நானெல்லாம் அப்பவே அப்படி! கொஞ்ச நாள் பார்ப்பேன்.. சரியில்லை என்றால்.. எடப்பாடிக்கு சசிகலா எச்சரிக்கை
சென்னை: நான் அப்பவே அப்படி செய்த போது இப்போது செய்ய முடியாதா என எடப்பாடி பழனிசாமிக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கும் வகையில் சசிகலா பேசியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர். மறைந்தபோது இப்படித்தான் மந்திரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துகொண்டு அரசியல் செய்தார்கள் என்றும் ஆனால் அதனையே தூள் தூளாக நொறுக்கிய தனக்கு இப்போது அதை செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகிவிடப் போகிறது எனக் கூறியிருக்கிறார்.
மேலும், கொஞ்ச நாள் பார்ப்பேன், சரியில்லை என்றால் என பீடிகை போட்டும் சசிகலா அதிமுக 51ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேசியிருக்கிறார்.

அதிமுக பொன்விழா
அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் 51ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.இல்லத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட சசிகலா, எம்.ஜி.ஆர். மறைந்தபோது அப்போது இருந்த அமைச்சர்கள் ஜெயலலிதாவுக்கு கொடுத்த குடைச்சல்கள் பற்றியும் அதனை தாம் முறியடித்தது பற்றியும் விரிவாக பேசினார். அப்போதே அப்படி செய்த தனக்கு இப்போது அது போல் செய்யத் தெரியாமல் இல்லை என்றும் கொஞ்ச நாள் பார்ப்பேன், சரியில்லை என்றால் எனவும் பீடிகை போட்டார்.

நிச்சயம் செய்வேன்
எம்.ஜி.ஆர். இல்லத்தில் நின்று கொண்டு சொல்கிறேன் நிச்சயம் அதிமுகவை மீட்போம் என்றும் தனக்கு தொண்டர்கள் துணை மட்டும் போதும் என்றும் சசிகலா கூறினார். இதனிடையே எம்.ஜி.ஆர். மறைந்த போது ராமாவரம் தோட்டத்துக்கு வந்த ஜெயலலிதாவை அப்போது இருந்த அமைச்சர்கள் உள்ளே விட மறுத்ததாகவும் இதனை பார்த்த தாம் கார் ஓட்டுநரிடம் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே செல் எனக் கூறியதாகவும் தெரிவித்தார்.

தலைமைக்கழகம்
இதைப்பார்த்த காவல்துறை உயரதிகாரிகள் பிரச்சனை வேண்டாம் எனக் கூறி தோட்டத்து கதவை திறந்துவிட்டார்கள் என்றும் சசிகலா தெரிவித்தார். இவர் இவ்வாறு பேசியதை வைத்து பார்த்தால் விரைவில் அதிமுக தலைமைக்கழகத்திற்கு செல்ல திட்டமிட்டிருக்கிறாரோ எனத் தோன்றுகிறது. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமைக் கழகத்திற்கு சென்ற விவகாரம் அடிதடி மண்டை உடைப்பு என பெரும் பஞ்சாயத்தானது.

அமமுக நிர்வாகிகள்
சசிகலா கலந்துகொண்ட அதிமுக 51ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அமமுக நிர்வாகிகள் யாரும் தலைகாட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சசிகலாவை ஒரு போட்டியாளராகவே எடப்பாடி பழனிசாமி கருதவில்லை என்பதும் ஓ.பி.எஸ்., டிடிவி ஆகிய இருவரை பற்றி மட்டுமே அவர் அடிக்கடி ஆலோசனை நடத்துவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications