பிரதான் மந்திரி பயிர் காப்பீடு திட்டம்.. இன்றே கடைசி தேதி.. விவசாயிகள் PMFBY-ல் இணைவதற்கான ஆவணங்கள்?
சென்னை: பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு இன்று ஜூலை 31 தான் கடைசி தேதி என்பதால், உடனடியாக காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் கடந்த 2016ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.. பிரீமியத்தின் அடிப்படையில் உலக அளவில் 3வது பெரிய காப்பீட்டு திட்டமாக இது கருதப்படுகிறது.

பயிர் இழப்பு: எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் பயிர் இழப்பு அல்லது சேதத்திலிருந்து விவசாயிகளை இது பாதுகாக்கிறது. பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளின் வருமானத்தை நிலைப்படுத்த நிதியுதவி அளிப்பது உட்பட திட்டத்தின் நோக்கங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது.,,
அனைத்து விவசாயிகளுக்கும் இந்த திட்டத்தை தன்னார்வமாக மாற்றுவதன் மூலம் அதிக விவசாயிகளை இதில் பங்கெடுக்க வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது... அந்தவகையில், இதுவரை 56.80 கோடிக்கும் மேலான விவசாயிகளின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிரதம மந்திரி பயிர்க்காப்பீடு: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு உதவி வேளாண் அலுவலர்களால் பயிர் அறுவடைப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. பிறகு, சராசரி விளைச்சல் விவரங்கள் கணக்கிடப்பட்டு, வறட்சி, வெள்ளம், புயல், போன்ற இயற்கை சீற்ற பாதிப்புகள் ஏற்படும்போதும், பூச்சி மற்றும் நோயினால் பயிர்களுக்கு சேதம் ஏற்படும்போதும் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.
குறிப்பாக, விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில் வறட்சி, வெள்ளம், புயல், சூறாவளி, அதிக பரப்பில் பூச்சி நோய் தாக்குதல், நிலச்சரிவு போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஏற்ப, பயிர் அறுவடை பரிசோதனை அடிப்படையில் இந்த காப்பீட்டு தொகை தரப்படுகிறது.
நெல் பயிர்கள்: ஒருவேளை, நெல் பயிர்களை விதைக்க இயலாத சூழ்நிலை காரணிகளுக்கு, விஏஓவிடம் விதைப்பு சான்றிதழ் பெற்று விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற முடியும்..
இந்த திட்டத்தில், அறிவிக்கை செய்யப்பட்ட வருவாய் கிராமங்களில் மற்றும் குறு வட்டாரங்களில் அறிவிக்கை செய்த பயிர்களை பயிரிடும் விவசாயிகள், குத்தகை விவசாயிகள் இணைய தகுதியானவர்கள். வங்கியில் பயிர் கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்து கொள்ளலாம்.
கடைசி நாள்: அந்தவகையில், காப்பீடு செய்ய இன்றே கடைசி நாளாகும்.. 2024-ம் ஆண்டில் குறுவை சிறப்பு பருவத்தில் நெல்-1 பயிருக்கு தஞ்சை மாவட்டத்தில் 775 வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பயிர் காப்பீட்டு தொகை ஏக்கருக்கு ரூ.36 ஆயிரத்து 500 ஆகும். விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.730 ஆகும். எனவே, இன்றைக்குள் பயிர்க்காப்பீடு செய்து கொள்ளலாம்.. இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின்பேரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
எப்படி இணைவது: கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் போன்றவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
காப்பீடு செய்யும்போது தாங்கள் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண், பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியவை சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து காப்பீடு செய்த பின் அதற்கான ரசீதை பெற்று கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications