பாஜகவிலிருந்து வந்த பாஸிட்டிவ் சிக்னல்.. சூறாவளி சுற்றுப் பயணம்.. சசிகலா அமைதியின் அதிரடி பின்னணி!
சென்னை: பெங்களூர் சிறையிலிருந்து விடுதலையாகி சென்னை வந்தது முதல், யாரிடமும் பேசாமல், வெளியே தலையை காட்டாமல், அமைதி காத்து வருகிறார் சசிகலா.
சென்னை தி நகரில் உள்ள தனது அண்ணன் மகள், கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருக்கும் அவர் ஒரு நாள் கூட வெளியே வந்து எட்டிப் பார்க்கவில்லை.
ஆனால் இந்த அமைதியின் பின்னணியில் பெரும் அரசியல் திட்டங்கள் இருப்பதாக கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

அமைதிக்கு காரணம்
சசிகலா அமைதியாக இருப்பதற்கு முக்கிய காரணம் அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய இரண்டு கட்சிகளையும் இணைப்பதில் பாஜக முன்னெடுப்புகளை எடுக்கும் என்று வந்துள்ள சிக்னல்கள்தான்.. இதற்காகத்தான் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவியிடம் நிருபர்கள் இந்த கேள்வியை கேட்டிருந்தனர். ஆனால் அவரும் நேரடியாக எந்த பதிலும் சொல்லவில்லை. அதிமுக விவகாரம் என்பதால் நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது என்று நழுவிக் கொண்டார்.

பாஜக தலைவர்கள் கருத்து
இதுவரை நீங்கள் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால்.. சசிகலாவுக்கு எதிராக பாஜக தலைவர்கள் யாருமே எந்த கருத்தும் சொல்லவில்லை. அதேநேரம் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு படி மேலே போய்.. "எம்ஜிஆருக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு சசிகலாவுக்குதான் கிடைத்தது" என்று அவர் பெங்களூரில் இருந்து சென்னைக்கு காரில் வரும்போது தொண்டர்கள் கொடுத்த வரவேற்பு குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். இதெல்லாம் பாஜக தரப்பில் இருந்து சசிகலாவுக்கு கிடைக்கும் பாசிட்டிவ் சிக்னல்கள்.

பாஜக யோசனை
தேர்தலுக்கு முன்பாக சசிகலாவை அதிமுகவுடன் இணைந்து போக வைத்து விட்டால் கூட்டணியில் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைத்துவிடும் என்று பாஜக தலைவர்கள் பலரும் நினைக்கிறார்கள். சசிகலா சென்னை வந்தபோது தொண்டர்கள் கொடுத்த வரவேற்புதான் அவர்களை இப்படி மாத்தி யோசிக்க வைத்துள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பாஜக எடுத்து வைக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக தான் வீட்டுக்குள்ளேயே காத்துக்கொண்டு இருக்கிறார் சசிகலா என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதரவுகள்
"சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட சில பாஜக தலைவர்கள் சசிகலாவுக்கு கடந்த காலங்களில் கூட ஆதரவு தெரிவித்தது வரலாறு. இப்போது அந்த ஆதரவு வட்டம் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. சமீபத்தில் பேட்டியளித்த டிடிவி தினகரன் கூட பாஜக பற்றி எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைக்காமல் அமைதி காத்து வருகிறார். இவையெல்லாம் திரைமறைவு அரசியல்கள்" என்கிறார் ஒரு மூத்த பத்திரிகையாளர்.

தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம்
ஒருவேளை சசிகலா மற்றும் அதிமுக ஆகியவற்றை இணைக்க முடியாமல் போனால், அதாவது, இணைப்புக்கு அதிமுகவில் உள்ள மேலிடத் தலைவர்கள் சம்மதிக்காவிட்டால், தமிழகம் முழுக்க "நீதிகேட்டு" சுற்றுப்பயணம் என்ற பெயரில், சசிகலா சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தெரிகிறது. டெல்டா மாவட்டங்களில் கணிசமாக உள்ள அதிமுக ஆதரவு வாக்குகளை அங்குள்ள சமுதாய தலைவர்கள் மூலமாக தன்பக்கம் இழுப்பதற்கு இந்த சுற்றுப்பயணம் சசிகலாவுக்கு உதவக்கூடும். மதுரையை சுற்றியுள்ள மாவட்டங்களில் தனக்கு உள்ள ஆதரவு வட்ட வாக்குகளை அதிமுகவுக்கு செல்ல விடாமல் தடுப்பதற்கு சுற்றுப்பயணம் சசிகலாவுக்கு உதவும்.

உருக்கமாக பேச முடிவு
அதே நேரம் மேற்கு மண்டலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிக அதிகமாக சாதகமாக உள்ள பகுதி என்பதால், அங்கு சுற்றுப் பயண பிரச்சாரம் செய்யும்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக எந்த ஒரு குற்றச்சாட்டையும் சசிகலா சுமத்த மாட்டார் என்று தெரிகிறது. அதற்கு பதிலாக.. உங்கள் பகுதியை சேர்ந்தவரை நம்பி நான் ஆட்சியை ஒப்படைத்து விட்டுச் சென்றேன். அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றியிருக்க வேண்டும் என்று உருக்கமாக பேச உள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலா அடுத்தகட்ட நடவடிக்கை
சசிகலாவின் அடுத்த நடவடிக்கைகள் அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் இணைப்பை பொறுத்தே இருக்கிறது. அவ்வாறு நடக்காத பட்சத்தில் சூறாவளி சுற்றுப்பயணத்தை செய்ய சசிகலா தயாராகிவிட்டார். பெங்களூரிலிருந்து சென்னைக்கு பல மணி நேரம் பயணம் செய்தபோதே, தனக்கு உடல்நிலை தயாராக இருக்கிறது என்பதை உணர்த்திவிட்டார். எனவே தமிழக சுற்றுப் பயணம் அவருக்கு பெரிய கஷ்டமாக இருக்காது. அதற்காகத்தான் அமைதியாக ஓய்வெடுத்து வருகிறார் என்கிறார்கள் அமமுக வட்டாரத்தினர்.