ரூ.200 கோடியில் இல்லம் தேடி கல்வி திட்டம்! அதிகாரிகளை அலறவிட்ட செய்தியாளர்கள்! நடந்தது என்ன?
சென்னை: பள்ளியில் மாலை வரை படிக்கும் மாணவர்களுக்கு மாலையில் அதே கல்வியை கற்பிக்க வேண்டிய தேவை என்ன? பள்ளியில் காலையில் இருந்து மாலை வரை ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தின் மூலம் தடுக்கப்படாத இடைநிற்றல், மாலையில் அந்த ஊர் இளைஞர்கள் நடத்தும் பாடத்தால் குறைந்துவிடுமா என்று செய்தியாளர் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
கடந்த ஒரு மாத காலமாகவே இல்லம் தேடி கல்வித்திட்டத்திற்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பதற்கு முதல் நாள் சென்னையில் உள்ள அனைத்து ஊடகங்களிலும் கல்விப் பிரிவு செய்தியாளர்களாக இருப்பவர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்திக்க இருப்பதாக அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர்.
மேலும் செய்தியாளர்களுடன் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதால் அதில் கலந்து கொள்ள இருப்பவர்கள் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளும்படி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

பள்ளி கல்விதுறை
இதன்படி சுமார் 50 செய்தியாளர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் உடனான இல்லம் தேடி கல்வித்திட்டம் தொடர்பான ஆலோசனையில் பங்கேற்க பதிவு செய்தனர். பதிவு செய்தது போலவே செவ்வாயன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 50 செய்தியாளர்களும் ஆஜர் ஆகியிருந்தனர். முதலில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா மற்றும் சர்வசிக்சா அபியான் திட்ட இயக்குனர் சுதன் ஆகியோர் கூட்டத்திற்கு வருகை தந்தனர்.

இடைநிற்றலை எப்படி குறைக்கும்
இதனை அடுத்து கூட்டம் தொடங்கிய போதே, செய்தியாளர்கள் அனைவருக்கும் பேச வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும், அதிகாரிகள் கூறினர். மேலும் இந்த கூட்டம் மிக நீண்ட நேரம் நடைபெற உள்ளதாகவும் எனவே செய்தியாளர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதனை அடுத்து பேச ஆரம்பித்த பிரபல தொலைக்காட்சியின் செய்தியாளர் ஒருவர், பள்ளியில் மாலை வரை படிக்கும் மாணவர்களுக்கு மாலையில் அதே கல்வியை கற்பிக்க வேண்டிய தேவை என்ன? இல்லம் தேடி கல்வித் திட்டம் எப்படி மாணவர்களின் இடைநிற்றலை குறைக்கும் என ஆரம்பித்து வைத்தார்.

ஊர் இளைஞர்கள்
ஆனால் இதற்கு அதிகாரிகள் சொன்ன பதில் திருப்தி அளிக்காமல், அந்த செய்தியாளர் துணை கேள்வி கேட்க, ஒருவருக்கு ஒரு கேள்வி என்று ஆஃப் செய்தனர் அதிகாரிகள். இப்படியாக செய்தியாளர்கள் இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது பற்றியும், குழப்பம் நிலவுவது பற்றியும் கேள்வி எழுப்பினர். மேலும் பள்ளியில் காலையில் இருந்து மாலை வரை ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தின் மூலம் தடுக்கப்படாத இடைநிற்றல், மாலையில் அந்த ஊர் இளைஞர்கள் நடத்தும் பாடத்தால் குறைந்துவிடுமா என்றும் கேள்விகள் நீண்டன.

தனியாக 200 கோடி ஏன்
ஒரு கட்டத்தில் எழுந்து பேசிய பிரபல நாளிதழ் செய்தியாளர், தமிழகத்தில் எந்த துறைக்கும் இல்லாமல் பள்ளிக்கல்வித்துறைக்குத்தான் சுமார் 32ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த 32ஆயிரம் கோடி ரூபாயை வைத்து மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க முடியாதா? எதற்காக இப்படி தனியாக 200 கோடி ரூபாய்? என அந்த செய்தியாளர் கேள்வி கேட்க, அதிகாரிகள் கூட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளனர். ஆனால் விடாத அந்த செய்தியாளர், தற்போதைய முதல்வர் எதிர்கட்சி தலைவராக இருந்த போது கமிசன், கரெப்சன், கலெக்சன் என்பார், அப்படித்தான் இந்த 200 கோடி ரூபாயும் போகப்போகிறது என செய்தியாளர்கள் முணுமுணுத்தனர். இதை தொடர்ந்து கூட்டத்தை முடித்துவிட்டு அதிகாரிகள் புறப்பட்டனர்.

வாட்ஸ்அப் குரூப்
இதனிடையே கூட்டத்தில் பங்கேற்ற செய்தியாளர்களுக்கு சிக்கன் வறுவல், கட்லட், குலாப் ஜாமூன் என ஹைடெக் ஸ்னாக்ஸ் வழங்கப்பட்டது. அதனை சாப்பிட்ட பிறகு தங்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதாக செய்தியாளர்கள் அனைவரும் தங்களுக்கான வாட்ஸ்ஆப் குரூப்பில் பகிர, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பதறிப்போய்விட்டனர். உடனடியாக இந்த தகவலை அமைச்சர் அன்பில் மகேஷ் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் கூறி, செய்தியாளர்களை சமாளித்து வருகின்றனர்












Click it and Unblock the Notifications