வருகின்றன.

முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு
பெரியாரியலாளர் காட்டாறு அதி அசுரன் தமது சமூக வலைதளப் பக்கத்தில், எங்களது வாழ்நாள் இறுதிவரை செய்ய வேண்டிய பணியாகத் திட்டமிட்டது இந்தப் பணியைத்தான். வரும் ஏப்ரல் 14 ல் வெளியிட முதற்கட்டமாக 2 இலட்ச ரூபாய்க்கு முயற்சி செய்து வந்தோம். இனி எங்களுக்கு இந்த வேலையே இல்லை. அடுத்த வேலைத் திட்டத்திற்கு நாங்கள் போகிறோம். அதிலும் தலைவர் ஸ்டாலின் முந்திவிடுவார் என்றே நம்புகிறோம். தனிப்பட்ட முறையில் எங்களுக்குப் பல இலட்ச ரூபாய்களையும், பல ஆண்டு உழைப்பையும் மிச்சப் படுத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின். தனி வாழ்விலும், பொது வாழ்விலும் ஏராளமான இயக்கவாதிகளின் வேலைத்திட்டங்களை மாற்றி அமைத்திட்ட அசுரகுலத் தலைவன், திராவிடர் இன விடுதலைப் போராளி மு.க.ஸ்டாலின் வாழ்க! வாழ்க!!

தமிழக அரசின் புதிய புரட்சி
மக்கள் இயக்கங்களாக இயங்கும் அமைப்புகள், தேர்தல் அரசியலில் வென்ற அரசியல் கட்சிகளையும், அரசுகளையும் இயக்கும் என்பதே சமுதாய யதார்த்தம். அதையும் தலைகீழாக உடைத்துப்போட்டு, ஒரு அரசு இயக்கங்களின் வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதும், இயக்கங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதும் இந்திய அரசியலும், அரசுகளும் கண்டிராத புரட்சி எனவும் பதிவிட்டுள்ளார். இதேபோல ஏராளமான பெரியார் இயக்க ஆதரவாளர்களும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications