கரூர் சம்பவம்: கையெழுத்து போடச் சொல்லி போலீஸ் மிரட்டி இருக்காங்க.. சிபிஐ இடம் தவெக அடுக்கிய ஆதாரம்
சென்னை: விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன் தினம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரமாக சமர்ப்பித்ததாக சொல்லப்படுகிறது. அதாவது, கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மிரட்டி முன்தேதியிட்டு காவல்துறை அதிகாரிகள் கையெழுத்து பெற்றதாகவும் தவெக தரப்பில் புகார் அளித்ததாக கூறப்படுகின்றன.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ இந்த விசாரணையை நடத்தி வருகிறது. கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் டெல்லியில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விஜய்யிடம் 7 மணி நேரம் விசாரணை
அதேபோல, கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்ட காவல் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. தவெக தலைவரும் நடிகருமான விஜயிடம் நேற்று முன்தினம் விசாரணை நடைபெற்றது. விஜயிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதுபோல நேற்று முன்தினம் காவல் துறை அதிகாரிகள் டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் நிர்மல் குமார் ஜோஷி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையை 2, 3 நாட்கள் தொடருவதாக சிபிஐ அதிகாரிகள் கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் பொங்கல் பண்டிகை இருப்பதால், அதற்கு பிறகு விசாரணைக்கு ஒத்துழைப்பதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் பொங்கலுக்கு பிறகு விசாரணையை தொடருவதாக தெரிவித்தனர். அத்துடன் பொங்கலுக்கு பிறகு 19 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என சொல்லி சம்மனை நேரிலேயே கொடுத்துள்ளனர்.
குடும்பத்தினரை மிரட்டி கையெழுத்து
இதற்கிடையே, சிபிஐ-யிடம் தவெக தரப்பில் பல்வேறு புகார்கள் முன்வைத்ததாக சொல்லப்படுகிறது. அதாவது, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மிரட்டி முன்தேதியிட்டு காவல்துறை அதிகாரிகள் கையெழுத்து பெற்றதாகவும் புகார் அளித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
தங்கள் சம்மதத்துடனேயே அவசர அவசரமாக பிரேத பரிசோதனை நடைபெற்றதாக தவெக குற்றச்சாட்டு வைத்து இருக்கிறதாம். இது தொடர்பான ஆதாரங்களையும் சிபிஐ-யிடம் தவெக அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது. சிபிஐ விசாரணை நேற்று முன்தினம் முடிந்த நிலையில், விஜய் நேற்று காலை வரை டெல்லியிலேயே தங்கியிருந்தார்.
நிர்மல் குமார் விளக்கம்
டெல்லியில் இருந்து நேற்று காலைதான் தனியார் விமானம் மூலமாக சென்னை வந்தார். சென்னை வந்த பிறகு தவெக நிர்வாகி CTR நிர்மல் குமார் பேட்டி அளித்தார். அப்போதும் இதேபோன்ற கருத்தை CTR நிர்மல் கூறினார். நிர்மல் குமார் கூறுகையில், "டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தோம்.

தற்போது விஜயின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' குறித்த ஆலோசனை கூட்டம், கட்சி தொடர்பான கூட்டம் இருப்பதால் வேறு ஒரு நாளில் மீண்டும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராவார். அதற்கான தேதியை சிபிஐ அதிகாரிகள் உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்கள்.
உடற்கூறு ஆய்வு சரியாக நடத்தப்படவில்லை
கரூர் சம்பவத்தின்போது 607 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்ததாக முதல்வர் கூறி இருந்தார். ஆனால் 500 போலீசார் இருந்ததாக காவல் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறுகிறார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு பல தவறுகள் செய்துள்ளது. உடற்கூறு ஆய்வு சரியாக நடத்தப்படவில்லை. இறந்தவர்கள் உடலை அவர்களது உறவினர்கள் மூலம் முன்தேதியிட்டு கையெழுத்து வாங்கியதாக சிபிஐ-யிடம் ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்துள்ளோம்" என்றார். சிபிஐ முன்வைத்து இருக்கக்கூடிய இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications