அரையாண்டு விடுமுறை..கிறிஸ்துமஸ்..சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்..சிறப்பு பேருந்து இயக்கம்
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக 600 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. அரையாண்டு விடுமுறை, புத்தாண்டு விடுமுறையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக நாளையும், நாளை மறுநாளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குப் பிறகு இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அதே போல் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறையும் நாளை முதல் விடப்படவுள்ளது.
இந்நிலையில், சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் செல்ல முடிவு செய்துள்ளனர். எனவே பொதுமக்கள் அதிக அளவில் வெளியூர் செல்லக்கூடும் என்பதால் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி வெள்ளிக்கிழமை 300 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படுவதாகவும் மற்றும் சனிக்கிழமையும் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. வெளியூர்களில் இருந்தும் சென்னைக்கு மீண்டும் வருவதற்கும் போதுமான பேருந்துகள் இயக்க தயாராக உள்ளதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சென்னை மாநகர பேருந்துகளின் தகவல்களை மட்டுமே வழங்கி கொண்டிருந்த சென்னை பஸ் செயலி மூலம் இனி அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் வழித்தடம் குறித்தும் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர பேருந்துகளின் நேரம் பயண விவரத்தை அறிந்துகொள்ள கடந்த மே மாதம் சென்னை பஸ் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி மூலம் சென்னை மாநகரப்பேருந்துகளின் வருகை நேரம், வந்து கொண்டிருக்கும் இடம் ஆகியவற்றை செல்போன் வழியாக பொது மக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ் மூலம் பேருந்துகள் எந்த இடத்தில் இருக்கின்றன. அடுத்து எங்கு வரவுள்ளன போன்ற தகவல்கள் எளிதில் கிடைப்பதால் மக்களிடையே பஸ் செயலி வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தற்பொழுது அரசு விரைவு போக்குவரத்துக்கு கழக பேருந்துகள் வரும் இடம், நேரம் குறித்து அறிந்துகொள்ளும் சேவை சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவு போக்குவரத்துக்கு கழகத்தை பொறுத்த வரையில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு தினம்தோறும் ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ் கருவிகள் உதவியோடு டிக்கெட் முன்பதிவுசெய்த பயணிகள் பேருந்து வரும் நேரம் மற்றும் இடம் குறித்து அறிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதன்முலம் தோலைதூர மாவட்டங்களுக்கு இரவில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்புடன் அச்சமின்றி செல்லமுடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ள சேவையில் உள்ள குறைபாடுகள் முழுவதுமாக சரி செய்யப்பட்டு பொங்கலுக்கு முன்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications