தமிழகத்தில் அதிகம் பேசப்படும் இரண்டு அமைச்சர்கள் பிடிஆர், சேகர்பாபு.. என்ன காரணம்?
சென்னை: தமிழக அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்கள் அதிகம் பேசப்படுகிறார்கள். ஒருவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மற்றொருவர் சேகர்பாபு, ஒருவர் நிதித்துறை தன் வசம் வைத்துள்ளார். இன்னொரு இந்து அறநிலையத்துறையை தன் வசம் வைத்துள்ளார். இவரும் அதிகம் பேசப்பட என்னென்ன காரணங்கள் என்பதை இப்போது பார்ப்போம்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த மே 7ம் தேதி பதவியேற்றது. கடந்த நான்கரை மாதங்களில் மிகவும் அதிகப்படியான எதிர்பார்ப்பையும், பரபரப்பை ஏற்படுத்திய துறைகள் என்றால் அது நிதித்துறை மற்றொன்று இந்து அறநிலையத்துறை.
என்ன காரணம் என்றால் கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட கடன்கள் மற்றும் இழப்புகள் குறித்து சிஏஜி அறிக்கையை வெளியிட்டு அதிரவைத்தார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். இதேபோல் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து அகற்றி பலரிடமும் பேசுபொருள் ஆனார் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.

பாஜக பிரச்சாரம்
இந்த இரண்டு விஷயங்களை தாண்டி, பிடிஆர், சேகர்பாபு இருவருமே பாஜகவின் பிரச்சாரங்களுக்கு செக் வைக்கும் வகையில் தீவிரமான பதிலடியை செயல்கள் மூலம் தருகிறார்கள். அதுவே இருவரும் பரபரப்பாக பேசப்பட முக்கிய காரணமாக உள்ளது. நிதி நிலை சீர்திருத்தங்களும். இந்து அறநிலையத்துறை சீர்திருத்தங்களும் இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு வெளிப்படையாக உள்ளது காரணமாகும்.

கோயில் சொத்துக்கள்
முதலில் இந்து அறநிலையத்துறையை பற்றி பார்ப்போம். இந்த துறையின் அமைச்சரான சேகர்பாபு பதவியேற்ற உடனேயே கோயில்களின் சொத்துக்கள் எவ்வளவு என்பதை இணையதளத்தில் வெளிப்படையாக பதிவேற்றம் செய்யப்படும் என்றார். இதேபோல் கோயில் வரவு செலவு கணக்கும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் கோயிலின் பழங்கால ஆவணங்களை அழியாமல் டிஜிட்டலில் காக்கப்படும் என்றார். இந்த மூன்றையுமே செய்தார் சேகர் பாபு,.

கோயில் சொத்து
இதுதவிர உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலம், வடபழனி முருகன்கோயிலுக்கு சொந்தமான நிலம் உள்பட தமிழகத்தின் பிரபலமான பல கோயில்களின் சொத்துக்களை மீட்டு வருகிறார். மேலும் கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா தரவே முடியாது என்பதில் உறுதியாக உள்ளார்.

ஸ்டாலின் பாராட்டு
மேலும் அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகும் திட்டம், தமிழில் பூஜை என அடுத்தடுத்து அதிரடி காட்டினார். மேலும் ஒருகால பூஜையில் ஈடுபடும் ஏழை பூசாரிகளுக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்தார். அதை அடுத்த சில நாட்களிலேயே முதல்வர் கையால் நடைமுறைப்படுத்தி பெயரும் வாங்கினார். இதற்காக சேகர்பாபுவை முதல்வர் ஸ்டாலினே வெகுவாக பாராட்டினார். பாஜகவின் பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சேகர்பாபுவின் செயல்பாடுகள் உள்ளதால் அவர் அதிகம் பேசப்படுகிறார்.

நிதிநிலை
இன்னொரு துறை நிதித்துறை. நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிகம் பேசப்பட முக்கிய காரணம். கடந்த அதிமுக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் ஊழல் மற்றும் இழப்புகளை சிஏஜி அறிக்கை மூலம் தெரிவித்தார். அதுமட்டுமின்றி தமிழகத்திற்கு தராமல் இழுத்தடிக்கப்படும் ஜிஎஸ்டி நிலுவை தொகையை கேட்டு மத்திய அரசுடன் கடும் சண்டை போட்டு வருகிறார். இதுதவிர, பெட்ரோல் டீசல் விலை விவகாரத்தில் மத்திய பாஜக அரசை புள்ளி விவரத்துடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஒவ்வொரு முறை பேசும் போது, பாஜகவிற்கு எதிராக புள்ளி விவரங்க்ளை அடுக்குகிறார். குறிப்பாக இவர் வடநாட்டு ஆங்கில ஊடகங்களுக்கு அடிக்கடி மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து பேட்டி அளிக்கிறார்.

பாஜக
இதனால் கோபம் அடைந்த பாஜக, பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக எதிர்வினைஆற்றி வருகிறது. அதற்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் பதிலடி கொடுக்கிறார். தன்னை பற்றி பிரபலமானவர்கள் யார் விமர்சனம் உடனே பதிலடி கொடுக்கிறார். அதிமுகவினர், பாஜகவினர் பலரும் இவரது பதிலடிக்கு தப்பவில்லை. ஏன் ஆளும் கட்சியினரே பிடிஆர் அளிக்கும் பதிலடியால் சற்று திகைத்துபோய் உள்ளார்கள் என்றால், அதை மறுக்க இயலாது.

என்ன காரணம்
நிதித்துறையில் பிடிஆர் செயல்பாடுகள் என்று பார்த்தால், சமூக நலத்திட்டங்களை உண்மையிலேயே ஏழைகளுக்கு மட்டுமே போய் சேர வேண்டும் என்று விரும்புகிறார். நிதியை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். பணக்கார்கள் ஏழைகளுக்கான சமூக நலத்திட்டங்கள் மூலம் பயன்பெறுவதை இவர் விரும்பவில்லை என்பது தெரிகிறது. பிடிஆர், சேகர் பாபு ஆகிய இரண்டு அமைச்சர்கள் மட்டுமே அதிகம் பேசப்பட காரணம், இருவருமே பாஜகவிற்கு அதிக பதிலடி கொடுப்பது தான். ஊடகங்களும் அதிகம் முககியத்துவம் கொடுப்பதால் அதிகம் பேசப்படுகிறார்கள். இதேபோல் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பத்திரப்பதிவு துறை அமைச்சர் ப மூர்த்தி உள்பட மற்ற அமைச்சர்களும் அதிகப்படியான கவனத்தை பெறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications