அடுத்தடுத்து ஷாக்! மக்களை கசக்கிப் பிழியாதீங்க! தமிழக அரசுக்கு பாமக ராமதாஸ் விடுத்த கோரிக்கை!
சென்னை : மின்சார கட்டணத்தை ஆண்டுக்கு 6% உயர்த்துவது மக்களை கசக்கிப் பிழியும் செயலாகும் எனவும், தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களுக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் சுமார் 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயுத தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின்சார கட்டணத்தை ஆண்டுக்கு 6% உயர்த்துவது மக்களை கசக்கிப் பிழியும் செயலாகும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாமக நிறுவனர்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்," தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களுக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நடப்பாண்டில் 52% வரை மின்கட்டண உயர்வை அறிவித்துள்ள வாரியம், இனி மின்சாரக் கட்டணத்தை ஆண்டுக்கு 6% உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது!

மின்சார வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது அறிவித்துள்ள மின் கட்டண உயர்விலிருந்து மக்கள் மீண்டு வரவே பல ஆண்டுகள் ஆகும். அவர்கள் மீது ஆண்டுக்கு ஆண்டு மின்சார கட்டண சுமை சுமத்தப்பட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் வாழவே முடியாத நிலை உருவாகி விடும்!

ஆண்டுக்கு 6% உயர்வு
தமிழ்நாட்டில் 90% மக்களின் வருமானம் ஆண்டுக்கு 6% உயர்வதில்லை; மின்சார உற்பத்திச் செலவும் ஆண்டுக்கு 6% உயர்வதில்லை. அவ்வாறு இருக்கும் போது நுகர்வோர் விலைக் குறியீட்டை காரணம் காட்டி மின்சார கட்டணத்தை ஆண்டுக்கு 6% உயர்த்துவது மக்களை கசக்கிப் பிழியும் செயலாகும்!

கைவிட வேண்டும்
நுகர்வோர் விலைக்குறியீடு என்பது சந்தை நிலவரத்தை மதிப்பிடுவதற்கான குறியீடு ஆகும். அதை மின்சாரக் கட்டணத்திற்கும் பொருத்த மின்வாரியம் லாபநோக்கம் கொண்ட கார்ப்பரேட் நிறுவனம் அல்ல. எனவே, ஆண்டு தோறும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்!" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications